உயிருக்கு வாழ்வு உன்னதக் காதல்
உயிருக்கு வாழ்வு உன்னதக் காதல்
மலர்ப்பாதையில்
தனியாய் நடக்கையில்
தோன்றாத இன்பம்
முட்பாதையில்
இவளோடு நடக்கையில்
அளவில்லாமல் தோன்றுகிறதே...
நெருப்பு...
நெருங்கினால் உடல் சுடும்...
உன்னை நீங்கினால்
உள்ளம் சுடுகிறதே...
தொடக்கூட தோன்றாதபோதும்
உன் கண்களின் களவுப்
பார்வை என்னை எங்கோ
அழைத்துச் செல்கிறது...
உயிருக்கு வாழ்வையும்
வாழ்வுக்கு சாவையும் இவளின்
அருகாமையும் பிரிவும்
உணர்த்துகிறது...
சாதாரண ஆடையெல்லாம்
இவளணிந்தபின் அழகாகிறதே...
சூடாய் உணவருந்துவதை
விட்டு விட்டேன்...
நெஞ்சத்தில் இருக்கும்
உன்னை சுட்டுவிடும் என்பதால்...
உண்டபின்தான்
கள்ளால் களிப்பாம்...
கண்ட உடனே எனக்கு
உன்னால் களிப்பு...
உன்னைக்கண்ட பின்
நிலவை நான் ரசிப்பதில்லை...
எமன் எனப்படுவது யாதெனின்
யாதொன்றும் தீமை இலாத
அழகிய இவள் கண்கள்...
உன் கண்கள் பேசும்
மொழியை என் வார்த்தைகளால்
மொழிபெயர்க்க முடியவில்லை...
நான் செய்த சாதனைகள் பல
மறந்து போயிருக்க
உன்னோடு நான் கொண்ட
சிறு சிறு சம்பாஷனைகள் கூட
ஒன்றுவிடாமல் நினைவுக்கு
வருகிறதே...
வெட்கத்தில் கால்விரல்களால்
நீ கோலம் போட்டதும்
நாணத்தில் கைகள் கொண்டு
முகம் மறைத்ததும்
அழகாய் அபிநயங்களாய்
மனதைக் கொள்ளை கொண்டதே...
ஒரு நாள்... நான்
தாமதமாக வந்ததால்
வந்த ஊடலில்
உனக்கு தண்டனை
உண்டென அவள் சொன்னாள்...
ஒரு வாரம் உன்னைப்
பார்க்காதிருக்கும் தண்டனை
வேண்டுமென்றால் கொடு
தாங்கிக் கொள்கிறேன்
என்றேன் நான்...
தண்டனை உனக்கு மட்டும்தான்
எனக்கும் சேர்த்தல்ல...
வேறு ஏதாவது சொல்
என்றாள் அவள்..
சகியே... இதுதான் காதலா...
இறைவனது படைப்புகளில்
ஒப்பற்றது இதயம்...
அதன் அருமை
உணரும் அத்தனை
காதல் இதயங்களுக்கும்
எல்லா தினங்களும்
காதலர் தினமே...
Happy Valentine's Day...
அன்புடன்...
ஆர்.சுந்தரராஜன்.
😀🙋🏻♂👍🤷🏾♂🤦🏻♂💪