உன் ஒர விழிப்பார்வைகளை

என் கண்ணீரெல்லாம்
உருக்கி ஒரு
ஆறாக்கிட வேண்டும்
அது நதியென
ஓடோடி சேர்ந்துவிடும்
கடல் உன் கரங்களாகிட
வேண்டும் கண்ணம்மா

என்னடா என்ற உன்
ஒற்றைச் சொல்லில்
என் வலியெல்லாம்
ஒன்றுமில்லை என்ற
ஒற்றைச் சொல்லாகி
ஒற்றைப் புள்ளியாகி
உந்தன் விழிகளுக்குள்
கரைந்து தொலைந்திட
வேண்டும் கண்ணனம்மா

உன் மடிதனில்
தலை வைத்து
உன் புடவையை
இழுத்து விளையாடி
உன் பாடலில்
என்னை மறந்து
உன் மடிச்சூட்டில்
என் எல்லாமும்
மறந்து ஏன்
என் வயசும்
மறந்து நான்
சிறுகுழந்தையாய்
சிணுங்கி சிணுங்கி
சிரித்து சிரித்து
மழலையாய் சிரித்து
அங்கேயே உறங்கிட
வேண்டும் கண்ணம்மா

உன் மடிதனில்
மழலையாக வரம் தருவாயா
உன் மனம்தனில்
மன்னவனாக இடம் தருவாயா
உன் விழிகளை
உற்று நோக்கிக்கொண்டே
இருந்துவிட வேண்டும்
உன் விழிகளை
பார்த்துக் கொண்டிருக்கும்போதே
ஒருநாள் இறந்துவிடவும்
வேண்டும் வேறென்ன
எனக்கு வேண்டும்
என் கண்ணம்ம்மா

என் கனவுகளும்
என் கவிதைகளும்
என் கவலைகளும்
என்னை அழுத்தி
என்னை அமுக்கி
உன் நினைவுகளில்
நான் அழுதுதீர்த்து
இரவுகளில் மரணித்து
நாளை எழுவேன்
மீண்டும் உன்
மந்திர விழிகளில்
தொலைந்து போக ....

என் இதய அசைவில்
வாழ்ந்தது எல்லாம்
கடந்த காலம் கண்ணம்மா
இப்போதெல்லாம் உன்
விழிஅசைவில்
மட்டுமே வாழ்கிறது
இந்த ஜீவன்

கண்ணம்மா என்
உயிர் கண்ணம்மா
என் காதலை
உனக்கு எப்படிச்
சொல்லி புரிய
வைப்பது என்று
தெரியாமல் இன்னும்
பேச ஆரம்பிக்காத
பச்சிளம் குழந்தையாய்
ஓவென்று அழுது
ஆர்பரித்துக்கொண்டிருக்கிறது
ஒவ்வொரு நொடியும்
இந்த மனசு

தாயின் முந்தானை
தரும் சுகம்போல
மனதை இதமாக்கிப்
போகிறது விரும்பியோ
விரும்பாமலோ நீ
வீசிப்போகும் அந்த
ஒரவிழிப் பார்வைகள்

என் நேசத்துக்கு
பதில் சொல்லாவிட்டாலும்
வீசிக்கொண்டே இரு
உன் ஒர விழிப்பார்வைகளை ....

காலி வயிற்றோடு
ஒரு டம்ளர் தண்ணீர்
குடித்து வயிறு
ரொம்ப ரொம்பியதாய்
தூங்கப்போகும் அந்த
ஏழ்மைக்காரியைப்போல
தான் நானும் ...
உன் பார்வை நீரை
கொஞ்சம் கொஞ்சமாய்
உறிஞ்சி குடித்தாவது
நீ என்னைச் சேரும்
நாள் வரை
வாழ்ந்து கொண்டிருக்கட்டும்
இந்த உயிர் !

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (18-Feb-18, 12:06 am)
பார்வை : 270

சிறந்த கவிதைகள்

மேலே