தித்திப்பான சந்திப்புகள்

ஒரு மனிதனின் வாழ்க்கை இரயில் பயணத்தைப் போன்றது என்பர். பஸ் பயணமோ விமானப் பயணமோ, அல்லது பாதையில் கால்நடையாக போகும் போதோ பல நேரங்களில் பல விசித்தரமானவர்களை சந்திக்கிறோம். சிலர் நினைவில் நிற்பார்கள். சிலர் நினைவில் இருந்து மறைந்துவிடுவார்கள். தூரத்தில் முன்னே ஒருவர் நடந்துபோவதைப் பார்த்தால், அவரரின் நடையில் இருந்து தான் நினைத்தவராக இருப்பாரோ என்று நினைத்து கைதட்டி பலரை திரும்பவைத்து பொறுமையை சாதிப்பவர்களுமுண்டு. அதற்கு ஒரு படி மேலாக “கூய்…..” என்று ஒரு காலத்தில் யாழ்ப்பாண கிராமப்புறங்களில் கூக்குரலிட்டு கூப்பிட்டு தம் குரலை பரிசோதிப்பவர்கள் பலர்;. இது அனேகமாக வயல் வெளிகளில் நடப்பவை. அந்த கூக்குரலை விட விசில் அடித்து கூப்பிடும் கலையில் கூட பலர் கைதேர்ந்தவர்;கள். இரண்டு விரல்களை வாய்க்குள் வைத்து ஓசை எழுப்புவது என்பது எல்லோராலும் செய்யக் கூடிய காரியமில்லை. சினிமா பார்க்கும் போது எம்.ஜி.ஆரின் சிலம்படிச் சுழட்டலில் பத்துப்பேர் கீழே உருள அதைப் பார்த்து கலரியில் இருந்து விசில் அடிப்பதற்கும், முன்னே போகும் பெயர் தெரியாத ஒருவரை விசில் அடித்து கூப்பிடுவதற்கும், அதிர்வெண்ணிலும் விசில் சத்தத்தின் இடைவெளியிலும் வித்தியாசமுண்டு. இதெல்லாம் வாழ்க்கைப்பாதையில் நாம் சந்தித்த மனிதர்களை ஒரு சந்தேகத்தில் அழைக்கும் முறைகள். நீங்கள் நினைத்தவரின் பெயர் “பெரேராவாக” இருந்து அவரை நீங்கள் அப்பெயர் சொல்லி கூப்பிட்டால் போனவர்களில் சிலர் உடனே திரும்பிப பார்ப்பார்கள், காரணம் பெரேரா என்பது சிறீலங்காவில் பொதுவான பெயராகும். ஆகவே பெயர் சொல்லி கூப்பிடுவதும் பிரச்சனையை உண்டு பண்ணலாம்.

ஒருவரின் முகத்தைப் பார்த்து இவர் அவராகயிருக்கலாமோ?. கனகாலம் காணாத படியால் முகம் மாறியிருக்குமோ என்று நினைத்து அவருடன் சம்பாஷணையை ஆரம்பித்து ஏமாற்றமடந்தவர்களும் இருக்கிறார்கள். ஒரே இடத்தில் ஒருவரை சந்திப்பது என்பது சில நேரம் நடவாத காரியம். பள்ளிக்கூட மாணவியைச் சந்திக்க பஸ் ஸ்டாண்டில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து ஏமாற்றமடைநதவர்கள் பலர்.
வாழ்க்கையில் சந்திப்புகள் பல நிரந்தரமாக மனதில் தங்கிவிடுவதில்லை. காரணம் அச்சந்திப்பால் வாழ்க்கையில் ஒரு பாதிப்போ அல்லது மாற்றமோ ஏற்படாவிட்டால் விரைவில் நினைவைவிட்டு மறைந்து விடும். அதே சமயம் அந்த சந்திப்பு ஒரு தாக்கத்தை அல்லது பயனை ஏற்படுத்தியிருந்தால் எவ்வளவு வருடங்கள் சென்றாலும் அந்த சந்திப்பை நினைவு படுத்துவதில் ஒரு மகிழ்ச்சி.

