கவிமகனை வாழ்த்துவோம்
அற்புதமாய்ப் பல்வகையில் அந்தாதி நெய்பவன்
சொற்சதங்கை பூட்டிநமைச் சொக்கவைப்பான் - பொற்புடன்
கற்பனைக்(கு) எட்டா கவினுவமை யோடுகவி
வற்றாமற் செய்பவனை வாழ்த்து.
செவ்விய தீந்தமிழில் சிந்துகவி யாப்பவன்
வெவ்வேறு பா,வனையும் வித்தகன்! - அவ்வண்ணம்
வெண்பா புலியவன்; மீச்சிறந்த பொற்கவிக்கு
வண்டமிழால் சொல்லுவோம் வாழ்த்து.
கவிக்கண்ண தாசனைக் கண்முன்னே காட்டித்
தெவிட்டாப்பா தந்திடும் செல்வன்! - புவிவெல்வான்!
வெள்ளித் திரையினில் வெற்றிக் கொடிநாட்டும்
வள்ளியூர் மைந்தனை வாழ்த்து .
யாரா யிருப்பினும் ஏற்புடை யோர்தமைப்
பாராட்டித் தான்மகிழும் பண்பினன்!- சீராட்டுந்
தன்மையினால் பாவலர்தம் தாய்க்குநிக ரானவனை
மன்றம் மணந்திட வாழ்த்து.
அன்புமகன் விக்டர்தாஸுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !