ஆம் அவள் தாசி தான்
மான மறவர் கூட்டம்தனைப் பேரன்பினால் ஆண்டாள் !
ஆம் என் தாய் தாசி தான் !
எரிவது விறகோ இவளோ இருக்கும் வரை கரும்புகையோடு மல்லுக்கட்டியே மாண்டாள் !
ஆம் அவள் தாசி தான் !
கேட்டும் கொடுக்கா தெய்வங்களின் மத்தியில் கேளாமல் தரும் விசித்திர தெய்வம் பாண்டாள் !
ஆம் அவள் தாசி தான் !
வெறும் கைகளும் கறைந்து போகும் வறுமையிலும் வயிறை நிரப்ப எப்படித் தீர்வைக் காண்டாள் ?
ஆம் அவள் தாசி தான் !
பணமிழந்து,மானமிழந்து,மனமிழந்து அழுவதற்கு கண்ணீரும் இழந்து நிற்கயில் தேற்றிக் குடும்பத் தேரிழுக்கும் வித்தையைக் கையாண்டாள் !
ஆம் அவள் தாசி தான் !
தந்தையுடன் பிணக்குறும் நேரங்களில் அடிபட்டோ,மிதிபட்டோ,ரத்தக் கறை பட்டோ கிடப்பினும் கண்ணீர்,எச்சில்,சளியால் முந்தானை நனைத்தாளே தவிர ஒருநாளும் வீட்டின் படி தாண்டாள் !
ஆம் அவள் தாசி தான் !
தன்னிலை மறந்து தன் சுற்றமே சித்தமாய்க் கிடக்கும் இவ்வாண்டாள் !
ஆம் இவள் தாசி தான் !
ஆண் பதம் அவன் என்றால் சரியான பெண் பதம் அவள் தான் !
ஆண்டான் ஆண் பதமெனில் ஆண்டாள் பெண் பதம் தான் !
தாசன் ஆண் பதமெனில் தாசி பெண் பதம் தான் !
கண்ணதாசன் பெண்ணாய்ப் போனால் கண்ணதாசி தான் !
பாரதி பித்து பெண்ணுக்கு பிடித்துப் போனால் பாரதிதாசி தான் !
ஊண் உருக
உயிர் உருக
கண்ணீர் மல்க
கணத்த இதயத்தோடு சொல்கிறேன் !
ஆம் என் தாயும் தாசி தான் !
தன் ஊணை ஊணாய்
தன் உயிரை உயிராய்
தன் உதிரத்தை உணவாய்ப்பிரித்து
கண்ணுரக்கம் மறந்து
தன்னையும் அறியாமல் அயர்ந்து
தன் சுக துக்கம் துறந்து
இருப்பதைப் பகிர்ந்து
இல்லாததைத் தனதாக்கி
எச்சில் சோறுகளில் வயிறு நிரப்பி
ஒட்டுச்சீலைகளில் மானம் மறைத்து
ஒற்றைக் கயிறை மட்டும் அணியாய்க் கொண்டு
பானைக் கரியால் முகம் பேணி
அடுப்பிற்கும் ஆக்ஸிஐன் தந்து
மூச்சின் இறுதிவரை இருப்பதை இரவாமல் தந்து
இல்லை என்பதை இல்லாமையாக்கி
நான்கு சுவர்களை மட்டுமே உலகமாய்க் கொண்டு வாழும்
ஒவ்வொரு தாயும் தாசி தான்!
ஆம் குடும்பதாசிகள் தான்!