பஸ் பயணத்தில் சந்திப்பு.
நீண்ட பஸ் பயணத்தில ஏற்படும் சந்திப்புகள் பல விதம். ஜன்னல் ஓரமாக சீட் கிடையாது நல்ல காற்று சுவாசிக்க முடியாது, அந்த சீட் கிடைத்தவர்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்களுமுண்டு. பயணம் தொடரும் போது நித்திரையில் வாய் நீர் வடித்தபடி பக்கத்தில் இருப்பவரின் தோளில் சாய்ந்த படி அவரின் ஷேர்ட்டை நனைத்தவர்களையும் கண்டுள்ளோம். பஸ் குலுக்கலில் தீடீரென கண்விழித்து தாம் செய்த தவறை உணர்ந்து “ மன்னிக்கவும். எனக்கு களைப்பில் நித்திரை வந்துவிட்டது என்று சமாதானம் கூறி அவரின் நட்பைப் பெற்று தொடர்ந்து ஊர் பெயர்தொழில் முதலியவற்றை சேகரிப்பார்கள். பஸ்சாரதி ஓடும் விதம் , ஜன நெருக்கடி , பஸ் குலுக்கல் போன்றவை சம்பாஷணைகள் ஆரம்பிக்க காரணமாகிறது. “ இந்த டிரைவர் பஸ் டிரைவிங்கிற்கு புதுசு போல. ஓட்டத்திலை இருந்து தெரியுது என்று ஒருவர் கருத்து சொல்ல அதை ஆமோதித்து “நானும் நினைத்தனான். இந்த பஸ்குலுக்கலில் பஸ்சில் பிள்ளைத் தாய்ச்சிகள் இருந்தால் பிள்ளையும் பெத்துவிடுவார்கள் போல தெரியுது “ என்பார் நகைச்சுவையுடன். அதில் இருந்து உரையாடல் தொடர்ந்து. “நீங்கள் தூரத்துக்கே பயணம்” என்பர். அந்தக் கேள்வி நீர் எந்த ஊர் என்பதை மறைமுகமாக கேட்கும் கேள்வியாகும். அவர் சொன்ன ஊரின் பெயரை கேட்டவுடன் “அங்கை எவ்விடம்? என்று தெரு விலாசத்தை அறியும் நோக்குடன் அடுத்த கேள்வி உருவாகும்”. ஊரில் உள்ள குறிச்சி அல்லது தெருவின் பெயரை கேட்டவுடன் அவர் என்ன சாதியைத் சேர்ந்தவர் என்று எடைபோடுவார்கள். உயர் சாதி என்று எடைபோட்டவுடன் மேலும் சம்பாஷணையில் மரியாதையும் நெருக்கமும் தொனிக்கும். உடனே இன்னொரு கேள்வி பறக்கும். அவர் சாதியை சேர்ந்த, தெரிந்த ஒருவர் பெயரைச் சொல்லி “ அவரைத் உங்களுக்கத் தெரியுமா?” என்பார். “ ஓ தெரியுமே. அவர் எனக்கு தூரத்துச் சொந்தம்” என்ற பதில் வந்தவுடன் தான் நினைத்த சாதியை சேர்ந்தவர் இவர் என்பது தீர்மானமாகிவிடும்.
அடுத்த கேள்வி, வயது வந்தவரான படியால் பிள்ளைகள் இருக்கிறார்களா, அப்படியானால் என்ன உத்தியோகம் பார்க்கிறார்கள் போன்றவை. இது சில சமயம் கலியாணம் பேசுவதிலும் முடியக் கூடிய வாய்ப்புண்டு.
பஸ் பயணத்தின் போது பெண்களை இடித்த படி பயணம் செய்து அடி வாங்கினவர்கள் கதைகள் பலவுண்டு.
இருக்க இடம் இல்லமல் நின்று கொண்டிருந்த ஒரு கற்பிணி பெண்மேல் பரிதாபப்படபடு தன் சீட்டை தானம் செய்த பரோபாரிகளும் உண்டு அப்படி ஒரு சம்பவத்தில் நடந்த உரையாடல் இது . சீட் கொடுத்தவர் சுமார் முப்பது வயதுடைய ஆண். உதவி பெற்றவள் இருபதையிந்து வயதுடைய பெண்.
“நீங்கள் இருந்த சீட்டை எனக்கு விட்டு தந்ததுக்கு மிகவும் நன்றி அண்ணா”
“ பரவயில்லை தங்கச்சி. வெகு தூரத்துக்கு நீங்கள் பயணமோ “?
“அரை மணி நேரப் பயணம். . என் தந்தையார் ஆஸ்பத்திரியில் அவரை பாரக் போறன்.”
“ உங்கள் கணவர் உங்களோடு வரவில்லையா”
“ அவருக்கு வேலை”
“உங்களை பார்த்தால் நான் படித்த பரியோவான் கல்லூரியின் உப பிரின்சிபல் சுபிரமணியத்தாரின் உங்களுக்கு சாயல் இருக்கிறது. அவர் உங்களுக்கு சொந்மோ”?
அந்த பெண்ண சிரித்தபடி சொன்னாள்
“ ம்ம் நான் அவரின் ஒரே மகள் “
“ கேட்க சந்தோசம். அப்பா இப்பவும் வேலையோ “?
“. அவர் ரிட்’டையராகி ஒரு வருசமாகிறது .அவருக்கு இப்ப இருதய நோய் செக்கப்புக்கு போய் இருக்கிறார். டாக்டர் தன்னை வந்து காணும் படி எனக்கு போன் செய்தார் அது தான் போறன் “
“சரியான ஒருவருக்கு தான் நான் என் சீட் கொடுத்திருக்கிறன்”

