என் இதயத்தில் நீ பிறந்த நாள் 2
நிச்சயமாய் நேசிப்போமா என்ற
நிதர்சனம் தெரியாமலே
நடந்து முடிகிறது
நிஜத்தில் பல
நிச்சயதார்தங்கள்
நானும் விறல்
நீட்டினேன் நீ
மோதிரம் இட
அந்த ஒற்றை புகைப்பட படலம்
வீட்டில் வரன் பார்ப்பதை
ஆரம்பிக்க போகிறோமென்பதை
வாத்தியம் ஊதுவதைப்போல
மெல்ல சொன்னார்
அப்பா ஒருநாள்
ஸ்டூடியோ போய் ஒரு
போட்டோ எடுக்கணும்
விழித்த என்னிடம்
புடவை கட்டி
புகைப்படம் எடுக்க
என்றதும் சட்டென்று
புத்திக்கு உரைத்துவிட்டது
அப்பாவிடம் எப்போதும்
ஆமா சாமி போட்டே
பழக்கப்பட்ட பெண்
என்பதால் ம்ம்
என்று நகர்ந்தேன்
அனைத்தும் இப்போது
அம்மாவிடம் கொட்ட
ஆரம்பித்தேன் அடைமழையாய்
கோபமும் குழப்பமுமாய்
என்னம்மா இப்படி
சொல்றாங்க அப்பா
என்ன இப்போ
அவசரம் அம்மா
ஏன் இப்படி
பண்றீங்க அம்மா
என்று அடுக்கிக்கொண்டே
போனேன் நான்
அடுப்பங்கரையில் நின்றவளிடம்
பல்ல தேச்சுட்டு
ஆப்பம் சாப்பிடவா
என்ற அம்மாவின்
ஆப்பம் அன்று
அழகாக தெரியவில்லை
அசிங்கமா தெரிய
ஆத்திரத்தில் அம்மா
நான் என்ன சொல்றேன்
என்று வெடித்தேன்
எப்போதும் போல
கொஞ்சமும் கோபம்
காட்டதெரியாமல்
அன்னை கொஞ்சம்
அன்பாக சொன்னாள்
அன்பாக மட்டுமல்ல
அழகாகவும் கூட
இரண்டு வருடம்
தானே கேட்டாய்
முடிந்து விட்டதல்லவா
செல்ல மோளே
அவளின் ஒரு
வரி பதிலில்
கூத்தாடிய என்
அணுகுண்டு கோபம்
கொஞ்சம் புஷ்வானம்
ஆகிப் போனது
அவளின் செல்லம்
கொஞ்சலில் மிஞ்சிய
கோபமும் மெல்ல
அணைந்து போனது
மெல்ல நகர்ந்தேன்
அந்த பஞ்சு போன்ற
ஆப்பத்தை பாலில்
பிசைந்த விரலைபோல
மனசை பிசைய
துவங்கியது பயம்
இப்போது
சரியாக தான்
சொல்கிறாள் அம்மா
வேலைக்கு சேர்ந்து
வருடம் இரண்டு
ஆகி விட்டிருந்தது
இந்த மாதத்தோடு
காத்திருந்திருப்பார்களோ
ஆடு வெட்ட ஐயோ
என்று புலம்பியது
அடுத்து யாரிடம்
போக அக்காவிடம்
தான் வேறு யார்
அவளைத் தவிர
அத்தானின் அவளாகிருந்த
அக்காவை தொலைபேசியில்
அழைத்து பாருடி
என்றேன் அவளோ
நீ கேட்ட இரண்டு வருடம்
கணக்கு முடிஞ்சாச்சு
இனி உன் அத்தானை
கண்டுபிடிக்க வேண்டாமா
அதுக்கு தான் போய்
புகைப்படம் எடுத்துக்க
என்று சிரிப்போடு சொல்லி
அப்புறம் பேசுறேன்
அத்தான் வந்துவிட்டார்
என தொலைபேசியை
வைத்து விட்டாள்
ஆமா கேட்டேன்
வேலைக்கு போய்
ஒரு வருடம் கழித்து
எதோ ஒரு நாள்
யாரோ கேட்டதாய்
சொன்ன அம்மாவிடம்
சொன்னேன் நான்
படிச்ச படிப்புக்கு
கிடைச்ச வேலைய
சுதந்திரமா ஒரு
இரண்டு வருடமாவது
பார்க்க வேண்டுமென்று
சத்தமே இல்லாமல்
சரி சொல்லிவிட்டார்கள்
என்னை அவ்வளவு
சீக்கிரம் அடுத்தவீட்டுக்கு
அனுப்ப நினைக்காமல்
இருந்திருக்கலாம் ஒருவேளை
அல்லது அண்ணனுக்கு
வரன் பார்க்கும்
விஷயத்தை முதலில்
முடித்துவிட நினைத்திருக்கலாம்
எது எப்படியோ
என்னை யாரும் அழுத்தவில்லை
வந்த வரனை ஒட்டிக்கொள்ள
என்னிடம் யாரும் சொல்லவில்லை
அந்த வரனை கட்டிகொள்ளென்று
சுதந்திரமாய் சுற்றிக்
கொண்டிருக்கிறேன் நானென்று
நினைத்து பறந்து
கொண்டிருந்த காலமது
சட்டென்ற பேச்சையும்
சில்லென்ற சிரிப்பையும்
எப்போதும் வைத்திருந்த
காலமது இப்போது
எல்லாவற்றையும் யாரோ
எடுத்துக்கொள்ள போகிறார்களோ
என்ற பயம் வந்து தான்
திமிறி கொண்டிருந்தேன் நான்
நான் இப்போ
புடவை உடுக்கவுமில்லை
ஸ்டூடியோ வரவுமில்லை என்று