தியாகராஜ சுவாமிகள்

கர்னாடக இசை மேதை

‘தியாகப் பிரம்மம்’ என்று போற்றப்படும் கர்னாடக இசை மேதை சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் (Thyagaraja Swamigal) பிறந்த தினம் (மே 4).

l திருவாரூரில் (1767) பிறந்தார். இவர் பிறந்த சிறிது காலத்தில் குடும்பம் திருவையாறில் குடியேறியது. தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளை தந்தையும், பக்திப் பாடல்களை தாயும் இவருக்கு கற்றுக் கொடுத்தனர்.

l ஸொண்டி வெங்கடரமணய் யாவிடம் கர்னாடக இசை கற்றார். 8 வயதுமுதலே சீதா, ராமர், லட்சுமணர், அனுமன் விக்ரகங்களுக்கு அன்றாடம் பூஜை செய்வார். அப்போது, தெலுங்கு, சமஸ்கிருதத்தில் ராமன் மீது புதிய கீர்த்தனைகளை இயற்றி, அவரே ராகமும் அமைத்துப் பாடுவார்.

l தனது தாத்தா வைத்திருந்த பல இசை நூல்களைப் படித்தார். அதில் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள ஸ்ரீராமகிருஷ்ணானந்தா சுவாமிகளிடம் சென்றார். அவர் இவருக்கு நாரத உபாசனை மந்திரத்தை உபதேசித்தார். பக்தியுடன் அதை உச்சரித்து வந்த இவருக்கு நாரத முனிவரே காட்சி கொடுத்து சங்கீத ஸ்வர ரகசியங்கள் அடங்கிய ‘ஸ்வரார்ணவம்’ என்ற அரிய நூலை வழங்கியதாக நம்பப்படுகிறது.

l ‘ராம’ நாம மந்திரத்தை 96 கோடி முறை ஜெபிக்குமாறு யதீந்திரர் என்ற மகான் கூற, 21 ஆண்டுகளில் அதை செய்து முடித்த தியாகராஜர், பலமுறை ராமனின் தரிசனம் பெற்றதாக கூறப்படுகிறது.

l கீர்த்தனைகள் இயற்றுவது, அவற்றுக்கு இசையமைத்து பாடுவது, வேத பாராயணம் செய்வது, புராணங்கள் கற்பது, இசையை மற்றவர்களுக்கு கற்றுத் தருவது என்று வாழ்க்கையை ஓட்டினார். பல புண்ணியத் தலங்களுக்கு யாத்திரை சென்று, ஆங்காங்கே பல கீர்த்தனைகளை இயற்றினார்.

l நன்றாக பாடுவதோடு வீணையும் நன்கு வாசிப்பார். கின்னரீ என்ற தந்தி வாத்தியம் வாசிப்பதிலும் சிறந்து விளங்கினார். 2,400 பாடல்களை இயற்றியுள்ளார். 24 ஆயிரம் பாடல்களை இயற்றியதாகவும் ஒரு கருத்து உண்டு. பிரகலாத பக்தி விஜயம், நௌகா சரித்திரம் முதலிய இசை நாடகங்களையும் எழுதியுள்ளார். ஜோதிடம், கணிதத்திலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

l இந்திய இசை வரலாற்றில் வேறு யாருக்கும் இல்லாத அளவுக்கு ஏராளமான சீடர்கள் இவரிடம் சேர்ந்தனர். தஞ்சாவூர் ராமாராவ், வீணை குப்பய்யர், உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள். சீடர்களுக்கு கர்னாடக இசையுடன் கணிதம், ஜோதிட சாஸ்திரமும் கற்றுக்கொடுத்தார்.

l இவரது இசைத் திறமை குறித்து கேள்விப்பட்ட சரபோஜி மன்னர் தன் அரசவைக்கு வந்து தன்னைப் புகழ்ந்து பாடச் சொன்னார். ராம பக்தியில் திளைத்திருந்த இவரோ மனிதரை துதி செய்து பாடமாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

l இவரைப் பற்றி ஏராளமான நூல்கள் எழுதப்பட்டன. 1935-ல் ராமசாமி பாகவதர் எழுதிய ‘ஸ்ரீ தியாக ப்ரம்மோபநிஷத்’ என்ற முதல் நூல் குறிப்பிடத்தக்கது.

l ‘தியாகப் பிரம்மம்’ என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள் 80-வது வயதில் (1847) சித்தியடைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், திருவையாறில் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள சமாதியில் ஆண்டுதோறும் இசைக் கலைஞர்கள் ஒன்றுகூடி, அவருக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

எழுதியவர் : (17-Jan-18, 5:26 am)
பார்வை : 29

சிறந்த கட்டுரைகள்

மேலே