“ ஏன் அப்படி சொல்லுறியல் அண்ணா”?
“ யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் அட்மிசன் எடுப்பது கஷ்டம் எடுத்து தரும் படி பலரை பல் கெஞ்சினேன் . ஒருவரும் உதவவில்லை. உங்கள் அப்பா தான் எனக்கு அந்த ஸ்கூலில் சீட் வாங்கி தந்தவர் . இப்ப அவரின் மகளுக்கு நான் சீட் கொடுத்திருக்கிறன் . நான் அவசியம் உங்களோடு வந்து சுப்பிமணியம் மாஸ்டரை பார்க்கவேண்டும்:”
இந்த உரையாடலின் பின் இருவரும் நெருக்கமாயினர்

நடைபாதை சந்திப்பு
ஒரு நாள் நானும் என் நண்பனும் வீதியால் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது யாரோ கை தட்டிக் கூப்பிடுவது கேட்டது. என் நண்பன் என்னிடம் “ யாரோ கூப்பிடுகிறான் மச்சான்”என்றான். “என் பேரைச் சொல்லி கூப்பிடவில்லை.” என்றேன் நான். “ எதுக்கும் ஆர் கூப்பிடுகிறான் என்று திரும்பிப் பார்ப்போம்” என்றான் அவன். நாங்கள் இருவரும் திரும்பிப் பார்த்தோம். எங்களைப் போல் வீதியில் போன பலரும் திரும்பிப்பார்தார்கள். கைதட்டினவர் வீதியில் இளித்தபடி நின்றார். ஆள் யார் என்று எனக்கு தெரியாது. மற்வர்களுக்கும் அறிமுகமானவராகத் தெரியவில்லை. எனக்குப் படு கோபம் வந்தது. நேரே கைதட்டியவரிடம் போனேன்.
“ ஓய் ஏன் கைதட்டினனீர். பெயரச் சொல்லி கூப்பிட்டிருக்கலாமே என்றேன்”
“ இல்லை என் நண்பனுடன் எனக்கு ஒரு போட்டி. வீதியில் கைதட்டினால் எத்தனை பேர் திரும்பிப் பார்ப்பார்கள் என்பது தான் அது . அது தான் டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன் என்றான் இளித்தபடி. எனக்கு அவன் கன்னத்தில் அறைய வேண்டும் போல் இருந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு திரும்பிவிட்டேன்.
