அறிந்தவர் புரிந்திடுவர்
தாசியென்றும்
வேசியென்றும்
கூசிடும் சொல்லால்
ஏசிடும் போரிங்கு !
சாதிய மோதலில்
சாதனை புரிந்திட
ஆதிக்கம் செலுத்த
ஆணவப் போரிங்கு !
ஈரோட்டில் உதித்தவன்
இறுதிவரை போராடி
இதயத்தில் உழுதான்
சாதிக்கு எதிராக !
எட்டயபுரத்தானும்
எட்டியவரை எழுதி
முட்டியும் மோதினான்
சாதிகள் இல்லையென !
அணைக்க நினைத்து
அயர்ந்தனர் அறிஞர்கள்
அறவழியில் நின்று
சாதித் தீயினை !
வெகுண் டெழுந்த
வெற்று வேட்டுகள்
வெடிக்காமல் சிதறின
சாதிக் கொடிகளுடன் !
மேற்கோள் காட்டியதால்
மேதினியில் காரசாரம்
மேலோரெனக் காட்டிட
மேலும்மேலும் பிரசாரம் !
வன்முறை பேச்சுக்கள்
வரைமுறை கடந்தது
பழிதீர்க்கும் படலங்கள்
பலராலும் அரங்கேறின !
விஞ்ஞான உலகத்தில்
மெஞ்ஞான ஆராய்ச்சி
அஞ்ஞானம் இதுவென
அறிந்தவர் புரிந்திடுவர் !
சாதியிலா சமுதாயம்
நிலையாய் தழைத்திட
களைவோம் மனதினில்
களிப்புடன் வாழ்வோம் !
சாதியெனும் சாயம்
சகலத்திலும் நீங்கி
வேதியியல் மாற்றம்
வேகமாய் நிகழட்டும் !
பழனி குமார்