மெட்டி

தலைவன்
தலைதாழ்ந்தான்
என் கால் விரல்களுக்கிடையில்
உன்னை சிறைப்படுத்த...

அந்த நன்றிக்காக
என்னவனிடம் விசுவாசமாய் இருக்க
என்னை வேவுப்பார்க்க வந்தாயா?

கணவனே கண்டறியட்டுமென்று
கண்ணாமூச்சி ஆடினால்
சத்தம் எழுப்பி
காட்டிக்கொடுக்கிறாயே என்னை...

ஊடல் கொண்டு
நான் நடிக்க- அவரின்
சமாதான சாக்குக்கு
என்னை கேட்காமலே தலையசைக்கிறாயே...

எனக்கு முன்பாகவே நீ சிணுங்கி
ஒலியோடு நீ முணுங்கி
அவரின் ஈர்ப்பை உன் பக்கம் இழுக்கிறாயே...

கணவனின் விழிப்பார்வையால்
வெட்கம் கொண்ட தலை குனிய
வெட்கங்கெட்ட தனமாய் சிரித்து-என்னை மேலும் சிவக்கவைக்கிறாயே...

அவரின் கைப்பட்டு என் கால்தொட்ட நீ
அதிகபிரசங்கி...
ஆனாலும்
அழகு தான்...


#கவிதை_கற்பனை_மட்டுமே
@ஸ்ரீதேவி

எழுதியவர் : ஸ்ரீதேவி (4-Jan-18, 8:06 pm)
Tanglish : metti
பார்வை : 1927

மேலே