நிவேதனமே
நீ என்னை காதலித்த பின்பு தான்
வாழ்க்கையின் வசீகரப்
பேருண்மையை
நான் அனுபவித்தேன்.....
உன் மெல்லியப் புன்னகைச்
சாரல் பட்டு தான்
என் இதய அறைகள்
விசாலமாகத் திறந்துகொண்டன...
தெரிந்தோ தெரியாமலோ
நீ உதிர்த்துச் சென்ற
உன் கூந்தல் பூக்கள் தான்
என் மனப்புற வங்கியின்
வைப்பு நிதி ...
உன் துப்பட்டாத் தீண்டல்கள்
சருகுக் காட்டில்
அக்னி குண்டங்கள்.....
உருண்டுருண்டோடும்
உன் கருவிழிப் பந்துகள்
என் மனச் சுவற்றில் பட்டு
தெறிக்கையில்
என் மௌன தவம் களைந்து
மோகனப் பரவசம் கண்டேன்....
இரும்புத் திரைகளை
இளவம்பஞ்சாய்
கலைந்துப் போடும்
உன் மெல்லியப் புன்னகை......
இப்படி எண்ணிலடங்கா
அதிசயங்களின்
அதிசயம் நீ.....
யாருக்கும் கிடைக்காத
அரிய பொக்கிஷம்
உன்னை என் ஆழ் மன
அறைக்குள் வைத்து...
அன்றாடம் பூஜித்தேன்....
நீ இன்று
யாருக்கோ வாழ்க்கைப் பட்டு
தொலை தூரம் சென்றாய்.....
உன்னை ஒரு முறை....
ஒரே ஒரு முறை
சந்திக்க வேண்டும்...
எனக்குள் சேமித்து வைத்த
எண்ணப் பிரளயத்தை
உன் பஞ்சுப் பாதங்களில்
வைத்து...
பின்
நான் முழுதாய் விடை பெற வேண்டும்...