சல சமயம் பஸ்சை மிஸ் பண்ணிவிட்டேன் என் பேர்ஸை ஆரோ பிக்பொக்கட் அடித்துவிட்டார்கள். கோஞ்சக் காசு தரமுடியுமா என்று கேட்டுவருவார்கள். இது பிச்சை எடுக்கும் கௌரவமான வழி. இன்னொன்று காக்காய் வலிப்பு வந்து தீடிரென நிலத்தில் விழு;நது புரளுவார்கள். உடனே எங்கிருந்தோ ஒருவர் ஓடிவந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக வாகனத்துக்கு காசு கேட்பார். .மந்திரவித்தை காட்டும் ஒருவனுக்கு வித்தையைப் பார்த்துவிட்டு ஒரு காசும் போடாமல் போவோருமுண்டு. இவையெல்லாம் பாதையோர சந்திப்புகள்.

விமானப் பயணச் சந்திப்பு
லண்டனில் இருந்து கொழும்புக்குச் செல்லும் விமானப் பயணம் ஒரு நீண்ட பயணம். சில சமயங்களில் டுபாயில் சிறிது நேரம் தங்காது நேராகவே சென்று விடுவதுமுண்டு. இந்த விமானத்தில், பக்கத்தில் அமர்ந்திருப்பவர் வெளி நாட்டவர் என்றால் ஆரம்பத்தில் பேச்சுக்கு இடமில்லை. ஆனால் மதிய போசனம் பரிமாறும் போது சம்பாஷணை ஆரம்பிக்க சாத்தியமாகிறது. காரணம் ஸ்ரீ லங்கா உணவு காரம் கூடியது. அதை எப்படி பக்கத்தில இருக்கும் வெள்ளையினத்தவர் சுவைத்து சாப்பிடப் போகிறார் என்று கவலைப்பட்டு “ உங்களுக்கு ஸ்ரீலங்கா சாப்பாடு இதற்குமுன் சாப்பிட்டு பழக்கமா என்று கேட்பதுடன் சம்பாஷனையை ஆரம்பித்தேன். அவருக்குப் பக்கத்தில் இருக்கும் இலங்கையர்.
“ இல்லை இது எங்களது முதல் பயணம். பக்கத்தில் இருப்பவர் என் கேர்;ள் பிரண்ட்.ஸ்ரீலங்கா “டமில் டைகர்ஸ்” பற்றி கேள்விபட்டேன். அவ்வளவுக்கு காடுகள் சிலோனில் உண்டா என்று கேட்டார். டமிழ் டைகர்ஸ் யார் என்பதையும் அவர்கள் உருவாகிய காரணம் என்ன என்பதையம் முடிவில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் தான் எங்கள் பிரச்சனையை உருவாக்கி விட்டு, போய்விட்டது என்பதை விளக்கிவிட்டு அவர் முகத்தை பார்த்தேன். என் அணுமானம் அவர் ஒரு பிரித்தானியர் என்பது. அவர் என் கருத்துக்கு முகம் சுழிக்கவில்லை. அவர் கனேடியர் என்பதைப் பிறகு அறிந்தேன். இப்படி ஆரம்பித்த எங்கள் நட்புஸ்ரீPலங்காவில் பார்க்க வேண்டிய இடங்கள் , பண்டைய சரித்திரம், கலாச்சாரம் ஆகியவற்றை சுற்றி நின்றது.

