என் இதயத்தில் நீ பிறந்த நாள் -1

விடுப்பில் வந்திருந்த
என்னிடம் உனது
புகைப்படத்தை நீட்டி
பிடிச்சிருக்கா பாரு
என்றாள் அம்மா
அக்கறையோடு தான்

ஒன்னும் வேண்டாம்
என்று சொன்ன நான்
கவரை பிரிக்கவேயில்லை
அந்த புகைப்படம்
உன்முகம் எதுவும்
பார்க்கும் ஆசையும்
கொஞ்சமும் துளிர்க்கவில்லை

நெஞ்சுமுழுக்க கோபம்
இரண்டுநாள் முன்னாடி
எப்படி எட்டிப்பார்த்ததோ
அப்படியே முட்டிக்கொண்டு
இன்னமும் நிற்கிறது

இரண்டு நாட்களுக்குமுன்
இரவின் மடியில்
இமையை மூட
நினைத்த தருணத்தில்
தொலைபேசி அழைப்பு
அண்ணன் என்றதும்
இந்நேரத்தில் என்ன
என்று பரபரப்பாக
ஒன்னும் இல்லை
என்று பீடிகையோடு
ஆரம்பித்தவனை நான்
என்ன சொல்லு
சொல்லு என்றேன்

வெள்ளிக்கிழமை கிளம்பி
வந்துவிடு நீ
சனிக்கிழமை அலுவலகம்
இருந்தால் அன்னிக்கு
கிளம்பி வந்துவிடு
நான் போனவாரம்
தானே வந்தேன்
என்ன என்றேன்

பெங்களூரில் இருந்தமையால்
ஒரு முழு இரவு
பயணப்பட்டாலே ஊரை
எட்டிப்பார்க்க
முடியும் என்பதால்
மாதம் ஒருமுறை
ஊருக்கு போவது
தான் வழக்கம்

ஞாயிற்றுக்கிழமை
உன்னை பெண்
பார்க்க வருவாங்க
அதனால் தான்
என்று போட்டு
உடைத்தான் அண்ணன்

நான் மறுவார்த்தை
பேசும்முன் அவர்
நல்ல பையன்
நல்ல வேலை
நல்ல குடும்பம்
பெங்களூரில் வேலை
பெரிய நிறுவனம்
என்று அடுக்கிக்கொண்டே
போனான் அவன்

அதிர்ச்சியில் இருந்து
அகலாத நான்
வரன் பார்க்கும்
படலம் மூன்று
மாதம் முன்
அரங்கேற்றம் ஆனது
தெரியும் அந்த
போட்டோக்ராபர் வந்து
சேலைக்கட்டி பூவைத்து
புகைப்படம் எடுத்த போது


ஆனால் இவ்ளோ சீக்கிரம்
அதுவும் இப்படி இரண்டு
நாள் கழித்து பெண்பார்க்கும்
படலம் நினைக்கவில்லை

அதுவும் ஒரு
புகைப்படம் கூட
அனுப்பவில்லை
அவன் பெயர்
வேலை செய்யும்
நிறுவன பெயர்
இந்த இரண்டு
தகவல் அளிக்கப்பட்டது
முடிந்தால் நட்பு
வட்டத்தில் விசாரித்துக்கொள்ள

போன வாரம்தான்
ஊருக்கு வந்தேன்
இரண்டு வாரம்
கழித்து பார்க்கலாம்
என்று சொல்லி
தள்ளிப்போட பார்த்தேன்
அந்த பையன்
இந்த வாரம்
தான் வாரான்
எல்லாம் சொல்லியாச்சு
அப்பா பேசியாச்சு
முடித்துவிட்டான் அண்ணன்

என்கிட்டே கேட்கவில்லை
புகைப்படம் பார்க்கவில்லை
பேசியாச்சு என்றதும்
பொத்துக்கொண்டு வந்த
கோபத்தை அடக்கி
கொஞ்சம் முனகியபடி
போட்டோ என்றேன்

அப்போது இப்போதுபோல
வாட்ஸாப்ப் இல்ல
வீட்டுக்கு சனிக்கிழமை
வந்து பார்த்துரலாம்
உனக்கு வேண்டும்
என்றால் நான்
நாளை கணினி
கடை சென்று
ஸ்கேன் செய்ய
வேண்டும் கையில்
தான் புகைப்படம்
இருக்கிறது தன்னிடம்
மெயிலில் இல்லை
எனக்கை விரித்தான்

வேண்டும் ஏன்றால்
என்ற வார்த்தையில்
ஆத்திரத்தின் உச்சிக்கு
சென்ற நான் சரி
என்னவோ செய்ங்க
என்று சொல்லி
தொலைபேசியை வைத்தேன்

அந்த இரவு
நீளமான இரவாக
தோன்றியது ஏனோ
அம்மாவோடு துணிக்கடைக்கு
போவது நியாபகம்
வந்து போனது

அம்மா நாற்காலியில்
உட்கார்ந்து கொள்வாள்
நான் தேர்வுசெய்யும்வரை
பார்த்திருந்துவிட்டு பின்
நான் நீட்டும் இரண்டு அல்லது
மூன்று ஆடையில் ஒன்றை
தேர்வு செய்வது அம்மா

ஆடைக்கே இப்படி
என்றால்என்னை
ஆளப்போறவனுக்கு
எப்படி இருக்கும்
என நினைத்தேன்
எப்படி இருக்கவேண்டும்
என்று நினைத்து
பார்த்தேன் எரிச்சலும்
எண்ணங்களும் எழுந்து
உருண்டு ஓட
தொடங்கின ...

மனம் கொஞ்சம்
சரிந்து நில்லுங்க
லேசாக சிரிங்க
என்ற போட்டோக்ராபர்
சத்தத்தில் மெல்ல
பெருமூச்சு விட தொடங்கிற்று


என் இதயத்தில் நீ பிறந்த நாள்
கதையும் கவிதையும் தொடரும்

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (23-Jan-18, 3:28 am)
பார்வை : 1048

மேலே