நெஞ்சோடு கலந்திடு-அத்தியாயம்-12

....நெஞ்சோடு கலந்திடு....

அத்தியாயம் : 12

நினைவுகள் என்றுமே மனதிற்கு இதமானவை...அதிலும் காத்திருப்போடு மலர்கின்ற நினைவுச்சாரல்கள் இன்னும் அழகானவை...சில பக்கங்களை எத்தனை தடவைகள் மீட்டிக் கொண்டாலும் மனம் சலிப்படைந்து கொள்வதில்லை...

அதிலும் அவனென்றால் என் உள்ளம் என்றுமே அதன் கதவுகளைத் திறந்து வைத்துக் காத்திருக்கும் அவனது வருகைக்காய்...இன்று நானும் என் காதலும் சேர்ந்து அவனுக்காய் காத்துக் கொண்டிருக்கிறோம்...ஆனால் அவனோ எனக்குச் சொந்தமான கண்ணாம்மூச்சி ஆட்டத்தை என்னுடனேயே விளையாடிக் கொண்டிருக்கிறான்...

என் மனம் எப்போதெல்லாம் அவனை நினைத்துக் கொள்கிறதோ,அப்போதெல்லாம் என் முன்னே நிழலாக விழுபன்,இன்று மட்டும் என்னை சோதனைக்கு மேல் சோதித்துக் கொண்டிருக்கிறான்...

என்னதான் என் உள்ளம் கடந்த கால நினைவுகளில் இருந்து அடிக்கடி நிகழ்காலத்திற்கும் தாவிக் கொண்டாலும்...என்னைச் சுற்றிச் சுழல்கின்ற அத்தனை நிகழ்வுகளும் அவனை ஞாபகப்படுத்துவதாகவே இருந்தது...

எனக்குச் சற்றுத் தூரமாய் ஒலித்துக் கொண்டிருந்த "சுண்டல் வேணுமா...சுண்டல்...??..."என்னும் அந்தக் குரல்,மறுபடியும் என்னை அவனும் நானும் கடந்த காலங்களில் எழுதிக் கொண்ட காதல் அத்தியாயத்திற்கு புன்னகையோடு அழைத்துச் சென்றது...

அன்றைய நாளுக்கு மறு நாள் அவனது பிறந்த தினத்தில் என் காதலைச் சொல்வதாக நான் முடிவு செய்திருந்தாலும்....மொழிகள் மறந்து விழிகள் மட்டுமே அவனிடம் பேசிக் கொண்டிருந்த அந்த விநாடியில்,இதே போன்றதொரு குரல்தான் என்னை அந்த மாய வலைக்குள் இருந்து மீட்டெடுத்தது...

வண்டிலை உருட்டியவாறே எங்கள் அருகே வந்தவர்,

"சுண்டல் வேணுமா...?..."என்று கேட்க...அந்த ஒலியில் என் நினைவுக்கு என்னை மீட்டெடுத்துக் கொண்ட நான்,பழைய குறும்போடு அவனது நித்தியாவாக அவனோடு வம்பு செய்யத் தொடங்கினேன்...

"டேய் வருண் எனக்கு சுண்டல் வேணும்...வாங்கித் தாடா..."

என்னமோ எங்களுக்குள் ஒன்றுமே நடக்காதது போல்,அவனிடம் முன்னெல்லாம் எப்படிக் கேட்பேனோ அதே போலவே இப்போதும் கேட்டு வைத்ததில்...என்னைக் கடுப்போடு ஓர் பார்வை பார்த்து வைத்தான்...அவன் அப்படிக் கடுப்பாகி சண்டைக்கு வர வேண்டுமென்றுதானே நானும் அப்படிக் கேட்டு வைத்தேன்...

"இந்த பார்வையை எல்லாம் அப்புறமா ஆறுதலா பார்த்துக்கோங்க சேர்...இப்போ வண்டில் போக முன்னம்...எனக்குப் போய் சுண்டல் வாங்கிட்டு வாங்க..."

"இருடி உன்னை வாங்கிட்டு வந்து கவனிச்சுக்குறேன்..."

அவனது அந்தக் கோபத்தைக் கண்டு எனக்குள்ளேயே சிரித்துக் கொண்ட நான்...நாளை இதே நேரம் இங்கே அவனிடம் எப்படிக் காதல் சொல்லப் போகிறோம் என்ற நினைவில் நாணத்தோடு இருதயக் கதவுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டேன்...

அதே மனக் கனவுகளோடு நிமிர்ந்து பார்க்கையில்,அவன் இரண்டு சுண்டல் பொதிகளோடு வருவது தெரியவும் முகத்தைப் பழையது போலவே மாற்றிக் கொண்டேன்...

"இந்தா பிடி..."என்று இரண்டையும் என் கைகளில் திணித்தவன்,மீண்டும் என்னருகே அமர்ந்து கொண்டான்...

