றெக்கை முளைத்தேன் றெக்கை முளைத்தேன்
றெக்கை முளைத்தேன் றெக்கை முளைத்தேன்
========================================
கட்டைவிரல் உயர்த்தி
இரு சிவந்த ஹைபிஸ்கஸ் பூக்களை
முன்பக்கம் தெரியும்படி
மற்ற நான்கு விரல்களுக்குள் ஒளித்து வைத்திருக்கிறாய்
தழுவ ஏதுவாக இருக்கின்றன
உன் நீள் விரல்கள்
அதுமட்டும்தான் என் கண்களுக்குத் தெரிகின்றன
அதுமட்டும்தான்
என் எண்ணத்திற்குள் பதிவாகின்றன
குளிரில், நாசி அடைந்து கிடக்கிறேன்
நாம் பேசிக்கொண்டிருக்கையில்
என் குரலில் கிறக்கத்தை
காணுகிறேன்
உனக்குக் காணமுடிந்தால் சொல், அறிகிறேன்
என்னைப்பத்தி
அதிகம் நீ சொல்லியப்போதிருந்துதான்
என்னை நான்
அதிகம் ரசிக்கத் துவங்கியிருக்கிறேன்
எனக்குத்தான் தெரியும்
உன்னோடு ஐந்து நிமிடங்கள் பேச,
எழுந்த நேரம் முதல்
எத்தனை தடவை ஒத்திகைப்பார்க்கிறேன் என்று,
பேசிமுடிந்த நொடிகளுக்கப்பால்
மீதி உள்ள சமயம்
என் கண்கள் பொதிந்து கிறங்கிவிடப்போகின்றன
அத்தனை அழகாகிவிடுகிறேன்
இங்கிருப்பவர்கள்
எல்லோரும்
நானும் என் கண்களும்
அழகாய் இருப்பதாய் சொல்லத்தொடங்குவார்கள்
என் வருத்தமெல்லாம்
இது இல்லை
கிறங்கிக்கிடக்குமென் கண்களைப்பார்த்து
கிறக்கம் பொதிந்த கண்களுடன்
நீ அழகாய் இருக்கிறாய் என்று சொல்லிவிட
அருகலில்
ஒருத்தியும் இல்லையே என்பதுதான்
இதெல்லாம் யூகித்தே
அந்த சமயம் அழைக்கிறேன்
குளித்து முடித்துவிட்டு
அரைகுறை ஆடையுடன் நின்றுகொண்டிருக்கலாம்
பாவாடை நாடா
கட்டிக்கொண்டிருக்கவேண்டும்
மார்புப்பகுதி
பெருத்திருப்பதால்
கச்சையின்
ஊக்கிட்டுக்கொள்ள
அசவுகரியம் கண்டிருக்கக்கூடும் உன் கைகள்
அழைப்பு மணியின்
ஆரவாரத்தில்
மறுபடியும் எல்லாம் அவிழ
அலைப்பேசியை
வைத்த இடம் மறந்து
அரக்கப்பறக்கத் தேடிக்கொண்டிருப்பாய்
முதல் புணரலிலிருந்து தான்
உன்னிடமிருந்து
நுகர்தலின் இம்மியத்தை பழகியிருக்கிறேன்
அத்தனை இதமூட்டும்
நுகர்தலின் சூட்சமங்களை
சதா நீ குறை சொல்லிக்கொண்டிருக்கும்
உன் சமையலில் நுகர்த்திவிடு
இரண்டாம் சந்திப்பில்
செம்பருத்தியின் அந்த பிடித்த வாசனையை
பழகியிருந்தேன்
அன்று
பூவைப் புணர்ந்தேனா ?
செம்பருத்திப் பூவாசம் புணர்ந்தேனா ?
நினைவிலில்லை
உனக்குத் தெரிந்தால் சொல், கேட்கிறேன்
பரிமாறித்தீர்த்த வாசனையை,
நினைக்க நினைக்க
இதோ முன்னால் தெரியும் மொபைல் டவரொன்றின்
உயரமேறுகிற மனதுக்கு,
அவ்விளிம்பினின்றுப்
பறக்கவேண்டும் போலிருக்கிறது,
றெக்கை முளைக்கிறது
அனுசரன்