அச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 7

"ஜொஹான், நீ எதற்கு இப்படி பதற்றமாக வருகிறாய்? தைரியமாக இரு" என்றாள் மெர்சி.

"இல்லை, அலெக்ஸை நினைத்து தான், அவனது தந்தை இறந்த விஷயத்தை எப்படி அவனிடம் தெரிவிப்பேன்" என்றான் ஜொஹான்.

"எப்படி இருந்தாலும் அதுதானே உண்மை ஜொஹான், நீ சொல்லித்தானே ஆகவேண்டும்" என்றாள் மெர்சி.

"ஆமாம், சொல்லித்தான் ஆகவேண்டும், நீ சற்று வேகமாக ஒட்டு" என்றான் ஜொஹான்.

அவர்கள் காவல் நிலையத்தை அடையும்போது இரவு எட்டு மணி. நேரமாகிவிட்டதால் உள்ளே வர அனுமதி அளிக்கப்படவில்லை.

"ஜொஹான், வா, நாம் இங்கேயே தங்கிவிட்டு நாளை காலை வருவோம்" என்றாள் மெர்சி.

"வேண்டாம், நாம் சர்ரே போய்விடலாம்" என்றான் ஜொஹான்.

"ஏன், வேண்டாம், இங்கேயே அருகில் ஏதும் நல்ல தங்கும் விடுதி இருந்தால் தங்கி நாளை காலை பார்த்துவிட்டு செல்லலாம்" என்றாள் மெர்சி.

"இல்லை, நாளை இரவு நமக்கு மாண்ட்ரியல் செல்ல வேண்டும், அதற்கான ஆயத்தங்கள் எதுவும் செய்யவில்லையே" என்றான் ஜொஹான்.

"அதை பார்த்துக்கொள்ளலாம்" என்றாள் மெர்சி.

"அப்படி என்றால் சரி. நாம் இங்கே தங்கி என்ன நடந்தது என்று பார்த்துவிட்டு செல்லலாம்" என்றான் ஜொஹான்.

இரவு முழுதும் என்ன நடந்ததோ என்ற பதட்டத்திலேயே இருந்தான் ஜொஹான்.

மறுநாள் காலை, எட்டு மணிக்கெல்லாம் காவல் நிலையத்தில் மேலதிகாரியை சந்தித்தனர் இருவரும்.

அங்கே அவர் கூறியது மேலும் பதற்றத்தை அதிகமாகியது.

அலெக்ஸை கைது செய்தது என்னவோ அதிக வேகமாக வாகனத்தை செலுத்தியதற்காகத்தான். ஆனால் கைது செய்தவுடன் விசாரணைக்கு ஒத்துழைக்காமலும் காவலர்களை தாக்கியும் பிரச்னையை பெரிதாக்கிக்கொண்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.

"சார்ஜன்ட், அவனுடைய தங்கையும் தந்தையும் இறந்துவிட்டனர், அந்த பதற்றத்தில் அப்படி செய்திருப்பான், அது மட்டும் அல்ல, அவன் சற்று எமோஷன் நேச்சர், அதனால் தான் அப்படி அசம்பாவிதம் நடந்திருக்கும், அவன் மிகவும் நல்லவன், மேலும் அவன் சர்ரேவில் மருத்துவமனை பரிசோதனை கூட அதிகாரியாக பணிபுரிகிறான்" என்றான் ஜொஹான்.

"நீங்கள் சொல்வது சரி தான், ஆனால் எப்போது அவர் காவலாளிகளை தாக்கினாரோ அப்போதே அவரை சாலை விதிமுறை மீறல் வழக்குப்பிரிவில் இருந்து குற்றவியல் பிரிவுக்கு மாற்றிவிட்டார்கள். அது மட்டும் அல்ல, அவரை கனடா கிழக்கு பிரிவு தலைமை காவல் பிரிவுக்கு மாற்றி விட்டார்கள், இப்போது அவர் ஷெரிங்க்டன் காவல் பிரிவில் ஹாரிஸ் என்ற அதிகாரியின் பாதுகாவலில் விசாரணையில் இருக்கிறார்." என்றார் அந்த அதிகாரி.

இடிந்துபோய் உட்கார்ந்தான் ஜொஹான்.

"ஜொஹான், என்ன ஆயிற்று, ஏன் இப்படி நடந்துகொள்கிறாய், வா, காருக்கு போகலாம்" என்றபடி அவனை கைத்தாங்கலாக காருக்கு கூடி வந்தாள் மெர்சி.

"ஏன் அப்படி நடந்துகொண்டாய்?" என்று கேட்டாள் மெர்சி.

