வேடிக்கை பார்ப்பவன்
குளம்பியுடனும்,
குழப்பங்களுடனும்
தனிமையில் என்னறையில்
துய்த்திருந்த ஒருநாள்.
சாளரத்தின் குறுக்கே
சிறிது சிறிதாய்
கோடிட்டுக் கொண்டிருந்தன
கார்மேகங்களின் கண்ணீர்த்துளிகள்.
முழுதும் இலையுதிர்த்த
மரம் ஒன்று
மழை ஒதுங்க வந்த
முதியோன் ஒருவனை
மீதமுள்ள கிளைகளைக் கொண்டு
நனையாமல் காக்க தடுமாறியது.
வயோதிகனுக்கு உதவிட
உள்ளூர ஒருவன்
வாதிட்டான்.
தனிமை கலைத்திட விரும்பவில்லை.
தவமாய் வேடிக்கை பார்க்கலானேன்.