"என்னடா இரண்டுதான் வாங்கிட்டு வந்திருக்க...??...இது இந்த நித்தியாக்கு போதாதேடா..??..."என்று நான் கேட்டதுமே என்னைத் திரும்பி நன்றாக முறைத்தவன்,

"இதை மட்டும் நல்லா வாயை திறந்து கேளு...நான் ஏதாச்சும் கேட்டா மட்டும் வாயை நல்லா இறுக்கி மூடிக்கோ..."

"இவன் வேற...எங்க தொடங்கினாலும் கரெக்டா அதே இடத்தில கொண்டு வந்து முடிச்சுடுறான்...இவன் இப்படியே பண்ணிட்டு இருந்தா...நாம நம்ம காதலை இன்னைக்கே உளறிடுவம் போலயே...நித்தியா உன் பேர்த்டே பிளான் எல்லாம் சொதப்பிடும் போல இருக்கே.." என்று மனதிற்குள்ளேயே என் நிலைமையை எண்ணிக் கொள்ள...அவனோ என் மனதினைப் படித்துக் கொண்டவனாய்,

"இப்படியே காதலை சொல்லாமலே இருந்திடலாம்னு ஏதும் முடிவு பண்ணி வச்சிருக்கிறியா நித்தியா??......நீ சொல்லலன்னா எனக்கு உன் காதல் தெரியாது பாரு...??..நீ என்னை எவ்வளவு நேசிக்கிறாய்னு எனக்கு நல்லாவே தெரியும்டி...அதே மாதிரி எதுக்காக இத்தனை வருசமா என்கிட்ட சொல்லாமா மறைச்சே என்றதும் எனக்குத் தெரியும்..."என்று பேசிக் கொண்டே போவன் என் அதிர்ச்சியான பார்வையைக் கண்டு கொஞ்சம் நிதானித்துக் கொண்டான்...

இவன் சொல்லும் இந்த விடயம் எனக்குப் புதிதானது...என் காதலை அவன் உணராமல் போயிருந்தால்தான் ஆச்சரியம்...ஆனால் என் காதலை நான் இத்தனை வருடங்களாய் மறைத்து வைத்திருந்ததற்கான காரணத்தையுமல்லவா இவன் அறிந்து வைத்திருக்கிறான்...??

"அது எப்படி இவனுக்குத் தெரிந்தது..??.."என்று என் மனம் எண்ணமிட்டுக் கொள்ளும் போதே அதற்கான பதிலையும் அவனே சொன்னான்...

"என்ன அப்படிப் பார்க்குற...??...அன்னைக்கு உன்னைத் தேடி வரமாட்டேன் என்டு சொல்லிட்டு அறைக்குள்ள நுழைஞ்சுகிட்ட என்னால அந்த ஒரு நிமிசப் பிரிவைக் கூட தாங்கிக்க முடியல...உன்னை ரொம்ப காயப்படுத்திட்டமேன்னு நினைச்சு எனக்கே என் மேல கோபம் கோபமா வந்திச்சு..."

"என்னால ரொம்ப நேரத்திற்கு உன்னை அப்படி அழ வைச்சிட்டுப் பொறுமையா இருக்க முடியல...அதான் என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு மறுபடியும் பல்கனி வழியா உன் ரூமுக்கு வந்து பார்த்தேன்..."

"அப்போதான் உன் கட்டிலுக்குப் பக்கத்தில விழுந்து கிடந்த உன் டயரி கிடைச்சிது....அது எனக்குத் தெரிஞ்ச உன்னோட காதலையும்,எனக்குத் தெரியாத உன்னோட காரணத்தையும் பக்கம் பக்கமாய் கண்ணீரோட சொல்லிச்சு..."

"அதில இருந்த ஒவ்வொரு எழுத்துக்களும் உன்னோட மனசை எனக்குச் சொல்லிச்சு நித்தியா...என்னால உனக்குள்ள இருந்த பயத்தை புரிஞ்சுக்க முடிஞ்சிது...எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டப்புறமும் உன்னை மறுபடியும் மறுபடியும் தொல்லை பண்ண விரும்பல...அதான் உன் கனவுகளை நீ அடையுற வரைக்கும் நானும் என்னோட காதலும் விலகியே இருந்தோம்..."

"மறுநாள் நீ கிளம்பும் போது...எங்க என்னை மீறித் தடுத்திடுவோம் என்கிற பயத்திலதான் அன்னைக்கு காலையிலேயே அங்கையிருந்து கிளம்பிட்டேன்...அதுக்கப்புறம் உன்னை எப்போ எல்லாம் பார்க்கனும் போலத் தோனுதோ அப்போ எல்லாம் உனக்கே தெரியாம நீ கல்லூரிக்கு வந்து போகும் போது உன்னை மறைஞ்சிருந்து பார்த்திட்டுப் போயிருவன்..."

"இந்த நாலு வருசமா உன்னோட இலட்சியத்திற்கு மதிப்பளிச்சு விலகி நின்னேனே தவிர உன்னை விட்டுப் பிரிஞ்சு போகனும்னு நான் நினைச்சதேயில்லை...இனி என்னைக்குமே நான் நினைக்கப் போறதுமில்லை..."