"ஹாரிஸ் என்ற அந்த அதிகாரியின் விசாரணையில் இருக்கிறான் என்று சொன்னார்களே, அந்த ஹாரிஸ் மிகவும் கொடுமைக்காரர், அவரது விசாரணை முறை மிகவும் ஆபத்தானது. கொடுங்கோலர் போல நடத்துவார். எனது தந்தையும் அதே நிலையத்தில் தான் வேலை செய்கிறார், என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் என் தந்தையை அழைத்து என்ன செய்வதென்று கேட்கிறேன்" என்றான் ஜொஹான்.

"அது தான் சரி என எனக்கும் தோன்றுகிறது" என்றாள் மெர்சி.

தனது தந்தைக்கு கைபேசி மூலம் அழைப்பு கொடுத்தான் ஜொஹான்.

"அப்பா, வணக்கங்கள், இந்த நேரத்தில் உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்" என்றான் ஜொஹான்.

"பரவாயில்லை ஜொஹான், என்ன விஷயம் சொல், நன்றாக இருக்கிறாயா, இன்றோ நாளையோ இங்கே மாண்ட்ரியலுக்கு வருவதாக சொன்னாயே, உடன் மெர்ஸியையும் அழைத்து வருவாய் என்று சொன்னாய், நாங்கள் இங்கே என்னென்ன ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்பதை சொல்லவே இல்லை" என்றார் கென்னடி.

"அப்பா, இன்று இன்று இரவு கிளம்புவதாக இருந்தது, ஆனால் ஒரு பெரிய இக்கட்டான சூழ்நிலை, நமது அலெக்ஸை ஒரு சில சூழ்நிலை பிழைகள் காரணமாக காவல்துறை கைது செய்திருக்கிறது. அவனை ஷெரிங்க்டன் காவல் நிலையத்தில் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. நீங்களும் அந்த நிலையத்தில் தானே பணியாற்றுகிறீர்கள், உங்களால் ஏதும் செய்ய முடியுமா, அவனை வழக்கு இல்லாமல் விட முடியுமா? கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் அப்பா, பாவம், அவன் தந்தை இறந்தது கூட அவனுக்கு தெரியாது, அவனை கொஞ்சம் பார்க்கவாவது ஏற்பாடு செய்யுங்கள், நான் இப்போது இங்கிருந்து எந்த விமானம் முதலில் மாண்ட்ரியல் புறப்படுகிறதோ அதில் கிளம்பி வருகிறேன், அதேபோல் எனக்கு வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் காரை சற்று தாருங்கள்" என்றான் ஜொஹான்.

"ஓ அப்படியா நடந்தது, மிகவும் வருந்தத்தக்க விஷயம், நான் விடுமுறையில் இருக்கிறேன் என்பது உனக்கு தெரியும் அல்லவா, சரி, இருந்தாலும் உனக்காக முயற்சி செய்கிறேன், ஆனால் எந்த முடிவும் என் கையில் இல்லை, உனக்கே தெரியும் அந்த நிலையத்தின் அதிகாரி ஹாரிஸ் என்பது. இப்போது எனக்கிருக்கும் ஒரே சிந்தனை, அலெக்ஸ் காக நான் தொடர்பு கொண்டேன் என்றால் எனக்கு அலெக்ஸ் வேண்டப்பட்டவன் என்பது தெரிந்துவிடும், அதனால் அந்த ஹாரிஸ் அவனை இன்னும் துன்புறுத்தவும் வாய்ப்பிருக்கிறது. வேண்டுமென்றால் உனது தங்கைக்கு ஷெரிங்க்டனுக்கு அடுத்த நிலையமான நேப்பியர்வில்லேவின் கட்டுப்பாட்டு அறையில் தான் பயிற்சி போடப்பட்டிருக்கிறது. அவளிடம் சொல்லி விசாரிக்க சொல்லட்டுமா?" என்றார் கென்னடி.

"இல்லை அப்பா, அது சரியான யோசனை இல்லை, ஒரு பயிற்சி காவலர் கைதியை பற்றி விசாரிப்பது எனக்கு சரி என்று தோன்றவில்லை, ஏன், நீங்கள் பேசுவதால் ஏதாவது பிரச்னையா?" என்றான் ஜொஹான்.

"பிரச்சனை வருமா என்பதில் எனக்கு ஊர்ஜிதம் ஏற்படவில்லை, அது தான் எனது பலமான யோசனை, சரி, ஒரு வழி இருக்கிறது, நான் எனது விடுமுறையை ஒருவாரம் ரத்து செய்துவிட்டு பணியில் சேர்கிறேன், பிறகு, நீ எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த சுற்றுலாவிற்கு செல்கிறேன், அது முடிந்தவுடன் எனது பணி இடமாற்றம் பற்றி பேசிக்கொள்கிறேன், இது தான் சரியான யோசனை, விடுமுறையில் இருக்கும்போது கைதிகளை பற்றி விசாரித்தால் சந்தேகம் எழும்" என்றார் கென்னடி.

