நெஞ்சோடு கலந்திடு-அத்தியாயம்-07

....நெஞ்சோடு கலந்திடு....

அத்தியாயம் : 07

அன்றைய நாளின் நினைவில் மனம் இன்றும் கனத்தது...என் பதிலில் அவன் அடிபட்டு நின்ற தோற்றமும்,என்னை வேதனையோடு பார்த்த அவன் விழிகளும் இன்றும் என் கண்களுக்குள் வந்து நின்று கண்ணீரைக் கடனாக வாங்கிக் கொண்டது...

அவனை எந்தளவுக்கு காயப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு அவன் மனதை நான் வார்த்தைகளாலேயே கொன்று புதைத்துள்ளேன்...இப்போது நினைக்கையில் எனக்கே என் மேல் கோபம் கோபமாக வந்தது...அதைத்தவிர அப்போது வேறு வழியும் இருக்கவில்லை
எனக்கு...

ஆனால் இனி அவனை ஒரு விநாடியேனும் கலங்கவிடப் போவதில்லை நான்...இத்தனை வருட வலிகளுக்கும் என்னையே அவனிடம் மருந்தாக ஒப்படைக்க காத்திருக்கிறேன்...என் உள்ளத்தை கொள்ளையடித்தவனிடம் என் மொத்தக் காதலையும் கொட்டிவிடப் போகிறேன்...

நேரம் அதன் போக்கிலேயே கடந்து கொண்டிருக்க அவனுக்கான எனது ஏக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது...அவனுக்கான காத்திருப்பில் மீண்டும் கிடைத்த இடைவெளியில் மனம் பழைய நினைவுகளைச் சுற்றி சிறகடிக்கத் தொடங்கியது...

அன்றைய தினம் என் இறுதி தேர்வு முடிந்து நான் வீட்டிற்கு வரும் போதே எனது தந்தையும் வருணின் தந்தையும் ஹோலில் அமர்ந்து கதைபேசிக் கொண்டிருந்தார்கள்...அவர்களுக்கிடையிலிருந்த ஆழ்ந்த நட்பு தானே எனக்கும் வருணுக்குமான அறிமுகத்தைத் தந்தது...

அவரைக் கண்ட மகிழ்வில் துள்ளிக் குதித்துக் கொண்டே அவரருகே சென்ற நான்,

"வாங்கப்பா...எப்படி இருக்கீங்க..??எப்போ அமெரிக்காவில இருந்து வந்தீங்க..??அம்மாவை கூட்டிட்டு வரலையா...??..."என்று என் கேள்விகளை அடுத்தடுத்து அடுக்கிக் கொண்டே சென்றேன் நான்...

வருணின் அக்கா திருமணமாகி அமெரிக்காவில் குடியேறிவிட்டார்...அவரின் முதற் குழந்தையைப் பார்ப்பதற்காகத்தான் வருணின் அம்மாவும் அப்பாவும் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார்கள்...ஒரு வருடம் கழித்து இன்றுதான் மீண்டும் அவரைப் பார்த்ததால் என்னாலும் என் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை...

என் கேள்விகளில் திக்குமுக்காடிப் போயிருந்தவர் என் ஒவ்வொரு கேள்விகளுக்கும் பதில்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்...

"நான் ரொம்ப நல்லாயிருக்கேன்மா...நேற்று இரவுதான் இங்க வந்தேன்...அம்மா அடுத்த வருசம்தான் வருவாங்க...நானும் ஒரு மாதத்தில மறுபடியும் கிளம்பிருவன்..."

"சரி இப்போ நீ சொல்லு...நீ எப்படி இருக்க...??பரீட்சை எல்லாம் எப்படி பண்ணியிருக்க...??..."

"நான் ரொம்பவே சூப்பரா இருக்கேன்பா...அதைவிட சூப்பரா எல்லா பாடமும் நல்லாவே பண்ணியிருக்கேன்..."

"அதானே நீ எங்க பொண்ணாச்சே..."என்று சிலாகித்துக் கொண்டவர்,என் தலையினை மெதுவாய் வருடிக் கொடுத்தவாறே என் கைகளில் ஓர் பையினைத் தந்தார்...

அதைத் திறந்து பார்க்காமலேயே அவரைக் கேள்வியாய் நோக்கிய நான்,

"என்னப்பா இது...??.."

"இதில இருக்கிற எல்லாமே உனக்குத்தான்மா...உனக்காகவே உன்னோட அம்மாவும் நானும் பார்த்து பார்த்து வாங்கினது...உன்னோட பேவரிட் சொக்லேட்ஸ்ம் அதில இருக்கு..."

அவர்களது அந்த அதீத அன்பில் என் மனம் நெகிழ்ந்தது...எல்லா விதத்திலும் நான் கொடுத்து வைத்தவள் என்றே தோன்றியது எனக்கு...

