பசிக்கொடுமை
கருப்பையின் இருப்பு துண்டிக்கப்படும் போது
முதன் முதலாக,
விழித்துக்கொண்டு வீறிடச்செய்கிறது பசி !
அன்று ஆரம்பித்து,
தேடலின் மையமாக,
ஒரு குழந்தையின் ஆர்வத்தை போல் தோன்றி
கல்லரையை அடையும் வரை
வாழ்க்கை முழுவதும் நீள்கிறது பசிகள் !
குழந்தைப் பருவத்தில் விளையாட்டாகவும்,
இதயத்தின் ஓசையில் காதலாகவும்
இளமையின் துடிப்பில் காமமாகவும்
உறவுகளின் அணைப்பில் அன்பாகவும்,
துன்ப வேளைகளில் நட்பு நாடியும்,
முதுமைப் பருவதில் ஓய்வை வேண்டியும்,
வெவ்வேறு உணர்வுகளாய் பசிகள் !
இந்தப் பசிகள்,
மறுக்கப்படும் போதும்
மறக்கப்படும் போதும்,
மறைக்கப்படும் போது,
ஒழுங்கு படுத்தாத போதும்,
பசிப்பிணிகள் தொற்றிக் கொண்டு
வாழ்வை வேரறுக்கின்றன.