மழை பெய்ய

பாதைகள் அன்று
பக்கத்து ஊர்களுக்கு வழிகாட்டியது,
பேய், பிசாசு என்று
பேசிக் கொண்டபோதும்
பத்திரமா போய் வந்தார்கள்

இப்போதோ
இடம் பெயர்ந்தது போல்
பேயும், பிசாசுகளும்
வழியெங்கும் நிசமாகவே
வீழ்ந்து கிடக்கின்றன

போதை சரக்கால்
போக்கத்து போன சாலைகள்
அடுத்த ஊர் கூட
அண்டை நாடு போல
அந்நியபட்டு போனது

மாமூல் மகசூலில்
மதியிழந்து மனமகிழும்
மகாதேவர்கள்
மக்களின் குறைகளை
அறிவார்களோ, என்னவோ?

பெத்த பிள்ளைபோல
பார்த்து வளர்த்த நிலம்
நீர்வரத்து இல்லாம—காய்ந்து
நிலம் வெடித்து போனதால்
நிலைகுலைந்த விவசாயி

ஒரு முழ கயிற்றுக்கு
உறவாகிப் போனான்,
வருண பகவானுக்குக் கூட
விபரம் தெரியாதோ?—அவனுக்குமா
மாமூல் தரவேண்டும்
மழை பெய்ய!

எழுதியவர் : கோ. கணபதி. (24-Jan-18, 11:45 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 43

மேலே