பள்ளிச்சுற்றுலா

முன்னுரை :

பயணம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் அன்றாட தேவையாக உள்ளது .ஆனால் அவசியங்களை அகற்றி வைத்து ஆனந்தமாய் மகிழ்ச்சியை அள்ளிக் கொள்ளும் பயணம் சுற்றுலாவாய் மலர்சூடிக்கிறது .அப்படி ஒரு அழகிய பயணம் தான் என்னுடையதும் .

பள்ளிச்சுற்றுலா :

நான் இன்னும் ஒரு சுட்டிப் பெண் தான் .வயதும் கொஞ்சம் குறைச்சல் தான் .அங்கும் இங்கும் சுற்றிப்பறக்க ஆசைப்படும் வயது .ஆனால் என்ன செய்வது கல்விக்கற்க வேண்டும் என பள்ளிக்குப் புறப்பட்ட நாள் முதல் பள்ளிப்பருவம் முடியும் வரை பல ஆயிரம் எண்ணங்கள் பள்ளியிலே பதுங்கிவிட்டது .பயணம் என்பது தினமும் பள்ளி சென்றுவருவது என வழக்கமாகி விட்டது .

இதற்கு விருந்தாய் வந்தது தான் அந்த பள்ளிச்சுற்றுலா. அப்பொழுது நாங்கள் பத்தாம் வகுப்பு படிக்கின்றோம் .மதிப்பெண் என்பது மகுடமாய் மாற அனைவரும் கண்களைப் புத்தகத்திற்கு அடகு வைத்து விட்டோம் .ஒவ்வொருவரும் சுவரின் நண்பர் ஆனோம் .நாங்கள் எல்லோரும் மதிப்பெண் அதிகம் பெற்று பள்ளிக்கு பெருமைத் தேடி தந்ததால் எங்களை கொச்சின் செல்ல பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தது .

முதல் முறையாக நண்பர்களுடன் ஆசிரியர்களுடன் ஒரு இன்பச்சுற்றுலா அது .ஒரு நாள் மட்டும் என்றாலும் அதில் ஆயிரம் நினைவுகள் நெஞ்சில் குடிபுகுந்துவிட்டது .நந்தவனத்தில் பூத்துக்குலுங்கும்
அழகிய பூவல்லவா ?எல்லோரும் ஒன்றாய் ஒரே பேருந்தில்
மகிழ்ச்சியாய் படியில் ஏறி செல்லும் பொழுது தோழர்கள் எங்களுக்கு தான் கடைசி இருக்கை என்று ஒரு குட்டி ச் சண்டை ,இறுதியில் வாகைச் சூடியது என்னவோ அவர்கள் தான் .

கொச்சின் சென்றதும் நாங்கள் முதலில் பார்த்தது கடல் தான் .படகு கப்பல் என கடலில் மிதக்க எங்களின் அனைவரது மனமும் அதில் பயணிக்க மிதந்தது .ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஆட , ஆசிரியர்களுக்கும்
மாணவர்களுக்கும் அழகிய பந்தம் பரிசம் போட்டது .தோழிகள் நாங்கள் எங்களின் குட்டி விரல்களால் தண்ணீர் தொட்டு செல்லும் பொழுது நீரோ வெட்கத்தில் சிலிர்த்துக்கொண்டது .மீன்கள் எல்லாம் போட்டியிட்டு எங்களை தழுவிச் சென்றது போல் ஒரு கற்பனை .இனிமையான தருணம் அது .

ஜன்னலோர இருக்கைக்கு அடித்துடி என்றாலும் எனக்கு மட்டும் எப்பொழுதும் கொஞ்சம் தனி கவனிப்பு தான் .முதல் ஆளாய் சன்னல் கம்பிகள் என்னை அழைத்துக்கொண்டது .விரலும் கம்பியும் நட்புக்கொண்டு பயணம் செய்தது .மலைகள் சுற்றி இருக்க ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் எங்களின் கூச்சல் சப்தத்தை வென்றது குயிலின் குரல் .

ஒரு இடத்தில் பேருந்து ஓய்வெடுத்தது ஆனால் நாங்கள் மட்டும் ஓய்வெடுக்காததால் பேருந்து கொஞ்சம் பொறாமை கொண்டது .அங்கு மிட்டாய் விற்பவர் அருகில் வந்தார் பத்து ருபாய் தான் வாங்கிக்கொள்ளும் படி சொன்னார் .ஆனால் நாங்கள் யாரும் வாங்காததால் ஏதோ முணுமுணுத்தபடி அங்கு இருந்து விடைபெற்றார் .பின்பு ஒரு பெரிய உணவகம் சென்றோம் ,உணவிற்கும் அங்கு சண்டை தான் .அது ஒரு புறம் இருக்கட்டும் ,பெரிய உணவகத்தில் திசு பேப்பர் வைப்பது வழக்கம் .சாப்பிட்டு முடிந்ததும் ஆளுக்கொரு திசு பேப்பர் எடுக்கொண்டோம் யாரும் பார்க்காத நிலையில் .அதனால் நாங்க திருடி என பெயர் சூட்டிக்கொண்டோம் பணம் கொடுத்து இருக்கிறோம் என அறிந்தும் .

நாங்கள் பொருள்காட்சிக்குச் சென்றோம் ,அங்கு பழைய காலத்து பொக்கிசங்கள் எல்லாம் நிறைந்து இருந்தது .அதில் ஒன்று தான் பல்லக்கு .பல்லக்கு பார்த்ததும் கைகள் தொட்டு பார்க்க சிறகடித்தது .மெல்ல கைகள் வருடிய வண்ணம் மனதில் அமர ஆசை .சுற்றியுள்ள காவலரைப் பார்த்ததும் ஆசையை களவாடி சென்றது.

சூரியன் கூட ஒளியை சுருக்கிக்கொண்டு மறைய ஆயத்தமானது ,ஆனால் எங்களின் மகிழ்ச்சி கொஞ்சமும் குறையவில்லை .இருளில் நிலா வெண்ணிற ஆடை அணிந்து வெளிச்சம் தர எட்டிப்பார்த்தது ,அப்பொழுது தான் எங்களின் முகத்தில் பிரகாசம் குறைந்தது .பள்ளியை நெருங்கி விட்டோம் .பள்ளியின் கதவு திறக்க பட்ட அந்த நொடியில் எங்களின் மகிழ்ச்சி கதவு பூட்டப்பட்டது .அன்புடன் தொடங்கிய பயணம் பல நினைவுடன் பத்திரமாய் மனதில் மாட்டிக்கொண்டது .

முடிவுரை :

காலங்கள் கரைந்தால் மீண்டும் கட்ட முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை .பல நினைவுகள் இதயத்தை சிறகடித்தாலும் இன்னொரு பயணத்திற்கு ஏங்குகிறது .பள்ளிப்பருவத்தின் பயணம் தேடினாலும் இனி கிடைக்காதவொன்று .நினைவுடன் நானும் என் நண்பர்களும் .

எழுதியவர் : தீபிகாசுக்கிரியப்பன் (6-Jan-18, 11:55 pm)
பார்வை : 2511

மேலே