அச்சுறுத்தும் நிமிடங்கள் பகுதி 6

சர்ரேவில் அவர்களின் இல்லம் இருக்கும் க்ளோவர்டெலில் இருந்து பசிபிக் ஹைவே வழியாக அரைமணி நேர ஓட்டுதலில் பிரேசர் நதி பாலத்தை தாண்டி சற்று தொலைவில் வெஸ்ட்மின்ஸ்டர் நகரை அடைந்தது அவர்களது கார்.

"ஜொஹான், இன்னும் சற்று நேரத்தில் இருட்டிவிடும், அது மட்டும் இல்லை, பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீ அறிவிப்பை கவனித்தாய் அல்லவா?" என்றாள் மெர்சி.

"ஆமாம், அதற்காக நாம் என்ன செய்வது, கண்டிப்பாக அலெக்ஸை இன்று நான் பார்த்தாக வேண்டும், ஏனென்றால், அவனிடம் பேசி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன, மேலும் நாம் நாளை காலையில் வான்கூவரில் இருந்து மாண்ட்ரியல் செல்ல இருக்கிறோம், எனது வீட்டில் உன்னை அறிமுகப்படுத்தி வைக்கப்போகிறேன், மேலும் புத்தாண்டு கழிந்து நாம் உனது வீட்டிற்கு செல்கிறோம், ஒட்டாவாவில் இருக்கும் உன்னுடைய வீட்டிற்கு சென்று அங்கே இரண்டு மூன்று நாட்கள் தங்கி உனது பெற்றோரை சந்திக்கிறோம், பின் நமது விடுமுறை கழிந்து வான்கூவருக்கு பணிக்கு வருகிறோம். இது தான் எனது திட்டம். ஆனால் அலெக்சின் நிலைமை தெரிந்தால் அதன்படி திட்டத்தை மாற்ற நேரிடும்" என்றான் ஜொஹான்.

"ஜொஹான், ஒன்று சொன்னால் தப்பாக நினைக்காதே, நீ ஏன் அலெக்சிற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறாய், என்னை விடவும் நாம் இருவரின் வாழ்க்கையை விடவும் அவன் தான் முக்கியமா?" என்றாள் மெர்சி.

"மெர்சி, என்ன பேசுகிறாய், நீ வேறு அவன் வேறு, ஆனாலும் அவன் எனது உயிர் நண்பன், எதற்காகவும் அவனை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்" என்றான் ஜொஹான்.

"எனக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டாயா? உனக்காக தான் அவனிடம் நான் சகஜமாய் பழகுகிறேன், நீ சொல்கிறாய் என்பதற்காக எனக்கு விருப்பம் இருந்தாலும் இல்லை என்றாலும் நீ அலெக்சிற்காக செய்யச்சொல்லும் அணைத்து உதவிகளையும் செய்தேன்" என்றாள் மெர்சி.

"மெர்சி, நீ ஒன்றை புரிந்துகொள், நாம் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம், ஆனால் அவன் என் நண்பன், எனக்காக நீ நான் சொல்லும் உதவிகளை செய்கிறாய் என்பதில் எனக்கு மகிழ்ச்சி தான், உன்னை நான் கஷ்டப்படுத்துகிறேன் என்றால் என்னை மன்னித்துவிடு" என்றான் ஜொஹான்.

"அதற்கில்லை ஜொஹான், நீ ஒரு விஷயத்தை புரிந்துகொள், அவன் மேல் நீ காட்டுவது பாசம் இல்லை, அது ஒரு பரிவு ஒரு இரக்கம் என்பது எனக்கு தெரியும், ஆனாலும் நீ அளவுக்கு மீறி அவனுக்காக இறக்கப்படுகிறாய், உதவுகிறாய், அவனால் என்றாவது நமக்குள் பெரிய பிரச்சனை வரும் என எனக்கு தோன்றுகிறது." என்றால் மெர்சி.

