Whatsapp வாட்ஸாப்

யார் நீ?
எங்களை என்ன செய்கிறாய்?
உன்னுள் மூழ்கி விட்டோமா ?
இல்லை
உனக்குள் விழுங்கி விட்டாயா? தெரியவில்லையே...
தினசரி நீ சொல்வதையெல்லாம் நம்புகிறோம், உண்மையோ பொய்யோ எல்லோர்க்கும் பகிர்ந்து விடுகிறோம் ..
எங்கள் நட்பின் முதல் பிரிவின் போது
சேர்த்துப் பிடிக்க நீ வந்தாய், இன்றோ சேராமல் பார்த்துக் கொள்கிறாய்....
எங்கள் உணர்ச்சிகளின் உச்சத்தில் மட்டும் சரியாக உதவுகிறாய்,
மற்ற நேரம் அதை எங்களுக்குள்ளேயே மறைத்து விடுகிறாயே
ஏன்?..
இன்று கூடிச் சிரிப்பதில்லை
குறுஞ்செய்தியில் மட்டுமே சிரிக்கிறோம்..
முகம் தேடிச் செல்வதில்லை
புகைப்படங்களாய் மட்டுமே ரசிக்கிறோம்...
பிறந்த நாளுக்கும், திருமண அழைப்புக்கும் மட்டுமே
எங்களை அதிகம் காண முடிகிறது,
வாழ்த்துச் சொல்லவும்...
நன்றி சொல்லவும்...
சில வார்த்தைகள் கொண்டு,
உன் குறுநகைகள் கொண்டு....
அன்று கை கோர்த்து கொண்டாடிய கூட்டம், இன்று கைபேசிக்குள் கொண்டாடுகிறது கூட்டம் கூட்டமாய்...
உனக்கு ஒன்று தெரியுமா?
எங்கள் நட்பை ஒரு நொடி சிந்தித்தால் போதும்,
உலகம் துறந்து, கவலை மறந்து
அன்று ஒன்றாய்
கைக்கொட்டிச் சிரித்த புன்னகையெல்லாம் நினைவில் வருகிறது...
உன்னால் கைபேசியில் சிரித்த எதுவும் வருவதில்லை...
ஒவ்வொரு நாளும் உன்னோடு பயணிக்கும் எங்களுக்கு எதையெதையோ சொல்லிவிட்டு போகிறாய், இதையும் கொஞ்சம் சொல்லிவிட்டு போ..
ஒரு மாற்றம் துவங்கட்டும்.....