வேணிற்காலம்

நிலங்கிழித்து நீர்வார்த்து
வரப்புக் கட்டி
வளமை சேர்த்து
உழுதுதேய்ந்த உழவனை
உலகுக்குக் காட்டும் காலம்
வேணிற்காலம்…
அவன்
அடிச்சுவடுகளை
அடையாளப்படுத்தப்
பாதச்சுவடுகளைப்
பதப்படுத்தும் பருவக்காலம்…
நாளமில்லாச் சுரப்பிகளாய்
வற்றிப்போன நதிகள்…
வெடிப்புகளிலிருந்து
வெளிவரமுடியாமல்
பரிதவிக்கும்
பாதத்து விரல்கள்…
ஆடையற்ற
உழவனைப்போலவே
அரை நிர்வாணத்தில்
அறுவடை நிலம்…
நிழலின் அறுமை
வெய்யிலில் தெரிய
தன்னிழலிலாவது
இளைப்பாரத் துடிக்கும் கால்கள்.
காணும் இடமெல்லாம்
பசுமை கருக்கிய
கதிர்கள்…
தாகம் மிகுந்த
மாந்தனின்
சோகம் நிறைந்த காலம்
வேணிற்காலம்…

எழுதியவர் : Tamildeva (3-Feb-18, 10:09 pm)
பார்வை : 114

மேலே