"மெர்சி, உனக்கு அவன் மேல் இவ்வளவு வெறுப்பு ஏன்? அவன் மிகவும் நல்லவன், அவனால் என்றும் நமக்குள் எந்த ஒரு பிரச்னையும் வராது, என்னை நம்பு, உன்னை விட்டு என்னால் வாழ முடியாது என்பதையும் நீ புரிந்துகொள்" என்றான் ஜொஹான்.

"பார்க்கலாம், ஆனால் எனக்கு அலெக்ஸ் மேல் கோபம் இல்லை, அதை நீ புரிந்துகொள், அவன் மிகவும் நல்லவன், ஒரு வெகுளி, மிகவும் சென்டிமெண்டான ஒரு நபர் தான், உன்னை மிகவும் நம்புகிறான், எல்லாம் நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால், எல்லாவற்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது, அவன் உனக்காக என்ன செய்கிறான், நீ அவனுக்காக எவ்வளவு செய்கிறாய் என எண்ணிப்பார், இனி வைத்தாலும் எட்டாதல்லவா?" என்றாள் மெர்சி.

"பலனை எண்ணி உதவுவது என் குணம் அல்ல, அது போல எனக்கு அவன் உதவி செய்து தான் வாழவேண்டும் என்ற அவசியமும் இல்லை, அவனால் ஒரு உதவி எனக்கு செய்யமுடியும் என்றால் அதை எனக்கு அவன் தனது உயிரை கொடுத்தாவது செய்வான், அது உனக்கே தெரியும்" என்றான் ஜொஹான்.

"ஜொஹான், நான் உன்னிடம் வாக்குவாதம் செய்வதாக எண்ணாதே, நான் உன்மீது அளவு கடந்த பாசம் காதல் வைத்திருக்கிறேன், மிகவும் பொசெசிவாக இருக்கிறேன், எனக்கு மட்டுமே காட்டவேண்டிய பாசத்தை நீ எனக்கு வேறொரு நபரோடு பகிர்ந்தளிப்பது வேதனையாக உள்ளது, அந்த மனக்கஷ்டத்தில் தான் இப்படி பேசினேன், எனக்கு அலெக்ஸ் மீது எந்த கோபமும் இல்லை, நான் உன்னை கஷ்டப்படுத்துமாறு பேசி இருந்தால் மன்னித்துவிடு, ஐ லவ் யு" என்றாள் மெர்சி.

"இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது, உனது எண்ணத்தை புரிந்துகொண்டேன், விடு, ஐ லவ் யு டூ" என்றபடி அவளது முன்னேற்றியில் முத்தமிட்டான் ஜொஹான்.

அடுத்த நிமிடத்தில் கார் அலெக்சின் வீட்டின் முன் நின்றது, ஆனால் வீட்டில் யாரும் இல்லை, பூட்டி இருக்கவே, அக்கம் பக்கத்தில் விசாரித்தான் ஜொஹான், அவர்கள் கூறியது மிகவும் வேதனை தந்தது ஜொஹானுக்கு, ஆம், அலெக்சின் தங்கை மருத்துவமனையில் இறந்துவிட்டதாகவும் அதனை அறிந்த அவனது தந்தையும் மயங்கி விட்டதாகவும் அவரை அலெக்ஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் கூறினர்.

சற்றும் தாமதிக்காமல் ஜொஹான் வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவமனையை நோக்கி காரை செலுத்தினான்.

"ஜொஹான், நீ ஏன் பேசாமல் வருகிறாய், உன் முகம் சிவந்திருக்கிறதே, கோபமாக இருக்கிறாயா?" என்றாள் மெர்சி.

"கோபமாக இல்லை, மனக்கஷ்டமாக இருக்கிறது, டெய்சி மிக சுட்டியான பெண், அவளுக்கு இப்படி ஒரு முடிவு ஏற்பட்டதை எண்ணி வருந்துகிறேன், அலெக்ஸ் இதை எப்படி தாங்கினான்? பாவம், அவனது தந்தை என்ன நிலைமையில் இருக்கிறாரோ" என்றான் ஜொஹான்.

