மீண்டும் முயற்சி செய்

நெஞ்சம் என்னும் ஊரிலே,
நினைவு கூடி தேரிழுக்கையிலே,
வானம் முழுங்குதே நந்தலாலா.
உன் கீதமென்னை மயக்குதே நந்தலாலா.

பாடி புகழ்ந்திடவே தீஞ்சுவை தமிழும் கற்றறியேன் நந்தலாலா.
மயக்கத்தில் உளறுகிறேன்,
என்னை பொறுத்தருள்வாயே நந்தலாலா.

நாதமில்லாமல் சுரங்களை வரிசைப்படுத்தாமல், சுருதிக்கு ஏற்ப ஏற்ற இறக்கமில்லாமல் ஏதேதோ எழுதி வைக்கிறேன் நந்தலாலா.
அத்தனையும் மனித இதயக் கதவுகளைத் தாண்டி உள் சென்று உறையுமோ நந்தலாலா.

பிரிவினை போக்க வேண்டுமே நந்தலாலா.
உள்ளப் பிரிவினை அழிக்க வேண்டுமே நந்தலாலா.

நானும் உன்னை உணர்ந்தவனாய் எழுதும் வரையறையின்றி எழுதுகிறேனே நந்தலாலா.
தலையில் குட்டுவாயோ,
அடியேனின் பெருந்தவறை பொறுப்பாயோ
எல்லாம் உந்தன் சித்தமே நந்தலாலா.

நெஞ்சம் இயம்பிய ஆசைகளெல்லாம் உன்னை நோக்கி என்னை இழுக்க,
உரலோடு பிணைக்கப்பட்ட மகவை போல உன்னோடு பிணைந்து நானும் வாழ்கிறேனே நந்தலாலா.

அரிதிலும், எளிதிலும் அறிய முடியாத இருள் பரவெளியில் சிறு மின்மினி பூச்சியாய் நானும் பறந்து பறந்து வெளிச்சம் நல்க முயற்சிக்கிறேன் நந்தலாலா.
ஒவ்வொரு தோல்வியிலும் மீண்டும் முயற்சி செய்,
மீண்டும் முயற்சி செய் என்று என்னுள் இருந்து உந்துகிறாயே நந்தலாலா...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (19-Feb-18, 1:19 am)
பார்வை : 1530

மேலே