கவிதைகள் உயிரை தொடும் அனுபவத்தால் உணரப்படுபவை - கவிஜி

கவிதைகள் உயிரை தொடும் அனுபவத்தால் உணரப்படுபவை

இன்றைக்கு அல்ல என்றைக்குமே இலக்கியத்தில் கவிதை அதற்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டேதான் இருக்கிறது. அதே சமயம் எல்லா கால கட்டத்திலும் அசலோடு போலிகளும் இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதும் நிஜம். அது கவிதைகளுக்கும் பொருந்தும். முகநூலில் திரும்பும் பக்கமெல்லாம் கவிதைகள் தான். ஆனால் அவைகள் எல்லாமே கவிதைகள் தானா என்பதில் ஒரு வகை கேள்வி இருக்கிறது...ஒரு வகை எரிச்சல் இருக்கிறது. எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்க வேண்டும் என்று அவசியமில்லை மற்றும் எரிச்சல்கள் பொதுவானவை என்ற புரிதல் இருப்பதால் மீண்டும் ஒரு கவிதை எழுதி அதை கடந்து விட முடிகிறது. அழுத்தம் நிறைந்த வாழ்வில் கவிதை என்ற பொருள் அவரவருக்கு தகுந்த மாதிரி அர்த்தம் தருகிறது என்று நம்புகிறேன். எப்படி யோசிப்பினும் கவிதை இன்றைய மானுட மனதுக்கு வடிகாலாக இருக்கிறது.

கோபமோ......தாபமோ..... காதலோ....கலவியோ.....காட்சியோ..... பிழையோ..... சுயமோ.... பயமோ.....கவிதையாக்கி விட்டு அல்லது கவிதை போல் ஆக்கி விட்டு வேறு வேலை பார்க்க சென்று விட முடிகிறது. ஆனால் நிஜமான கவிதை அதையெல்லாம் தாண்டி ஒரு வகை தவம். அதை தொடர்ந்து செய்வோருக்கே அது கிடைக்கிறது. கவிதைகள் என்பது மனதின் கண்கள் விழித்துக் கொள்ளும் களம். அங்கே ரத்தமின்றி கத்தியின்றி சதா ஒரு வகை போர் நடந்து கொண்டே இருக்கிறது. போர் முழுக்க எழுத்து சாவுகள் சகஜமே என்றாலும்.. பல போது எழுதுபவனும் சாக வேண்டி இருக்கிறது. செத்து செத்து பிழைப்பது என்பது கவிதைக்காரனுக்கு பொருந்துகிறது.

மரபு இருக்கும் போதே புது கவிதை வந்தது. புதுக் கவிதை இருக்கும் போதே நவீன கவிதை வந்திருக்கிறது. அதையும் தாண்டி.. இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுக்குள் நம்மை இட்டு செல்லும் சொல் அடுக்குகள், படிம கூடுகள், குறியீட்டு சிந்தைகள், கோணம் மாற்றும் விந்தைகள், நவீனத்துக்கும் அடுத்த நிலை கவிதைகள் என்று வந்தபடியேதான் இருக்கின்றன. ரசிக்கும் படியாகவும், உணரும் படியாகவும், சில மணித்துளிகள் உங்களுள் அவை சுழன்றால் அவைகள் கவிதைகள் தான் என்பது என் கருத்து. ஒரு கவிதை சில மணித்துளிகளாவது நம் காலத்தை நிறுத்த வேண்டும். அதுதான் நான் கவிதைக்கு வைத்திருக்கும் இலக்கணம். கவிதைகள் உயிரை தொடும் அனுபவத்தால் உணரப்படுபவை. அது எப்போதாவது தான் நிகழும். அதுவாகவே பூத்து விடுதல்..... அது பூக்கும் வரை காத்திருத்தல்... காத்திருந்து பூக்க வைத்தல்.... பூத்த பின்னும் சில ஜிம்மிக் வேலைகள் செய்தல் என்று கவிதை இன்னதென்று அறியாத அழகால் ஜோடிக்கப்பட்டுக் கொண்டே இருப்பவை. ஆழ் மனதின் ஜன்னல் வெடித்து சிதறுகையில் ஆக சிறந்த கவிதைகள் வந்து விழுகின்றன. நிஜமாகவே போல இருத்தலின் நிமித்தமும் நல்ல கவிதைகள் வந்து விழும் என்பது முரண்பாடு என்றாலும் உடன் படக் கூடியவை தான். அந்த எப்பொழுதாவது இப்படியும் இருக்கலாம்.

