வளர்ப்போம் கவியரங்கக் கவிதை

அன்பு வளர்ப்போம், அறிவு வளர்ப்போம்
தொண்டு வளர்ப்போம், பக்தி வளர்ப்போம்.
எல்லாம் வளர்க்கத் தான் வேண்டும் !
ஏனென்றால் வளராமல் தான் கிடக்கிறது.

ஆனால் மனிதர்களே ! இங்கே
வயிறு வளர்ப்பதே பெரிதாய் இருக்கிறது.
பிள்ளை வளர்ப்பதும் பெரும்பாடாய் உள்ளது.
பிள்ளைகளின்
கல்வி வளர்வதும் காசில் தான் உள்ளது.
இங்கே சிலபேர்
மீசை வளர்ப்பதற்கே மிகப்பாடு படுகின்றர்!
ஆசை ஆசையாய் மீசை வளர்க்கின்றார்!

ஆனால் அவர்கள்
அன்பு வளர்க்கவோ! அறிவு வளர்க்கவோ
தொண்டு வளர்க்கவோ, பக்தி வளர்க்கவோ மறுக்கின்றார்!
நமக்கான வேலை இதுவல்ல என்று நினைக்கின்றார்!
மனிதா! மனிதா! மனிதனாய்ப் பிறந்து
மனிதனாய் வாழ மறுக்கின்றாயே!
தொல்லை வளர்க்கவும் துயரம் வளர்க்கவும்
சண்டை வளர்க்கவும் கேடு வளர்க்கவும்
மனிதன் என்றொரு மகுடம் வேண்டுமா?
அரசன் தலையில் இருந்தது மகுடம்;
ஆண்டவன் படைப்பில் மனிதன் மகுடம்;
ஒளியை வீசவும் உயரத்தில் இருக்கவும்
மகுடம் மறுக்குமோ? மனிதன் மறுக்கிறான்;

வள்ளுவன் என்றும் இளங்கோ என்றும்
கம்பன் என்றும் பாரதி என்றும்
எத்தனை கவிஞர்கள் இங்கே பிறந்தார்!
அப்பர் என்றும் சுந்தரர் என்றும்
ஞான சம்பந்தர், மாணிக்க வாசகர்
அவரோடு மொத்தம் அறுபத்து மூவர்
ஆண்டாள் என்னும் நாச்சியாரோடும்
ஆழ்வார் எத்தனை பிறந்தார் இங்கே!

மானுட குலத்தை வளர்த்து வந்தார்கள்!
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வளர்த்தும்
நாயினும் கீழாய் நரியினும் கீழாய்
போயினை மனிதா போனதைக்கூட
அறிய மாட்டாமல் அறிவு கெட்டாயே!
சாதிச் சங்கத்தில் இடம் பிடித்தாயே
சாதிச் சண்டைக்காய் வடம் பிடித்தாயே!
வளர்ந்த மனிதன் நீ அடம் பிடித்தாயே
மனிதன் என்று நீ தடம் பதித்தாயா?

பாவம் ஒருபுறம்; பலிகள் ஒருபுறம்
மோசம் ஒருபுறம்; நாசம் ஒருபுறம்
எல்லாம் செய்து ஏமாற்றி மகிழ்ந்து
வாழ்வதாய் நினைத்து உடல் வளர்த்தாயே!
உடல் வளர்ப்பதா மானுட வாழ்க்கை?
உயிர் வளர்ப்பதே மானுட வாழ்க்கை!
செத்த பின்னும் வாழ்பவன் தானே
மனிதன் என்றொரு மகுடம் சூடினான்!
புழுவைப் போல பூச்சியைப் போல
செத்துப் போக சம்மதந் தானா?

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (10-Feb-18, 6:56 pm)
பார்வை : 59

மேலே