காதலர் தினம்
===============
பட்டும் படாமலும் பார்த்த விழிகள்
=பருவ நெஞ்சை பறித்து எடுத்து
தொட்டும் தொடாமலும் தொலைவில் இருந்து
=துடிக்க வைத்து தொடர்ந்த விழிகள்
விட்டும் விடாமலும் விருந்து வைத்து
=விடலைக் காதல் விதைத்த விழிகள்
கெட்டும் கெடாமலும் கிறுக்குப் பிடித்துக்
=கிடக்க வைத்தக் கெண்டை விழிகள்.
கொட்டும் மழையினில் கோடை காலம்
=கொடுத்துப் பார்த்தக் கோதை விழிகள்
வெட்டும் மின்னலாய் விழுந்து மறைந்து
=வெட்கம் பொழிந்து விரைந்த விழிகள்
கட்டும் தாலியின் கனவுகள் வளர்த்துக்
=காத்துக் கிடந்தக் காந்த விழிகள்
நட்டு வைத்த நாற்றெனக் காதல்
=நாளும் வளர்த்த நாயகி விழிகள்
காதலைச் சொன்னக் கண்களை நம்பிக்
=காதலி யாளின் கைகளைப் பற்றிக்
காதலின் பரிசுக் கொடுத்த்திட வென்றுக்
=காதலர் படுந்துயர் கருத்தினிற் கொண்டு
காதலர் தினத்தைக் கண்டரோ அன்று.
=காதலில் விழுந்தக் காதலர் வாழ்வில்
காதகம் இன்றிக் கரைசேர்ந் தாலே
=காதலர் தினமும் கௌரவ மாகும்
*மெய்யன் நடராஜ்