"ஜொஹான், நிலைமை தெரியாமல் அலெக்ஸை பற்றி பேசி விட்டேன், என் மீது கோபம் கொள்ளாதே" என்றாள் மெர்சி.

"உன்மீது கோபம் இல்லை மெர்சி, அலெக்ஸை நீ புரிந்துகொள்" என்றான் ஜொஹான்.

அடுத்த பத்து நிமிடங்களில் கார் வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவமனை வாசலில் நின்றது.

உள்ளே சென்று முகப்பில் விசாரித்தான் ஜொஹான், "இங்கே திரு. ஆல்பர்ட் என்பவர் சிறிது நாட்கள் முன்பாக சேர்க்கப்பட்டிருந்தாரே, அவரை பார்க்க முடியுமா" என்றான் ஜொஹான்.

"நீங்கள் யார் என தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டாள் அங்கிருந்த பெண்.

"நான் அவரது மகனின் தோழன்" என்றான் ஜொஹான்.

"உங்கள் பெயர்?" என்றாள் அந்த பெண்.

"என் பெயர் ஜொஹான் பென்னட்" என்றான் ஜொஹான்.

"மிஸ்டர் ஜொஹான், உங்களிடம் இந்த சங்கடமான செய்தியை சொல்ல மன்னிக்கவும், அவரை இங்கே சேர்க்க அவரது உடன் வந்த அந்த நபர் அவரது மகன், அவர் தனது காரில் வேகமாக ஒட்டிக்கொண்டு வந்து இங்கே சேர்த்ததால் சாலை போக்குவரத்து பாதுகாப்பு துறை அவரை கைது செய்திருக்கிறது, ஆனால் அவர் அவர்களை தாக்கி விட்ட காரணத்தால் அவரை குற்றவியல் பிரிவில் கைது செய்து விட்டனர். ஆனால் அவர் எடுத்த அவ்வளவு துணிச்சலான செயல்களும் அவரது தந்தையை காப்பாற்றவில்லை, அன்று மாலையே அவர் தந்தை இறந்துவிட்டார், அவர் இன்னும் வரவில்லை ஆதலால் அவரது உடலை பிணவறையில் வைத்திருக்கிறோம்" என்று சொன்னாள் அந்த பெண்.

உடைந்துபோன உட்கார்ந்துவிட்டான் ஜொஹான். கண்கள் தாரை தாரையாய் கண்ணீர் விட ஆரம்பித்தன.

"ஜொஹான், உன்னை ஆசுவாசப்படுத்திக்கொள், சிறிய பிள்ளை போல நடந்துகொள்ளதே" சமாதானப்படுத்த முயற்சித்தாள் மெர்சி.

ஆனால் முடியவில்லை.

"மெர்சி, நீ காரை ஒட்டு, உடனே நாம் வெஸ்ட்மின்ஸ்டர் காவல் நிலையத்திற்கு செல்வோம், அலெக்ஸை எப்படியும் பார்க்கவேண்டும்" என்றபடி கண்களை துடைத்துக்கொண்டு வேகமாக காரை நோக்கி நடந்தான் ஜொஹான்.

அவன் நடந்த வேகம், மெர்சியால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஒரு பதட்டத்திலேயே அவன் பின்னால் நடந்தாள்.

காரில் ஏறியவுடன் ஒரு வார்த்தை பேசாமல் கண்கள் கலங்கியபடியே ஜொஹான் உட்கார, மெர்சி மௌனமாய் காரை வெஸ்ட்மின்ஸ்டர் காவல் நிலையம் நோக்கி ஓட்டினாள்.

திகில் தொடரும்.

பகுதி 6 முடிந்தது.

எழுதியவர் : முபாரக் (18-Feb-18, 1:09 pm)
சேர்த்தது : முபாரக்
பார்வை : 224

மேலே