மேகமே மேகமே

ஏமாத்தும் மேகமே ஏழைக்கென்ன சாபமோ?...
பூநாத்துக் கருகவே பொழியாம போனாயோ?...
ஊரவச்ச வெதநெல்லுங் காஞ்சித்தான் போயிடுச்சே
ஒலையிலே அரிசியாய் அதுவுந்தான் கொதிக்குதே...

நீர்வத்தும் காலமும் நெல்லோடு சோகமும்
வட்டியோடு வங்கியும் எமனாக உசுரெடுக்குதே
பானையிலே கட்டிவச்ச ஒழச்சவன் சாம்பலும்
ஆத்துல கரைக்க முடியாத கோலமாகுதே...

இரும்பையும் அரிச்செடுக்கும் துருவப் போலதான்
இதயத்துல காதலும் அதன்வேலய செய்யுதே
ஒத்தையடி பாதயில படந்து கெடக்கும்
நெருஞ்சியாய்க் காதலியின் நெனப்பும் குத்துதே...

சோத்துக்கே வழியில்ல காத்திருக்கும் அவளுக்கும்
தலையில வெள்ளி மொளச்சுப் பரவுதே
இருவீடும் வறட்சியில் தரைசாயும் தாமரையாய்
உள்ளம் சுருங்கி சருகாய் உடையுதே...

பூமியெல்லாம் பூமணக்கும் வண்டெல்லாம் தேன்குடிக்கும்
கனவுலதான் பாடுறேன் கண்ணுமுழிச்சா வாடுறேன்
கார்முகிலே உனக்குக் கருணை இல்லையோ?...
கழனியும் விதவையாய்த் தவித்தே சாகின்றதே...

சக்கரை விலையும் இருமடங்காகி நிக்குது
சத்தற்ற உணவால் தொண்டையும் விக்குது
மழையின் துளியால் மரவேரும் நனஞ்சால்
மரித்துப்போன வசந்தம் மீண்டும் துளிர்க்குமே...

எழுதியவர் : இதயம் விஜய் (2-Feb-18, 11:20 pm)
பார்வை : 4667

மேலே