நான் இருந்த இருக்கைக்கு இரண்டு இருக்கை தள்ளி ஒரு சிங்களவரும் ஒரு தமிழரும், தமிழ்-சிங்களம்-ஆங்கிலம் கலந்த ஒரு புது விதமான பாஷையில் அடிகடி மச்சான் போட்டு , சிரித்து உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு முன்னால் இலவசமாக கொடுக்கப்பட்ட பிரண்டி கிளாஸ் இரண்டு இருப்பதைக் கண்டதும் சம்பாஷணை இவ்வளவு அன்னியோன்யமாக இரு துருவங்களான இரு இனத்தவர்களிடையே நிலவும் நட்பின் காரணத்தை கண்டுபிடித்தேன்.. விமானத்தில் சிங்களவர் தமிழருக்கிடையே சமாதானம் நிலவத் தொடங்கிவிட்டது என்று நினைத்து எனக்குள் சிரித்துக் கொண்டேன். எல்லாம் மதுவின் வேலையா என்றது என் மனம்.
இரயில் பயணச்சந்திப்பு
கொழும்பு – யாழ்ப்பாண இரயில் பயணம் ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னர் காலத்தில் சுவாரஸ்யமானது. கோர்ணர் சீட்டை ஓடிப் போய் பிடிப்போரும்,; தெரிந்த ஸ்டேஷன் மாஸ்டரைக் கொண்டு மெயில் டிரெயினில் பெர்;த்புக் செய்வோரும் தான் நினைவுக்கு வரும். ஒரு தடவை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு மெயில் டிரெயினில் திரும்பும்;போதுஇ முதலாம் வகுப்பு சயனப் படுக்கைகளைக் கொண்ட பெட்டி வரும் கடைசிப் பகுதியில், கையில் எனது சூட்கேசுடன் நின்று கொண்டிருந்தேன். அந்த சமயம் அக்காலத்தில் பிரபல்யமான அரசியல்வாதி ஜீ ஜீ பொன்னம்பலம் தன் ஆதரவாளர்கள் புடைசூழு நான் நிற்கும் பகுதிக்கு வருவதைக் கண்டேன். அவரின் ஆதரவாளர் ஒருவர் ஜீ ஜீயின் குடையையும் இன்னொருவர் சூட்கேசையும் சுமந்துவந்தார்கள். அதை சுமக்க தமக்கு கிடைத்த பாக்கியம் என நினைத்தார்களோ என்னவோ. எனக்கு சினிமா நட்சத்திரங்களின் கூஜாதூக்கிகள் தான் நினைவுக்கு வந்தது. தலையில் அவர் அணிந்திருந்த தொப்பி அவரின் அந்தஸ்தைப் பிரதிபலித்தது. கையில் ஒரு பைப் வேறு. எனக்கு சிக்காகோ நகரின் மாபியா தலைவர் ஞாபகம் தான் வந்தது. நல்ல காலம் இவர் அப்படியில்லை , ஆனால் பல கிரிமினல்களுக்கு தெய்வம். கடவுளே இந்த மனுஷன் என் பெட்டிக்குள் ஏறக் கூடாது என தெய்வத்தை வேண்டிக் கொண்டேன். தெய்வம் என்னை கைவிட்டுவிட்டது. நான் ஏறிய பேர்த் பெட்டிக்குள் அவரும் ஏறினார். எனக்கு கீழ் பேர்த். அவருக்கு மேல் பேர்த். நான் என் சூட்கேசை சீட்டுக்கு கீழ் தள்ளிவிட்டு ஜன்னல் ஓரமாக போய் இருந்தவாறே கலைமகள் இதழை வாசிக்கப் பிரித்தேன். ஓரக் கண்ணால் என் கவனம் அவர் மேல் இருந்தது. இரயில் நகர்ந்தது.

