நெஞ்சோடு கலந்திடு-அத்தியாயம்-11
....நெஞ்சோடு கலந்திடு....
அத்தியாயம் : 11
அவனிடமிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்ட பின்னும் என்னால் அங்கே ஓர் விநாடி கூட நிற்க முடியவில்லை...வரத்துடித்துக் கொண்டிருந்த கண்ணீரை எனக்குள்ளேயே விழுங்கிக் கொண்ட நான்,அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே ஒரே ஓட்டமாக வந்துவிட்டேன்...அவனும் என்னைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை...
எப்படி வீட்டை வந்தடைந்தேன் என்று தெரியவில்லை...வீட்டு வாசலைக் கண்டதுமே அதுவரை நேரமும் உள்ளே அடக்கி வைத்திருந்த அழுகை மொத்தமும் வெடித்துக் கிளம்பியது...என்னால் இப்போதும் அவனது வாய் உதிர்த்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை...அதே நேரத்தில் அதை என்னால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை...காரணம் அவன் அதை என்னிடத்தில் சொல்லும் போதே அவனது விழிகளில் பொய்மை இருக்கவில்லை...
அவனது அந்த வார்த்தைகளையே நினைத்து நினைத்து அழுது ஒய்ந்த நான்,அப்பா வெளியே வருவது போன்று அரவம் தெரியவும் வேகமாக என் கண்களிரண்டையும் துடைத்துக் கொண்டேன்...அதற்குள் என்னை நெருங்கிவிட்டவர்,
"என்னம்மா கண்ணெல்லாம் கலங்கியிருக்கு...அழுதியா நித்தியா...??.."
இல்லை என்று என்னால் எப்படி அவரிடம் பொய்யுரைக்க முடியும்...அதுவும் அப்போது நான் இருந்த மனநிலையில்...மீண்டும் என் கண்கள் இரண்டும் குளமாக அவரது மார்பில் சாய்ந்து கொண்டேன்...
என்னை ஆதரவாக அணைத்துக் கொண்ட அவரது கரம் என்னைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றுப் போனது...ஏற்கனவே உடைந்து போயிருந்த உள்ளம்...என் தந்தையின் அணைப்பில் இன்னும் நொறுங்கிப் போனது...
"என்னடா ஆச்சு...இன்னைக்கு கடைசி நாள் என்டதால எல்லாரையும் பிரியுறது மனசுக்கு கஸ்டமாத்தான் இருக்கும்...அதுக்காக இப்படியா சின்னக் குழந்தை மாதிரி அழுகுறது...??..."என்று அவரால் ஊகிக்கப்பட்ட காரணத்திற்கு என்னைச் சமாளித்து தேற்றிக் கொண்டிருந்தார்...ஆனால் அவருக்குத் தெரியவில்லை...என் வாழ்க்கையே என்னைவிட்டு விலகிவிடப் போகிறதென்று...
என்னை விலக்கி என் விழிநீரினைத் தன் கரங்களால் துடைத்துவிட்டவர்,
"இதுக்கே இப்படி அழுதா...இன்னும் கொஞ்ச நாளில இந்த அப்பாவை விட்டு எப்படித்தான் பிரிஞ்சிருக்கப் போறியோ...??..."
அவனின் தாக்கத்தில் என் உள்ளம் ரணப்பட்டிருந்ததில் என் தந்தை கூறியது எனக்கு உண்மையிலேயே புரியவில்லை...என்னவென்று புரியாமல் அவரையே கேள்வியோடு நோக்கிய நான்,
"என்னப்பா சொல்றீங்க??நான் ஏன் உங்களைப் பிரிஞ்சு போகப் போறேன்...??..."
"இன்னும் என் பொண்ணு சின்னப்பிள்ளை இல்லையே...அவதான் பெரிய மனுசி ஆகிட்டாளே...அதனால அவளோட அப்பா அவரோட பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி அழகு பார்க்கப் போறாராம்....அதுக்கப்புறம் நீ என்னை பிரிஞ்சு போய்தானே ஆகனும்...."என்று சொல்லும் போதே அவரது குரல் கலங்குவதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது...
ஆனால் ஏற்கனவே அவனால் கலங்கிப் போயிருந்த உள்ளம்,அப்பா சொன்ன செய்தியில் மேலும் உடைந்து போனது....அவரைத் தேற்றுவதா...என்னைத் தேற்றிக் கொள்வதா என்று புரியாத அந்த சூழ்நிலையில் வழிந்த கண்ணீரோடு அப்பாவைத் தேற்றும் வழி புரியாது அப்படியே நின்றேன்...
என் கண்ணீரைக் கண்டு மீண்டும் பதறிப் போனவர்,
"அழக்கூடாதுடா....நீ எங்க இருந்தா என்ன...நீ என்னோட மகள் என்டுற உறவு என்னைக்குமே மாறாது...என்னோட பொண்ணு நித்தியா சந்தோசமா இருந்தா எனக்கு அதுவே போதும்..."
"உன்னைக் கேட்காம உன் கல்யாணத்தை அப்பா முடிவு பண்ணிட்டேன்னு யோசிக்காதடா...உனக்கு பிடிச்சிருந்தா மட்டும்தான் மத்தது எல்லாமே...ஆனால் எனக்கு நம்பிக்கையிருக்கு..நிச்சயமா உனக்கு இந்த மாப்பிள்ளையைப் பிடிக்கும்...."
