பார்த்து நடந்திடப் பார்,

ஒரு பா பஃது
=============
========================
ஊழல் சமுதாயம் ஓயா வளர்ச்சிக்குள்
சூழவித் திட்டுச் சுயமிழந்து – வாழ
வழியற்று வாடிடும் வர்க்கம்நாம் பேச
மொழியற்றும் போவோம் முடிந்து.

முடியுமெனும் போதும் முயலா திருந்தே
விடியாப் பொழுதானோம். வாழ்க்கைக் – கொடியோ
படரக் கொழுகொம் பிருந்தும் அதன்பின்
தொடரா திருந்தோம் தொடர்ந்து.

தொடரும் அவலத் தொடர்கதைக் கெம்மை
இடர்தள்ளி ஏமாற்றும் ஈனர் - சுடரைச்
சுடுமென் றறியாச் சுதந்திரப் பூச்சாய்த்
தொடுவோம் படுவோம் துணிந்து.

துணிகரக் கொள்ளையர் தோள்களில் வெள்ளைத்
துணியுடன் வந்தால் துடித்துப் – பணிவுடன்
வாக்கைப் விரலில் வருணம் வரைந்திட்டுப்
போக்கற்றுப் போவோம் புதைந்து.

புதைந்தொருநாள் போவதற்குள் பொல்லாத மாந்தர்
சிதைத்துருகச் செய்வதனைச் சீண்டி – விதைநீ
எரிமலையின் சீற்றம். எழுந்திட்டால் குள்ள
நரிக்கூட்டம் விட்டோடும் நாடு.

நாடுவிட்டு நாடுவந்த நாகரிக மானவரை
ஓடும் வரைவிரட்டி ஓய்ந்தவரே. – நாடுசுடு
காடுபோல் மாறுதற்குக் காரணமா யானவரைக்
கூடும் வரைவிரட்டிக் காட்டு.

காட்டுக் கொடிமேல் கனிந்ததெலாம் காக்கைகள்
கேட்டுச் சுவைப்பதில்லை. கேளாது – நாட்டு
வளஞ்சுரண்டி ஏப்பமிடு வாரதுபோல் தேசம்
களவாடிச் செல்வதைக் காண்.

காண்பதெலாம் கண்டும்நாம் காணா திருந்திட்டால்
மாண்புமிகு வானவர்கள் மட்டுமிங்குத் – தூண்போல்
அசையா திருந்தே அனுபவிக்க நாமும்
இசைவதோ நெஞ்சே இயம்பு.

இயம்பும் பலகுரல் எண்திக்கும் பாய்ந்து
வியப்பூட் டிடவே வெருள்வார் – மயங்கித்
தலைகுனியின் மக்கள் தலைநிமிரும் காலம்
அலைபோல் திரண்டுவரும் ஆம்!

ஆமென்று மட்டும்நீ ஆட்டும் தலையாலே
நாமென்றும் தேடிடும் நல்வாழ்வுப் - பூமெல்ல
பூத்துப் புவிமேல் புதுவாசம் வீசலாம்.
பார்த்து நடந்திடப் பார்.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (2-Feb-18, 12:55 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 83

மேலே