கொட்டும் மழையில் உன்னோடு ஓர் நாள்

கொட்டும் மழையில்
உன்னோடு ஓர் நாள்.
குடையின்றி தூரத்தில் நீ.
ஒற்றைக்குடையுடன் நான்.

மழை நனைந்து
நீ ரசிக்கின்றாயா?
உனை நனைத்து
மழை ரசிக்கின்றதா?

உன் தேகம் தனை
மோகங்கொண்டு முதலில்
யார் தொடுவதென
மழைத் துளிகளுக்குள்
மெலிதாய் ஒரு போட்டி.

வென்றோர் யாவரும்
மேற்கதி செல்வரோ?
மண் சேர்ந்த
மழைத்துளி யாவும்
மீண்டும் மேகம்
தனைச் சேர்ந்திடுமோ?

ஊமத்தை கொண்ட
துளிகள் யாவும்
மென் தேகத்தில்
முத்தங்கள் தந்து
உன்மத்தம் கொள்ளுதோ?

எனை முழுதாய்
மறந்து நான்.
இன்று போய்
குடை மறக்க
ஏன் மறந்தேனோ?
நீ விளித்தால்
மறந்தேன் என்பேனோ?

ஒருதரம் விளிப்பாயோ?
விழி தாழ்த்திக் கடப்பாயோ?

எழுதியவர் : (17-Jan-18, 7:15 am)
சேர்த்தது : தமிழ் பித்தன்
பார்வை : 989

மேலே