“ என்ன தம்பி கொழும்புக்கா ?” என்றார் ஆங்கிலத்தில் அவர். “ஓம் சேர் “என்றேன் மரியாதையாக நான். அவர் வயதுக்கும் திறமைக்கும் நான் கொடுத்த மரியாதை அந்த சேர். அரசியலுக்காக அல்ல. சம்பாஷணை தொடர்ந்தது. பெட்டிக்குள் இருந்து, டன்ஹில்( dunahill) என்ற விலையயுர்ந்த சிகரெட் பக்கெட்டை எடுத்தார். அத்தோடு பிளக் அண்ட் வையிட் விஸ்கி வேறு. சிகரட்டை எனக்கு நீட்டினார். “நான் குடிப்பதில்லை” என்றேன். “இரண்டும் தானோ” என்றார். ஆம் என்றேன். நல்ல பிள்ளை என்றார்.

வயது வந்தவர். எப்படி மேலே ஏறி படுப்பார் என்றது என் மனம். பாவம் அவருக்கு கீழ் பேர்த்தை கொடுத்தால் நிம்தியாக அவர் கீழே குடிக்க நான் மேலே படுக்கலாம் என்று தீர்மானித்தேன். “சேர் நீங்கள் கீழே படுங்கள் நான் மேலே படுக்கிறேன் என்றேன்”. அவர் அதை என்னிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. “ தாங்கியூ “ என்று நன்றி தெரிவித்தார். “Don’t mention please “என்றேன் பதிலுக்கு ஆங்கிலத்தில். “ தம்பி இதை சாப்பிட்டுப்பாரும் வீட்டிலை செய்தது என்று ஒரு பொரித்த கோழிக்காலையும் முழு முட்டையையும் தந்தார்.” மறுக்க முடியவில்லை. சுவையாயிருந்தது. எங்கள் சம்பாஷணை பல விடயங்களைப்பற்றி யிருந்தது. அரசியலை தவிர்த்தேன்.

காலை மெயில் டிரெயின் வியங்கொடவை அணுகியதும் அந்த பெட்டியை கவனிப்பவன் எங்கள் கதவைத் தட்டி எழுப்பினான்.

“ குட் மோர்னிங் ஐயா. சௌகரியமா படுத்தீர்களா?” என்றேன்.

பதிலுக்கு காலை வணக்கம் தெரிவித்து விட்டு “வீட்டிலை படுக்கிற மாதரி வராது என்றார்”.
“ அது உண்மை” என்றேன்.
“தம்பி நீர் வெள்ளவத்தை தானே என்றார்”
“ஓம் சேர் என்றேன்”
“ அப்ப என்னை பம்பலபிட்டியிலை இறக்க சொல்லிவிட்டு வெள்ளவத்தையிலை உம்மை வீட்டிலை இறக்க என் டிரைவருக்கு சொல்லுறன் “ என்றார்.
நான் செய்த உதவிக்கு பதில் உதவி செய்கிறாராக்கும் என நினைத்தேன்.
“ உமக்கு என் உதவி ஏதும் தேவைப்பட்டால் என்னை வந்து இந்த விலாசத்திலை சந்தியும் என்று தன் பிஸ்னஸ் கார்டை தந்தார்”.
நான் ஒரு கவர்ண்மேண்ட’ சேவன்ட் எனக்கு பதிலுக்கு கொடுக்க கார்ட் இருக்கவில்லை.

சில சந்திப்புகள் என் மனதை விட்டு பல வருடங்களாகியும் அகலவில்லை. சில என் சிறுகதைகளுக்கு கருவாகவும் அமைந்துவிட்டன. நான் சந்தித்து மறந்த பலர் பல வருடங்களுக்கு பின் என்னைச் சந்தித்து நான் செய்த உதவியை நினைவு கூறியுள்ளார்கள். அவர்களின் பெரும் தன்மையை மெச்சினேன். சந்திப்புகள் தித்திப்பாக இருப்பதையே எல்லோரும் விரும்புவார்கள்.
****

எழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (1-Jan-18, 9:36 am)
பார்வை : 241

மேலே