தேடல்கள் முடிவதில்லை

நீர்த்துளிகளின்
சேர்க்கை கடல் !

இரு விழிகளின்
சேர்க்கை காதல் !

நீரின் சலனம்
அலைகள் !

உயிரின் சலனம்
மவுனம் !

மலர் இதழ்கள்
மொட்டவிழ்ப்பது போல
உன் மீதான பிணைப்பு
எப்போது நிகழ்ந்ததென்று
அனுமானிக்க
முடியவில்லை என்னால் !

நடையோ, உடையோ,
மொழியோ, முகமோ
சொல்லத் தெரியவில்லை
ஏதோ ஒன்று எனக்குள்
இடைவிடாது உன்னை
அசை போட அச்சாரமிட்டுவிட்டது !

காற்றும் ,நீரும்
வெயிலும் பட்ட விதை
மண்ணில். தானாக
துளிர்ப்பதுபோல்
உன் நினைவும்,
பார்வையும் ,ஸ்பரிசமும்
என் ஒப்புதல் பெறாமலேயே
உன்னை எனக்குள்
உயிர்ப்பித்து விட்டன !

ஒன்று மட்டும் புரிகிறது
காதல் வரும் காலம்
வாழ்க்கையின்
வசந்த காலம் !

காதல் சுகமானதுதான்
ஆனால் காத்திருக்கும்
கணங்கள் மிகக் கனமானவை !

உன்னோடு கைகோர்த்து
காலம் கரைத்திட ஆசைதான் !

ஆனால் உன் ஒப்புதலுக்காக
காத்திருக்கப் போவதில்லை நான் !

தேன் அருந்திட
வண்டுகளுக்கு
பூக்களின் அனுமதி
தேவையில்லை !
மகரந்த வாசம் போதும் !

காதல் காலம் தந்த பரிசு !
அதைக் கொண்டாட
உன் அருகாமை போதும்
அனுமதி வேண்டாம் !

நச்சுக்காற்றை உட்கொண்டு
உயிர்க்காற்றை உமிழ்ந்திடும்
தாவரம் போல் உன்
வெறுப்புக்களை
கிரகித்துக்கொண்டு
புன்னகயை மட்டுமே
பரிசளிக்க காலமெல்லாம்
முயற்சிப்பேன் !

சுவைகள் நாவோடு முடிந்து போகும் ,
வாசனைகள் காற்றோடு
கரைந்து போகும் !
காற்று பட்ட முகில்
மழையாகி தீர்ந்து போகும் !
உன் மீதான
என் காதலின்
தேடல் மட்டும்
தொடர்ந்துகொண்டேயிருக்கும்!
இப்படிக்கு
காதலுடன்
கவிஞன் !

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (20-Jan-18, 11:50 pm)
பார்வை : 1352

மேலே