கடைசி வரிக்கு காத்திருக்கவும்
இருட்டுப் போர்வை போர்த்தி
முரட்டு தூக்கம் போடுது
நான்முந்தி முடிச்ச ஊர்
உள்ளே நுழைவதை கிளீச்
என்று சத்தம் போட்டு
சாட்சி சொல்கின்றன கதவுகள்...
தாழிடுகிறேன் கதவுகளை
தாழ்ப்பாள் சொல்லும் தாம்பத்யம்
புரிந்து புன்னகைக்கிறாய் நீ....
அடியெடுத்து உனை அருகில்
அடைய நாழிகை எல்லாம்
நீள்கின்றன நாட்களாய்....
பக்கத்தில்வர படர்கிறது உன்
பார்வை பலவீனமாகிறேன் நான்....
வேண்டுமென்றே நான் மறுக்க
நீ வேண்டும் என்று வளைகரம்
இழுக்க உடைந்தது வளையல்கள்
அல்ல என்உயிரின் உதிரிகள்....
சீறி அணைத்துச் சிறையிட்டுக்
கொண்டாய் உன்னோடு தண்டனை
ஏனும் கொடு தயவுசெய்து
விடுதலை வேண்டாம்.......
மெல்ல சாய்ந்து மெத்தையாகிப்
போகிறேன் நான் சுமக்கிறேன்
உன் கனத்தையும் காதலையும்...
படுத்துக் கொண்டு படர
செய்கிறாய் உன்னை என்னில்
அத்துமீறீ பிரவேசிக்கும்
அக்கினி மூச்சால்
செத்துப் போகிறேன்!
செத்துப் போகிறேன்!
செத்துப் போகிறேன் நான்
முத்தமிட்டு மூச்சுதருகிறாய் நீ....
மெத்தைக் கலையில் வித்தகன்
நீயென நித்தம் ஒருமுறை
நிரூபிக்கிறாய்...
நிரூபிக்கிறாய்...
ஆண் மட்டுமே ஆதிக்கம்
செலுத்த இது ஒன்றும்
அலுவலகம் அல்ல அல்லவே!
இனி எனதுமுறை காட்ட
முட்டித்தள்ள முனைகிறேன் உனை
இப்பொழுது நீ மெத்தை....
இதயதுடிப்புகள் காதில் செய்யும்
கச்சேரி உனக்கும் எனக்கும்
மட்டுமே கேட்கும் மௌனராகம்...
உணர்ச்சியின் தீவிரத்தை
திருகுகிறாய் முடியாமல்
முனுகுகிறேன் என் முனுகல்கள்
மோககீதமோ உனக்கு?!
வழியும் வியர்வை எட்டாம்கடல்
உன்மார்பு உரோமத்தில் புகுந்த
என் விரல்கள் போடுகின்றன
ஐந்துவழி அகலசாலைகளை
அதில் வளைந்துநெளிந்து
ஓடுகின்றன வியர்வை நதிகள்....
நீ எல்லை மீறுவதை கிள்ளி
எச்சரிக்கின்றன நகங்கள்
எனினும் ஏமாந்துவிட்டாயே என
ஏளனம் செய்கிறது என்
பெண்மையின் இயலாமை....
போதும்
சற்று இளைப்பாறு என் இதழில்
களைப்பாறி விட்டு மீண்டும்
காலை உணவிலிருந்து ஆரம்பி....
இமை கொண்டு வருடி
உயிர் கூசச் செய்கிறாய்...
கட்டில் கதறுகிறது இன்னொரு
காலுக்கு உள்ளம் சபிக்கிறது
உலகை இப்படியே
உறைந்து போ! என...
விடியும் வரை பரிமாறுகிறோம்
சுகங்களையும்
சோகங்களையும்
கேலிகளையும்
கிண்டல்களையும்
பரிகாசங்கள் பரிணமித்தே
போகின்றன பரிபாஷைகள்
தாய்மொழி ஆகின்றன.....
காலை கதிரொலி காதில்
இரகசியம் சொல்லி கிள்ளியது
கனவுபோதும் கைம்பெண்ணே!
எழுந்து உள்ளே போ
நல்லது கெட்டதுக்கு நாலுபேரு
வாருவாங்க போவாங்க........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