"...நீ பிறந்திருந்தப்போ உன்னோட கையை என்கிட்டத் தந்து என்னோட அம்மா சொன்னாங்க...உனக்கு ஒரு புது உறவு கிடைச்சிருக்கு...அவளை இனி நீதான் பார்த்துக்கனும்னு ..."

"அவங்க ஏன் அன்னைக்கு அப்படிச் சொன்னாங்கன்னு தெரியல...ஆனால் அன்னைக்கு உன்னோட கையை நான் பிடிச்சுக்கிட்டப்போ எனக்குத் தெரியல நித்தியா...வாழ்க்கை பூராவும் உன்னோட கையுக்குள்ளதான் என்னை நானே சிறை வைச்சுக்கப் போறேன்னு..."

"எனக்கு நீ வேணும் நித்தியா...எனக்கு என்னைக்குமே நீ மட்டும்தான் வேணும்...எதுக்குடி என்னை இன்னும் காக்க வைச்சுப் பார்க்குற??...உன்னோட காதலை நான் உணர்ந்திருந்தாலும் அதை உன் வாயால கேட்கனும் போல இருக்கு நித்தியா..."

"உனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னுதான் உனக்கே தெரியாம உன் அப்பாகிட்ட உன்னை பொண்ணு கேட்டேன்....எல்லாப் பக்கமுமே நம்ம கல்யாணத்திற்கு சம்மதம் வந்தாச்சு...ஆனால் உன்னோட சம்மதம்...உன்கிட்ட இருந்து இன்னும் எந்த பதிலுமே வரலையே நித்தியா...??...இன்னும் ஏன்டி மௌனமாவே இருக்குற...??..."

"எனக்காக ஒரே ஒரு தடவை என்னைப் பிடிச்சிருக்கின்னு சொல்லு நித்தியா...ஒரே ஒரு தடவை சொல்லு...எனக்கு அதுவே போதும்...சொல்லுவியா நித்தியா...??.."

என் முன்னே கெஞ்சலோடு என் காதலைக் கேட்டுக் கொண்டிருப்பவன்...என் காதல் மொத்தத்திற்கும் சொந்தமானவன்...என் மேல் தன் நேசம் மொத்தத்தையும் வைத்திருப்பவன்...அகிலத்தில் யாருக்குமே கிடைக்காத அற்புதமான காதலன்...

அப்பேற்பட்டவனை என் கனவுகளுக்காய் காயப்படுத்தி விட்டோமே என்று நினைக்கையில் என்னை அந்த நேரத்தில் என்னாலேயே மன்னிக்க முடியவில்லை...

என்னைச் சிறிய விசயத்தில் கூட காயப்படுத்தி விடக்கூடாதென்று நினைத்து எனக்காகவே அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்தவனிற்கு இத்தனை வருடங்களாய் எவ்வளவு வலிகளைக் கொடுத்துவிட்டேன்....ஆனால் அனைத்தையுமே தாங்கிக் கொண்டு இப்போதும் அவன் கேட்பது என் காதலை மட்டும்தானே...??

இனியும் அவனிடத்தில் என் காதலைச் சொல்லாமலிருந்தால் அவன் மேல் நான் வைத்திருக்கும் நேசத்திற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்...

ஆனால் அவனிடம் சொல்லிவிடுவதாக முடிவெடுத்த பின்னும்...என்னால் அவனிடத்தில் எந்தன் காதலைச் சொல்வது என்னவோ அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை....

அவனது அதீத அன்பில் நெஞ்டைத்துப் போயிருந்த எனக்கு...வார்த்தைகளுக்குப் பதில் கண்ணீர்தான் கட்டுப்பாடின்றி வெளிவந்து கொண்டே இருந்தது...என் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள எனக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது...ஆனால் அந்த சிறிய இடைவெளியை அவன் தவறாகப் புரிந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் என்னைத் தொற்றிக் கொள்ள,

என்னைச் சுற்றியிருந்த எதைப்பற்றியும் யோசிக்காமல் அவனை நெருங்கிய நான் அவன் மார்பில் என் முகத்தைப் புதைத்துக் கொண்டேன்...என் கரங்கள் அவனைக் காதலோடு தழுவிக் கொண்டன...இத்தனை வருடங்களாய் எனக்குள் புதைந்து கிடந்த காதல் கண்ணீராய் வெளி வந்தது...

அவனுள் நான் அடைக்கலமாகிக் கொண்ட மறு நொடியே அவனது கரம் என்னை அழுத்தமாக அரவணைத்துக் கொண்டது...என் முகத்தினை நிமிர்த்தி என் விழிகளை உற்று நோக்கியவன்,

"எனக்கு இது போதும்டி..."என்று என்னையும் என் மனதையும் புரிந்து கொண்டவனாய் என் உச்சந்தலையில் அவனின் முதல் முத்திரையைப் பதித்துக் கொண்டான்...அந்த இதமான சூழலில் ஒருவரிடத்தில் ஒருவர் தோற்று காதலில் இருவருமாய் புதியதொரு அத்தியாயத்தை விழிகளாலேயே எழுதத் தொடங்கினோம்....


நினைவுகள் மலரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (28-Jan-18, 8:44 am)
பார்வை : 500

மேலே