காதலின் சுரப்பிகள் வேலை செய்ததும்... அது உடனே தாக்கும் அடுத்த இடம்.... அவரவர் மொழி. அதில் தான் நாம் வெளிப்படுகிறோம். இந்த மானுட நாகரிகம் மொழியால் கட்டமைக்கப்படுகிறது. மொழியின் ஆக சிறந்த வெளிப்பாடு கவிதை என்றே அறிகிறேன். ஒரு மனிதனின் இருத்தல் அவன் சிந்திக்கும் சிந்தனை கொண்டே அர்த்தமாகிறது. அந்த சிந்தனையின் ஊற்று மூன்றாம் கண் திறக்கையில் கவிதை பிறக்கிறது. போகிற போக்கில் ஒருவன் ஓரே ஒரு கவிதை மட்டுமே எழுதி இருந்தாலும்... அது தலை சிறந்த கவிதை ஆக வாய்ப்பிருக்கிறது. மாறாக நன்றாக எழுதும் கவிஞன் கூட சில நேரங்களில் வாக்கியங்களை ஒடித்து மடித்து போட்டு... மூன்று புள்ளி ஒரு ஆச்சரிய குறியோடு மொக்கை கவிதை ஒன்றை தர முடியும். அதுதான் கவிதையின் போக்கு. அதன் போக்கில் விட்டாலும் அதுவாகவே அதன் போக்கை தீர்மானிக்கும் வல்லமை மொழியின் சுழிக்குள் சுருண்டு கிடப்பதால் யாம் அறிந்த பராபரம் வேலை செய்யாமல் போகிறது பல நேரங்களில். அது காலம் பதியும் குறியீடெனவே எழுதுபவனின் டி என் ஏ தொடர்புடவை என்றும் நம்ப வேண்டி இருக்கிறது. விடை கிடைக்காத லட்சம் கேள்விகளோடு தான் ஒவ்வொரு நாளும் தூங்க போகிறோம். அதில் கவிதை ஒன்றென அல்லது எது நல்ல கவிதை என்றென தீர்மானம் அத்தி பூத்தாற் போல தான் கிடைக்கும் அல்லது அத்தியாய் பூத்தால்தான் கிடைக்கும்.

ரயிலடியில்/ ஆடு மேய்த்துக் கொண்டிருப்பவன்/ ரயில் சென்று முடியும் வரை/ ஆட்டை போலவே கத்துறான்...

-இது கொண்டாட்டத்தின் வெளிப்பாடு. கவிதையா என்றால் ரயிலை நிறுத்த வேண்டி இருக்கிறது. கவிதை தான் என்றால் அவனாக மாற வேண்டி இருக்கிறது.

புரியாதோர் ஆடு மேய்த்து பார்க்கலாம். அல்லது ரயில் ஓட்டி பார்க்கலாம். அல்லது ஆடாகி பார்க்கலாம். சில கவிதைகள் எட்ட நின்று எட்டியே நிற்கும். நிற்க விட்டு நகருதல் கவிதைக்கு இலக்கணம்.

நவீன கவிதைகள் வரவேற்கப்பட வேண்டியவை தான். ஆனால் அதில் லாஜிக் கண்டிப்பாக இருக்க வேண்டும். முகநூலில்.... அல்லது ஆர்வ கோளாறினால், தானே செலவு செய்து போடப்படும் சில முதல் கவிதை தொகுப்புகள் பயம் நிறைந்தவையாக இருக்கின்றன. அது கவிதை கை கூடும் முன் பானையை நடுவீதியில் போட்டு உடைத்ததற்கு சமமோ என்று அச்சப்பட வைக்கின்றன. அதுவும் தான் எழுதிய எல்லாமே கவிதை என்று நம்புவது பொதுவாகவே கவிஞர்களுக்கு பொதுவாகவே ஏற்படும் வியாதி. ஏற்கனவே வியாதி குணமானவன் கூறுகையில் சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் சுட்டபின் வடுவாகவே கவிதை இருக்கும் என்பதில் ஐயமில்லை. கவிதை என்பது உணர்வது தானே. உணர்வதை அப்படியே கடத்தி மொழியால் சூழப்பட்டு பக்கங்களில் நிரப்ப இயலாமல் போவதில்தான் சிக்கல் இருக்கிறது. அதற்காக எது கவிதை இல்லையோ அது கவிதையே இல்லையோ என்று குறுக்கு வெட்டு சிந்தனை வருவதையும் தடுக்க முடியவில்லை. கவிஞனின் சிக்கலே இது தான்.

பொதுவாகவே கவிதை என்பது புதிரும் பூடகமும் நிறைந்தவைதான். ஏனெனில் புதிரும் பூடகமும் நிறைந்ததுதான் இந்த வாழ்க்கை என்று நம்புகிறேன். அப்படிதான் இங்கு எல்லாமே அமைந்திருக்கிறது. அதுதான் கவிதைகளில் இருக்கிறது. அதுதான் கவிதையாக இருக்கிறது. யார் எழுதும் பத்து கவிதைகளில் நிஜமாகவே இரண்டு தான் கவிதையாக இருக்கும். மிச்சம் எட்டும் கவிதைகள் போல இருக்கும். இதன் வித்தியாசம் அறிந்தவர்கள் அந்த இரண்டுக்காக பத்து முறையும் தவம் கிடக்கிறார்கள். தொடர்ந்து எழுதுபவர்களுக்கு சீக்கிரம் இந்த வித்தியாசம் புலப்பட்டு விடும். எனக்கு புலப்பட்டு விட்டது என்று நம்புகிறேன்.

*
காலம் முழுக்க கவிதைகளை சுமந்து கொண்டு திரிவது... பரிதாபமானவை. அதே சமயம் பகட்டானவை. ஒரு கவிஞனாக வாழ்வது பற்றி என்னவேண்டுமானாலும் கருத்து மாறுபாடு......கருத்து கோளாறு இருக்கலாம். ஆனால் கவிஞனாக சாவது கண்டிப்பாக பெருமிதமே.

- கவிஜி

எழுதியவர் : கவிஜி (9-Feb-18, 10:28 am)
சேர்த்தது : கவிஜி
பார்வை : 65

சிறந்த கட்டுரைகள்

மேலே