"அப்பா, உங்களுக்கு சிரமம் என்றால் வேண்டாம், ஆனால் இந்த நிலைமையில் அலெக்ஸ் பாவம், நாம் உதவவில்லை என்றால் வேறு யாரும் இல்லை அவனுக்கு உதவ, ஆனால் புத்தாண்டு வருகிறதே, நீங்கள் உங்கள் விடுமுறையை ரத்து செய்வதில் உங்களுக்கு ஏதும் பிரச்சனையோ மாணவருத்தமோ இல்லையே?" என்றான் ஜொஹான்.

"அப்படி ஒன்றும் இல்லை ஜொஹான், உனது நட்பை பார்த்து பெருமிதம் அடைகிறேன். நான் முயற்சி செய்கிறேன், இப்போது வேறு ஏதாவது வழியில் அறிய முடியுமா என பார்க்கிறேன், இல்லை என்றால் உடனடியாக விடுமுறையை ரத்து செய்ய முயல்கிறேன், நீ கவலைப்படாதே" என்று சொல்லிவிட்டு சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தார் கென்னடி.

சற்று நேரம் கழித்து தனது மகளுக்கு அழைப்பு விடுத்தார்.

"ஆஷ்லே, எங்கே இருக்கிறாய், பணியில் பரபரப்பாக இருக்கிறாயா, உன்னை தொந்தரவு செய்யவில்லை அல்லவா" என்றார் கென்னடி.

"என்ன அப்பா இது, நீங்கள் இப்படி எல்லாம் கேட்கலாமா, சற்று பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன் தான் என்றாலும் நீங்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம், என்ன விஷயம் அப்பா?" என்றாள் ஆஷ்லே.

"அது ஒன்றும் இல்லை, எனக்கு உன்னால் ஒரு சிறிய உதவி தேவை, ஆனால் நான் சொல்வது போல் தான் செய்ய வேண்டும்" என்றார் கென்னடி.

"சொல்லுங்கள் அப்பா, செய்கிறேன்" என்றாள் ஆஷ்லே.

"நீ எப்போது பணியை முடித்து ஒய்வு பெறப்போகிறாயோ அப்போது எனக்காக நீ ஷெரிங்க்டன் காவல் நிலையத்திற்கு போ, அங்கு அலெக்ஸ் என்ற ஒருவனை கைது செய்து விசாரணைக்கு காவலில் வைத்திருக்கின்றனர், அவன்மேல் ஏதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா, இல்லை வெறும் விசாரணை அளவில் தான் இருக்கிறதா என்று பார், முக்கியமான விஷயம், நீ எனது மகள் என்பது அங்கிருக்கும் எந்த அதிகாரிக்கும் தெரிய வேண்டாம், அதற்கேற்றாற்போல உன்னிடம் இருக்கும் நிலுவை வழக்குகள் பற்றிய கோப்பைகளில் எதையாவது உதாரணம் காட்டி அதன் காரணமாக ஒரு சிறிய ஆய்வறிக்கை தர வேண்டி விசாரிப்பதாக சொல், என்ன எது என்று என்னை கூப்பிட்டு கூறு, முடியுமா?" என்றார் கென்னடி.

"சரி அப்பா, முயற்சி செய்கிறேன், முடிந்தவரை முடித்துவிட்டு உங்களிடம் பேசுகிறேன்" என்றாள் ஆஷ்லே.

வெஸ்ட்மின்ஸ்டரில்...

"மெர்சி, நாம் இன்னும் நான்கு மணி நேரத்தில் வான்கூவர் விமான நிலையத்தில் இருந்து வெஸ்டென் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக ஷெரிங்க்டன் போகப்போகிறோம், தவறாக நினைக்காதே, அங்கிருந்து கார் மூலம் மாண்ட்ரியல் போகலாம்" என்றான் ஜொஹான்.

"நீ என்ன சொல்கிறாயோ அப்படியே செய்யலாம் ஜொஹான், எனக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா என்பதை விட உனக்கு எது சந்தோஷமோ அதை நான் முழு மனதாக ஏற்று செய்வேன், நீ சொன்ன படியே செய்யலாம்" என்றாள் மெர்சி.

விமானம் மூலம் ஷெரிங்க்டன் நோக்கி பறந்தனர் இருவரும்.

இதற்கிடையே ஷெரிங்க்டன் காவல் நிலையத்தில்......

திகில் தொடரும்.

பகுதி 7 முடிந்தது.

எழுதியவர் : முபாரக் (19-Feb-18, 11:59 am)
சேர்த்தது : முபாரக்
பார்வை : 208

மேலே