எம்ஜிஆர் வரலாற்று நாயகன்
எம்.ஜி.ஆரைப் பற்றிய தகவல்கள் என்றைக்குமே ஆச்சரியப்படுத்துபவை. பேசித் தீராதவை. எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது வாழ்நாளில் சில வீழ்ச்சிகளையும் பெரும் வெற்றிகளையும் சந்தித்த முக்கியமான தலைவர் அவர். அவரது திரைப்பட, அரசியல் ஆளுமை, அவர் பொதுவாழ்வில் தொட்ட உயரங்கள், மக்கள் அவர்பால் பொழிந்த அன்பு - தமிழக அரசியல் இன்று வரை காணாதது.
எம்.ஜி.ஆரின் வளர்ச்சியில் திமுகவுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. அவரை ‘திராவிடக் கர்ணன்’ என்று திமுக போற்றியது. ‘முரசொலி’யும் எம்.ஜி.ஆரின் புகழ்பாடியது. திமுகவை, அதன் கொள்கைகளை, அண்ணாவை எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் வசனங்களும் பாடல்களும் தாங்கிப் பிடித்தன. ‘‘தம்பி ராமசந்திரன் முகத்தைக் காட்டினால் 30 ஆயிரம் வாக்குகள்’’ என்று 1967 திமுக விருகம்பாக்கம் மாநாட்டில் அண்ணா சொல்லும் அளவுக்கு எம்.ஜி.ஆர். வளர்ந்திருந்தார்.
பிரிந்த கைகள்
அண்ணா மறைவுக்குப் பின் நாவலரை முந்தி கருணாநிதி முதல்வராவதற்கு எம்.ஜி.ஆர். துணை நின்றார். பிரதிபலனாக திமுகவின் பொருளாளர் பதவி கிடைத்தது. ஒன்றாகப் பயணித்த இந்த இரு பெரும் ஆளுமைகள் ஒருகட்டத்தில் மெதுவாக விலகத் தலைப்பட்டனர். 1971 தேர்தலில் அசுர பலத்துடன் திமுகவும் கருணாநிதியும் ஆட்சிக்குத் திரும்பியிருந்தனர். எம்.ஜி.ஆர். அமைச்சராக விரும்பினார். நடிப்பதை விட்டுவிட்டு வருமாறு கருணாநிதி சொல்ல விரிசல் அதிகமாகியது.
பொருளாளர் என்ற முறையில் தேர்தல் செலவுகள் செய்யப்பட்ட விதத்திலும், 1972-ல் மு.க.முத்துவின் திரைப்பட வருகையிலும் எம்.ஜி.ஆருக்கு வருத்தம் இருந்தது. 1972 அன்று திருக்கழுக்குன்றத்தில் திமுகவினர் கணக்கு காட்ட வேண்டும் என்றார் எம்.ஜி.ஆர். இரண்டு நாட்களில் சஸ்பெண்ட், பின்னர் 14 அக்டோபர் விலக்கம் என்று எம்.ஜி.ஆர். கணக்கை முடித்துவைத்தது திமுக தலைமை.
1972 அக்டோபர் 18-ல் அதிமுக உருவானது. எம்.ஜி.ஆருக்குத் திரண்ட கூட்டம் அனைவரையும் மலைக்கவைத்தது. காமராஜர், “ஒரே குட்டையில் ஊறிய மட்டை” என்று எம்.ஜி.ஆரை விமர்சித்தார். ‘‘சினிமா மாயை சில மாதங்களில் மறைந்துவிடும்’’ என்றது திமுக. கட்சி தொடங்கிய ஆறே மாதங்களில் எம்.ஜி.ஆரின் திண்டுக்கல் தேர்தல் வெற்றி, திமுகவை விட காமராஜரைக் கலவரப்படுத்தியது. 1969-ல் காங்கிரஸ் காமராஜ் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என்று ஏற்கெனவே இரண்டாகியிருந்தது.
வெற்றி வாசல்
திமுகவுக்கு மாற்று ஸ்தாபன காங்கிரஸ் என்பதை எம்.ஜி.ஆர். முடித்து வைக்கப்போவதை காமராஜர் தொடக்கத்திலேயே புரிந்துகொண்டார். திமுகவினரும் எம்.ஜி.ஆரைக் குறைத்தே மதிப்பிட்டனர். கருணாநிதி யின் மாநில சுயாட்சித் தீர்மானம், தலைமைப் பண்புகளைச் சகித்துக்கொள்ள முடியாத இந்திரா காங்கிரஸ் ஆட்சி, திமுகவை வீழ்த்தும் ஒரு கருவியாக எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திக்கொண்டது. அவர் கேட்டபடி சர்க்காரியா விசாரணை கமிஷன் அமைத்தது. சாட்சி சொல்ல எம்.ஜி.ஆர். வரவில்லை என்பது தனிக் கதை. எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்காலும் வீழ்த்த முடியாத கருணாநிதி அரசை இந்திரா அரசு கலைத்தது. அவசர நிலை திமுகவை வதைத்தது. மத்திய அரசை என்றும் பகைத்துக்கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு அப்போது எம்.ஜி.ஆர். வந்திருப்பார் என்றே சொல்லலாம்.
