ஏக்கம்

அரை வயிறு உணவிற்கும் .....
அள்ளி அணைக்கும் அம்மாவிற்கும்...
அனாதைகளுக்கு....!

பாலூறும் நெஞ்சிற்கும்...
உடை நனைக்கும் பிள்ளைக்கும்...
குழந்தையில்லா ஒரு தாய்க்கு....!

மஞ்சள் முகத்திற்கும்...
வகிடு நிறைக்கும் குங்குமத்திற்கும்...
முதிர்கன்னிக்கு...!

வீட்டுச் சாப்பாட்டிற்கும்...
வெறுமையில்லா நாளிற்கும்...
ஒரு வெளிநாட்டு தொழிலாளிக்கு....!

பேரப்பிள்ளையின் கொஞ்சலுக்கும்...
தொலைபேசி அழைப்பிற்கும்...
முதியோர் இல்ல பாட்டிக்கு...!

விடிந்திடும் பொழுதுக்கும்...
நிம்மதியான தூக்கத்திற்கும்....
இரவுப்பணி காவலாளிக்கு.....!

அமாவாசை நாளிற்கும்...
அடித்து விரட்டா மக்களுக்கும்....
காக்கைக்கு...!

முதலாளி குழந்தை வளரவும்...
கொஞ்சம் உணவேனும் மீந்திடவும்...
ஒரு ஏழைத்தாய்க்கு...!

மாதந்தோறும் கறிச்சோறும்...
புது வேஷ்டி சட்டையும்...
முனிக்கோவில் பூசாரிக்கு...!

துண்டுவிழாத சம்பளமும்...
பழுதில்லா ஒரு வண்டியும்...
நடுத்திர வர்க்க குடும்பதலைவருக்கு...!

நீண்டதொரு விடுமுறையும் ...
அடிக்கடி அம்மா வீடும்...
பணிக்கு செல்லும் பெண்ணிற்கு...!

அவன் கைத்தீண்டலுக்கும்...
அவள் ஸ்பரிசத்திற்கும்...
பிரிந்திருக்கும் தம்பதிக்கு...!

தேயாத நிலவிற்கும்...
வற்றாத வார்த்தைகளுக்கும் ....
எனக்கு...!

ஏக்கங்கள் தான் எத்தனை வகை...??

எழுதியவர் : கீதா பரமன் (10-Feb-18, 9:58 pm)
Tanglish : aekkam
பார்வை : 155

மேலே