நினைவுப் பெட்டகம் கவிஞர் இரா இரவி
நினைவுப் பெட்டகம்! கவிஞர் இரா. இரவி !
வாழ்வில் நடந்த மகிழ்வுகளைச் சேகரியுங்கள்
வளமான நினைவுகளை மட்டும் சேகரியுங்கள்!
நடந்த கசப்புகளை துன்பங்களை மறந்திடுங்கள்
நினைவு நல்லது வேண்டும் மனதினில்!
பத்தாம் வகுப்பில் வென்றதும் சாதனைதான்
பனிரெண்டாம் வகுப்பில் வென்றதும் சாதனைதான்!
மனைவியின் கரம் பிடித்ததும் சாதனைதான்
மகள் மகன் பிறந்ததும் சாதனைதான்!
புதுமனை புகுவிழா கண்டதும் சாதனைதான்
புதிய புத்தகம் எழுதியதும் சாதனைதான்!
நல்ல நண்பர்கள் கிடைத்ததும் சாதனைதான்
நாளும் பேசி மகிழ்ந்ததும் சாதனைதான்!
வாழ்வாங்கு வாழ்ந்து வருவதும் சாதனைதான்
வாழ்த்தும்படி நாளும் வாழ்வதும் சாதனைதான்!
பகைவர்கள் இல்லாது இருப்பதும் சாதனைதான்
பாசம் நேசத்துடன் வாழ்வதும் சாதனைதான்!
பலருக்கு உதவி வருவதும் சாதனைதான்
பண்பாக பலரிடம் நடப்பதும் சாதனைதான்!
மனிதாபிமானத்துடன் வாழ்வதும் சாதனைதான்
மனிதர்களை நேசித்து மதிப்பதும் சாதனைதான்!
இரக்கம் காட்டி வாழ்வதும் சாதனைதான்
இன்சொல் மட்டுமே பேசுவதும் சாதனைதான்!
சண்டை சச்சரவுகளின்றி நடப்பதும் சாதனைதான்
சகோதர உணர்வுடன் நடப்பதும் சாதனைதான்!
நல்லோர் வழியில் நடப்பதும் சாதனைதான்
நல்லவன் பெயர் எடுத்ததும் சாதனைதான்!
இல்லத்தில் இனிமை நிலைத்ததும் சாதனைதான்
இல்லத்தரசி மனம் மகிழ்ந்ததும் சாதனைதான்!
இன்முகத்துடன் இனிதே வலம் வருவதும் சாதனைதான்
யாரிடமும் வன்சொல் பேசாதிருப்பதும் சாதனைதான்!
நிகழ்த்திய சாதனை யாவும் பட்டியலிடுங்கள்
நினைவுப் பெட்டகத்தில் சேகரித்து வையுங்கள்!