கலங்கிய மனம்
குகைக்குள் உறுமும் மிருகம் போல
மனதுள் அலையும் என் கோபம்.
பாம்பின் படத்தில் உறையும் விஷமாய்
பல்லிளிக்கும் என் கோபம்.
அடுப்பணைந்த பிறகும் அடங்காத
ஆழ்மனதின் கோபம்.
தோல்விகளின் துரத்தல்களால்
தூங்காத என் கோபம்.
கையாலாகாத தன்னிலை கண்டு
கண்ணீரோடு போராடும்
கலங்கிய மனதின் கோபம்.
வாழ்வின் வாசல்கள் மூடிய போதும்
கலைந்து போன வானவில்லின் எச்சமாய்
இன்னும் துளி நம்பிக்கை.
யதார்த்தம் புரிந்தும் போராட்டம் ஓயாமல்
பரிதவிக்கும் மனதுக்கு
பதில் ஏதும் இல்லாததால்
என்னை நானே அழிக்கிறேன் நிரந்தரமாய்
வாழ்ந்த தடம் ஏதும் இன்றி.