இரட்டைச் சவாரி
1977 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸோடு களம் கண்டு வென்றவர், சட்ட மன்றத் தேர்தலில் தனியாகவே நின்றார். அதிமுக, இந்திரா காங்கிரஸ், ஜனதா, திமுக என்று நான்முனைப் போட்டியாக இருந்த அந்தத் தேர்தலில் 30.4 % வாக்குகள் பெற்று ஆட்சிக்கு வந்திருந்தது அதிமுக. இனி தமிழகத்தில் போட்டி என்பது திராவிட இயக்கங்களுக்கு மத்தியில்தான் என்று எம்.ஜி.ஆர். ஒரு புதிய வரலாற்றைப் படைத்திருந்தார். முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் என்ற புதிய எம்.ஜி.ஆர். - கருணாநிதி உறவில் கனிவு, கசப்பு, கண்ணியம் அனைத்தும் சேர்ந்தே இருந்தன.
‘என்ன தவறு செய்தேன்?’
திமுகவும், இந்திரா காங்கிரஸும் 1980 நாடாளுமன்றத் தேர்தலில் கைகோத்தன. அதிமுகவுக்குக் கிடைத்தது இரண்டே இடங்கள்தான். எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை முடிந்தது என்றே நாஞ்சில் மனோகரன் உட்பட பலரும் எண்ணினர். 1980 பிப்ரவரி 17 அன்று அவரது ஆட்சி கலைக்கப்பட்டபோது “நான் என்ன தவறு செய்தேன்?” என்று மக்களிடம் கேட்டார். மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர். திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி வலிமையை அவர் தனியாகவே, பெரிய அளவு நிதி இன்றியும் சந்தித்தார். அதிமுக 38.8% வாக்குகள் பெற்றுச் சாதனை புரிந்தது.
எம்.ஜி.ஆரின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. மது ஆலை அதிபர்கள் புதிய நண்பர்களாய் மாறினர். முதல் ஆட்சியின்போதே கப்பல் பேர ஊழல், பஸ் தடங்கள் ஊழல் என்று திமுக குற்றம்சாட்டியிருந்தது. இம்முறை எரி சாராய ஊழல், எங்கும் எதிலும் ஊழல் என்று திமுக சுட்டிக்காட்டியது. எம்.ஜி.ஆர். இரண்டு விசாரணை கமிஷன்கள் அமைக்க.. மத்திய அரசு ரே கமிஷன் அமைத்தது. ஊழல் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர், இன்று அவரே ஊழல்வாதி என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தார். எனினும், மக்கள் கடைசி வரை அவர் நேர்மையானவர் என்றே நம்பினர்.
கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம், அதிக உரிமைகள் கோரி - தென்னக மாநில முதல்வர்கள் மாநாடு, பொதுத் தொகுப்பிலிருந்து அரிசிக்காக உண்ணாவிரதம் போன்றவை முக்கிய நிகழ்வுகள்.
எம்.ஜி.ஆரின் இரண்டாம் ஆட்சி இலவசங்களுக்கு வித்திட்டது. 1982-ல் ரூ.100 கோடி செலவில் அவர் கொண்டுவந்த சத்துணவு அவரை உச்சத்தில் கொண்டு நிறுத்தியது. எம்.ஜி.ஆர். தமிழகத்தை ஒரு நலத்திட்ட மாநிலமாகவும், ஊரக வளர்ச்சியில் அக்கறை உள்ளதாகவும் மாற்றினார். 1982-ல் கட்சிக்குக் கைகொடுக்க ஜெயலலிதாவைக் கொண்டுவந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்குத் தரப்பட்ட அதீத மரியாதை மூத்த தலைவர்களைக் காயப்படுத்தியது. 1984 நவம்பர் எம்.ஜி.ஆர். உடல்நிலை கவலைக்கிடமாக ஆனது. கட்சியும் ஆர்.எம்.வீ., ஜெயலலிதா அணிகள் என்று இரண்டாகப் பிரிந்திருந்தது.
திராவிட இயக்கக் கோட்டை
‘நானும் பிரார்த்தனை செய்கிறேன்’ என்று கருணாநிதி நண்பருக்காக இயற்கையை இறைஞ்சினார். இந்திரா காந்தி சுடப்பட்டு இறந்திருந்த பின்னணியிலும், எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் இருந்த பின்னணியிலும் நடந்த 1984 பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர். வென்றார். ‘சாவுக்கும் நோவுக்கும் ஓட்டு’ என்றார் கருணாநிதி.
எம்.ஜி.ஆரின் மூன்றாவது ஆட்சி 1985-ல் தொடங்கியது. உட்கட்சி சண்டை, ஈழப் பிரச்சினை, பேச முடியாத எம்.ஜி.ஆர். என்று நடந்தது நிர்வாகம். இம்முறை சட்ட மேலவை கலைப்பு, இந்தி எதிர்ப்புக்கு அரசியல் சட்டத்தைக் கொளுத்தியதற்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி பறிப்பு என்று ஒரு குறுகிய அரசியல் போக்கையே எம்.ஜி.ஆர். கொண்டிருந்தார். எனினும், இந்த மண்ணை ஒரு திராவிட இயக்கக் கோட்டையாக மாற்றியதில் எம்.ஜி.ஆரின் பங்கு யாராலும் மறக்கவோ மறைக்கவோ முடியாதது!
- இரா.கண்ணன், ஐக்கிய நாடுகளின் சோமாலியா ஹிர்ஷபெல்லே மாநில அலுவலகத் துணைத் தலைவர்,
அண்ணா, எம்.ஜி.ஆர். நூல்களின் ஆசிரியர்.
ஜனவரி 17: எம்.ஜி.ஆர். பிறந்தநாள்