பொங்கலாம் வாரீர்

====================
வாசலில் சாணம் தெளித்து
=வனப்புற கோலம் வரைந்து
ஈசனை வணங்கும் பொருட்டு
=எழிலுற பூத்துக் குலுங்கும்
வாசனை மலர்கள் பறித்து
=வகைவகை சரங்கள் தொடுத்து
மாசிலா மனத்தி னோடே
=மகிழ்வுற பொங்கலாம் வாரீர்.
உழுதவர் விதைத்த விதைகள்
=உரியநல் பயிராய் விளைந்து
விழுந்திடும் சமுதா யத்தை
=விழுதெனத் தாங்கிப் பிடித்து
எழுந்திட வைத்ததற் கிங்குநாம்
=எழுந்தொரு வணக்கம் போட்டு
பழுதற பொங்கல் பொங்கிப்
=பரவசம் கொள்வோம் வாரீர்.
காலமும் கண்ணீர் பொங்கி
=கவலையில் கிடக்கும் வறுமை
கோலமும் மறைந்து போக
=குடிசையின் கதவு திறந்து
சாலவும் சிறந்த தாகச்
=சங்கடம் தீர்க்கும் உதவிப்
பாலமும் இட்டு நாமும்
=பாங்குடன் பொங்கலாம் வாரீர்.
*மெய்யன் நடராஜ்
தோழமைகளுக்கு முத்தான பொங்கல் வாழ்த்துகள்.