ஒரு ஊரிலே ஒரு விவசாயி வாழ்ந்துவந்தான் - பரமகுரு கந்தசாமி
ஊரெங்கும் பசுமை வயல்,
வீதியெங்கும் விளைச்சளின் காய்ச்சல்.
நீர்நிலைகளை நிறைத்தபடி தண்ணீர்.
இவைகளை கடந்து சென்றால்தான் நிராமணி கிராமத்தின் வயல் எல்லைகள் முடிவடைகின்ற "நீரோடை" வரும், சில நேரங்களில் அங்கே "நீரும்" வரும்.
மயிலின் சத்தமும், மானின் தடமும் மறக்காமல் பதிந்தே பயிரிடப்படுகின்றன விவசாய நிலங்கள் யாவும் விஸ்தாரமாக. ஏரிக்கரையில் கால்நடை கடக்க, கதிரவன் உதிக்க, காயும் விலை நிலத்திடையே கரும்பு பயிர் செய்து வாழ்ந்து வந்தார் 1 -ம்தலைமுறை பொன்னுசாமி.
காலங்கள் கடக்க கடக்க .....
கரும்பு - கம்பாய் போனது....
கம்பு - நெல்லாய் போனது....
நெற்பயிர் யாவும் - " எள்ளாய் " போனது ....
அடுத்த தலைமுறையில் எள்ளும் மஞ்சளாய் மாறி - மண்ணாய் போனது...
நாட்கள் கடுந்து அவர்மகன் 2 -ம் தலைமுறையை சேர்ந்த கந்தசாமி - விளையும் நிலத்திடையே நெல்லிற்கு பதில் சவுக்கு பயிர் செய்தார். சில நேரங்களில் வரகும் வாழ்ந்து விட்டுத்தான் போனது. மண்ணாய் மரித்த மணல் வெளியில்....
இபோதெல்லாம்
கூட்டு கிணற்றுள் நீரில்லை...
நீர் இருந்தும் மின்சாரம் இல்லை....
மின்சாரம் இருந்தும் விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை....
காலங்கள் கடந்து சென்றன....
இப்போதெல்லாம் கரும்பும், நெல்லும் வீதிகளில் காய்வதில்லை...
சிமெண்ட் சாலைகள் காய்கின்றன.....
பசுமை வயல்கள் யாவும் வெறுத்தோடி முற்களாய் காணப்படுகின்றன....
பழைய முகவரிகளை தொலைத்தப்படி....
மயில் சத்தம் மங்கி போனது
மான் தடம் - தடமழிந்து போனது
கிணற்றுக்குள் பாம்பும், ஆலமரமும் குடி கொண்டன
மோட்டார் யாவும் கண்காட்சி பொருளாய் போனது
நீரோடை வற்றி அந்த கிராமத்தின் சுடுகாடுகள் ஆகின....
"ஒரு ஊரிலே ஒரு விவசாயி வாழ்ந்துவந்தான்"
அதிலாவது அவன் வாழ்ந்துவிட்டு போகட்டும், என 3 -ம் தலை முறையில் அவரது மகன் பரமகுரு
விவசாயம் செய்கிறான்...
கடந்து வந்த பாதைகள் யாவும் கதைகளாக.....
(ஒரு உண்மைக்கதையை கற்பனை கலந்து எழுதியது )
-கவிஞர் பரமகுரு கந்தசாமி.