"அப்போ எங்களுக்கெல்லாம் ஒன்னுமில்லையாடா...??..."என்று வருணின் அப்பாவோடு வம்பு செய்தார் எனது தந்தையார்..

"நான் வயசு போனவங்களுக்கெல்லாம் சொக்லேட்ஸ் கொடுக்குறேலையாக்கும்..."என்று அவர் பதிலுக்கு பதில் சொன்னாலும் அவரிடமும் ஓர் பொதியினைக் கொடுக்கத்தான் செய்தார்..

இருவருக்குமிடையே இருந்த அந்நியோன்யத்தைக் கண்டு வியந்த நான்...அவர்களுக்காய் தேநீர் தயாரிப்பதற்காய் உள்ளே சென்றேன்..ஆனால் வருண் என்ற பெயரினைக் கேட்டதுமே என் கால்கள் அந்த இடத்திலேயே வேரூன்றிக் கொண்டன..

அவனை அதன் பின் நான் பார்த்திருக்கவில்லை...அன்று மாலையே ஊருக்கு கிளம்பிவிட்டான் என்பதையே எனது நண்பி ஒருத்தியின் மூலமாகத்தான் அறிந்து கொண்டேன்...மறைந்திருந்து மற்றவர்கள் கதைப்பதைக் கேட்பது தவறென்று மூளை அறிவுறுத்தினாலும்,அவன் பெயரினைக் கேட்ட பின்பும் என்னால் அங்கிருந்து செல்ல முடியவில்லை..

எனது அப்பாதான் வருணைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்..

"வருண் எப்படிடா இருக்கான்...வெளியூருக்குப் படிக்கப் போனதும் போனான்...அவனைப் பார்க்கவே முடியுதில்லை...??.."

"நீ வேறடா...எங்க கூடயும் அவன் கதைச்சு ரொம்ப நாள் ஆகுது...அப்படியே கதைச்சாலும் ஒன்றிரண்டு வார்த்தைகளோட பேச்சை முடிச்சுக்குவான்...நேரடியா இங்கேயே வந்ததில அவனைப் பார்க்கவும் போகல...நாளைக்கு அவனைப் போய் பார்த்திட்டுத்தான் மறுவேலை...

"நீயும் ப்ரியா இருந்தா வாயேன்டா...நம்ம நித்தியாவையும் கூட்டிட்டுப் போய் அவனைப் பார்த்திட்டு அப்படியே அந்த ஊரையும் சுத்திட்டு வருவம்..நம்ம நித்தியாவுக்கும் பரீட்சை எல்லாம் முடிஞ்சிருச்சுதானே..??.."

வருணைப் பார்க்கப் போகிறோம் என்ற செய்தியிலேயே மனம் படபடவென்று அடித்துக் கொண்டது...அப்பா என்ன பதிலைச் சொல்லப் போகிறோர் என்று அவரது பதிலிற்காய் படபடத்த மனதோடு காத்திருக்கத் தொடங்கினேன்...அவரது வாயிலிருந்து வார்த்தைகள் வர எடுத்துக் கொண்ட நேரத்தில் என் உள்ளத்தில் எழுந்த அவஸ்த்தைகளை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது...

"சரிடா...நித்தியாவையும் எங்கேயும் கூட்டிப் போனதில்ல...நாம எல்லோருமே போயிட்டு வந்திடலாம்...எதுக்கும் நித்தியாவையும் ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்..."

அப்பா அப்படிச் சொன்னதும்தான் என்னால் இயல்பாகவே சுவாசிக்க முடிந்தது...அவர் என்னை அழைக்கவும் ஒன்றும் அறியாதவள் போல் அவர் முன்னே போய் நின்று கொண்டேன்...அவர் விபரத்தைக் கூறி என் சம்மதத்தை கேட்கவும்,இதற்காகவே காத்திருந்த நான் மாட்டேன் என்றா சொல்லப் போகிறேன்...

"சரிபா...நாங்க போயிட்டு வருவம்..."

பதிலைச் சொன்னதுமே உள்ளே ஓடி வந்துவிட்டேன்...நாளை இதே நேரம் அவனைப் பார்க்கப் போகிறோம் என்று நினைக்கும் போதே இறக்கை முளைக்காத குறைதான் எனக்கு...மற்றும்படி உள்ளம் வானத்தில் பறந்து கொண்டுதான் இருந்தது...

"என்னைத் தேடி வராதேன்னு சொன்னேன்...ஆனால் நான் உன்னைத் தேடி வர மாட்டேன்னு சொல்லலையே வருண்..."என்று எனக்குள்ளேயே கூறிப் புன்னகைத்துக் கொண்டேன்...


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (29-Dec-17, 7:04 am)
பார்வை : 470

மேலே