"வருணைத்தவிர வேறு யாருக்கும் என் மனதைக் கொடுக்க முடியாதென்பதை என் தந்தைக்கு எப்படிப் புரிய வைப்பேன்...??இப்போது இவரிடம் எனக்கு வருணைத்தான் பிடித்திருக்கிறது என்று சொல்ல முடியாது...அவனுக்கு...அவனுக்குத்தான் இப்போது இன்னொருத்தியைப் பிடித்துவிட்டதே..."அதை என் மனம் மீட்டிக் கொள்ளும் போதே சொல்ல முடியாத வலியொன்று என்னைத் தாக்கியது...
"என்னம்மா யோசிக்குற...எதுவாயிருந்தாலும் அப்பாகிட்ட சொல்லுடா...??..வாற மாசம்தான் வருணோட குடும்பம் சம்பந்தம் பேச வாறாங்க....உனக்குப் பிடிக்கலைன்னா சொல்லு...நான் சேகர்கிட்ட பேசிக்கிறேன்...அவன் புரிஞ்சுப்பான்..."
"அப்பா என்ன சொல்கிறார்..??..வருணுடைய குடும்பமென்றா சொன்னார்...அப்படியென்றால்...அப்படியென்றால் அவன் என்னைத்தான் சொன்னானா...??...இடியட் வருண்,ஒரு கொஞ்ச நேரத்திற்குள் என்னை எவ்வளவு அழ வைத்துவிட்டான்...அவனை..."என்று என் மனதிற்குள்ளேயே அவனோடு நான் செல்லச் சண்டை போடத் துவங்கி விட்டேன்...
அதுவரை நேரமும் என்னை வதைத்துக் கொண்டிருந்த வலிகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போக...எனக்கு துள்ளிக் குதித்து ஆட வேண்டும் போல் இருந்தது...ஆனால் அப்பா என் முன்னே பதிலுக்காய் காத்து நிற்கிறார் என்பது புரிய,என் சந்தோசத்தை எனக்குள்ளேயே அடக்கிக் கொண்ட நான்,
"எனக்கு சம்மதம் பா...நீங்க சேகர் அப்பாகிட்ட சொல்லிடுங்க...ஆனால் வருண்கிட்ட மட்டும் என்னோட சம்மதத்தை சொல்லாதீங்க...அவன்கிட்ட நானே சொல்லிக்கிறேன்..."என்று சொல்லி முடித்ததுமே அதற்கு மேலும் அங்கே நிற்க முடியாமல் உள்ளே சென்று விட்டேன்...என் தந்தையின் சிரிப்புச் சத்தம் என் காதுகளையும் மனதையும் நிறைத்தது....
மறுநாள் அவனுக்காக கடற்கரையில் காத்துக் கொண்டிருந்தேன்...எனக்குத் தெரியும் என்னைத் தேடி அவன் நிச்சயம் வருவானென்று...மனமெல்லாம் ஓர்வித படபடப்பில் அடித்துக் கொண்டிருக்க...என் அத்தனை துடிப்புக்களுக்கும் சொந்தமானவன்,என் முன்னே வந்து நின்றான்...
அவன்தான் வந்து நிற்கிறான் என்று தெரிந்தும் நான் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை...நேற்று அவன் என்னோடு விளையாடியது போல் இன்று அவனோடு விளையாடிப் பார்க்க மனம் ஆசை கொண்டது..இதுவரை நாளும் நான் அவனோடு ஆடிய கண்ணாம்மூச்சி ஆட்டம்தான் நாளையோடு முடிவிற்கு வரப்போகிறதே...??
ஆம்,நாளைதான் அவனது இருபத்தியேழாவது பிறந்ததினம்...அவனுக்குப் பிறந்தநாள் பரிசாக இதுவரை நாளும் எனக்குள் ஒளித்து வைத்திருந்த என் காதலை அவனிடம் கொடுக்கப் போகிறேன்...அதனால் இறுதியாக அவனோடு ஒரு முறை வம்பு செய்திட உள்ளம் விரும்பியது...
அவனைக் கண்டும் காணாதது போல் பாவனை செய்யத் தொடங்கினேன்...அவனைத் தவிர மற்ற அனைத்தையும் பார்த்து வைத்தேன்...அதில் அவன் கடுப்பாகி சண்டை பிடிப்பான் என்று நான் நினைத்திருக்க,அவனோ குறும்புச் சிரிப்போடு என் அருகே நெருங்கி அமர்ந்தான்...
ஒரு சிறிய இடைவெளியில் அவன் என் அருகே இருக்க...அந்த ஸ்பரிசமே என்னை எதுவோ செய்யத் தொடங்கியது...என்னால் அவனை விட்டு தள்ளிச் செல்லவும் முடியவில்லை...காரணம் அவனது கரம் எப்போதோ என் கரத்தினை அழுத்தமாகப் பற்றியிருந்தது...சில நிமிடங்களிற்கு மௌனமே எங்களிருவரையும் சூழ்ந்து கொள்ள...வார்த்தைகளை மறந்து பார்வைகளைப் பரிமாறிக் கொண்டிருந்தோம்...
அப்படியே அவன் தோளோடு சாய்ந்து என் காதலைச் சொல்லிவிடத்தான் மனம் துடித்தது...ஆனால் அதே மனம் "இன்னும் ஒருநாள்தானே நித்தியா...அதுவரை உன்னால் காத்திருக்க முடியாதா....??.."என்றும் கேட்டுக் கொண்டது...என்னோடும் மனதோடும் போராடிக் கொண்டிருந்த நான்..கொஞ்சம் கொஞ்சமாய் அவன் விழிகளுக்குள் விழத் தொடங்கினேன்....
நினைவுகள் வீசும்.....

