கைவிளக்காம் கடவுள் திங்கள்

ஆயிற்று, சீதாவை ராமனுக்கு கன்னிகா தானம் செய்து கொடுத்தாயிற்று. இருவரும் மணமேடையில் “போகமும் யோகமுமாய்” அமர்ந்திருக்கும் கண் கொள்ளா காட்சியை வரைந்தும் ஆயிற்று.

மெல்ல மெல்ல மேகங்கள் திரண்டு, இருண்டு, ஒன்று கூடி, காற்று பலமாய் குளிராய் வீச ஆரம்பிக்க, பெரு மழை, புயல் வருவதற்கு முன் அறிகுறிகள் உருவாவதைப் போல் கம்பர் எனும் மாபெரும் கதைச் சொல்லி, இப்போது இதிகாசத்தின் அடுத்த பகுதிகளுக்கு தனது காமிராக்கண்களை திருப்புகிறார்.

சீதா கல்யாணம் முடிந்து அயோத்திக்கு திரும்பும் தசரதனுக்கு சில சகுனங்கள் கண்களில் படுகின்றன.

துணுக்குறும் தசரதன் நிமித்தகனை அழைத்து பேசுவதும் நிமித்தனின் பதிலும் இயல்பான உரையாடல் காட்சிகள்.

“‘நன்றோ? பழுது உளதோ? நடு உரை நீ நயம் ” என்று தசரதன் கேட்க அதற்கு நிமித்தனும் “இன்றே வரும் இடையூறு, அது நன்றாய்விடும்” என்கிறான்.

பின், ராமன் பதவியேற்க உள்ள செய்தியை அயோத்தி நகரவாசிகளின் ஆரவாரத்தால் அறிந்து கொண்ட கூனியின் மன நிலையை கம்பர் உக்கிரச் சொற்களால் சொல்கிறார்.

சொல்லப்போனால் கூனியின் மனநிலையை மட்டுமல்ல, பின்னர் கைகேயியின், தொடர்ந்து தசரதனின்…

காப்பியத்தின் முக்கிய மைல்கற்களில் ஒன்றாக கூனி உறங்கிக்கொண்டிருக்கும் கைகேயியை அடைந்து அவளை எழுப்பும் பாடலைச் சொல்லலாம்.

எய்தி அக் கேகயன் மடந்தை ஏடு அவிழ்

நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால்

செய்த பேர் உவமைசால் செம் பொன் சீறடி

கைகளின் தீண்டினள் காலக் கோள் அனாள்

கைகேயியை நெருங்கி, தண்ணீரில் ஒற்றைக்காலில் நின்று செய்த தவத்தால் கைகேயியின் செம் பொன் போன்ற சிறிய பாதங்களுக்கு உவமையாகும் பாக்கியத்தைப் பெற்ற, மென்மையான மலர்ந்த தாமரையை ஒத்த பாதங்களைத் தீண்டினாள் ராகு, கேது போன்ற கிரகங்களைப் போன்ற கூனி.

முதலில் கைகேயின் பாதங்களுக்கான உவமை -நீரில் தாமரை கொடி ஒற்றைக்காலில் தவமாக நிற்பதால் (அல்லது அப்படித் தோற்றம் தருவதால்) கையேயின் பாதங்களுக்கு உவமையாகக் கூறப்படும் பாக்கியத்தை பெற்றது. இந்த ஒற்றைக்காலில் நிற்பது என்பது தன் முடிவில் மாறாமல் விடாப்பிடியாக நிற்பது என்றும் எடுத்துக்கொண்டால் பின்னர் தசரதனின் மன்றாடல்களுக்குச் செவி சாய்க்காத கைகேயிக்கு இன்னும் பொருத்தமாகவே படும்.

இரண்டாவது, கூனி தனது கைகளால் கைகேயின் பாதங்களைத் தொடுவதைச் சொல்ல “தீண்டுவது” என்ற சொல்லை உபயோகப்படுத்துவது. தீண்டுவது என்பதுமே அரவம் தொடுவதுதான் நம் நினைவில் முதலில் தீண்டும். கூனியின் எண்ணங்களை, செயல்களை வாசகர்களுக்கு வெளிப்படுத்துவதற்கு இந்தச் சொல் நல்ல உதாரணம் என்று நினைக்கிறேன்.



அடுத்தது இன்னொரு உதாரணம் – கூனியை தீய சகுனங்களுக்கு உதாரணமாக ராகு கேது கிரகங்களுக்கு ஒப்பிடுவது.

எய்தி – கைகேயியை நெருங்கி;

அக்கேகயன் மடந்தை ஏடு அவிழ்-கைகேயியின் இதழ் விரிந்த;

நொய்து தாமரை அலர் – மென்மையாகமலர்ந்த தாமரையானது;

நோற்ற நோன்பினால் – (நீரில் ஒரு காலில் நின்று) செய்த அருந்தவத்தால்;

பேர் உவமை சால் செய்த – பெரிய உவமையாகஅமையும்படி பொருந்திய;

செம்பொன் சீறடி – சிவந்த பொன்னணி அணிந்த சிறிய பாதங்களை;

கைகளில் தீண்டினள் – தன்கைகளால் தொட்டாள்.

காலக் கோள் அனாள் -தீய சகுனங்களுக்கான ராகு, கேது என்னும் கிரகங்களை போன்ற கூனி;

தீண்டுதல், அரவம், கிரகங்கள் என்றதுமே சந்திர கிரஹணம் உங்களுக்கு நினைவிற்கு வந்தால் கம்பர் உங்களை நோக்கி திருப்தியுடன் தலையசைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

அடுத்தப் பாடலில்,

கைகேயியை எழுப்பி, “கடும் விஷப்பாம்பாகிய இராகு தன்னை விழுங்க நெருங்கும் நேரத்திலும் தன் இயல்பு மாறாமல் குளிர்ந்த ஒளி வீசக்கூடிய வெண்மைச் சந்திரனைப் போல் மாபெரும் துன்பம் உன்னைப் பீடிக்க நெருங்கிக்கொண்டிருக்கும் போதிலும், அதை உணராமல் நிம்மதியாக உறங்குகிறாய்” என்கிறாள் கூனி.

சந்திரக்கிரஹணத்தைப் பாம்பு நிலவை விழுங்குதல் என்ற வழக்கு கம்பர் காலகட்டத்தில் இருந்திருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் எங்கெங்கலாம் இந்தக் குறிப்பு இருக்கிறது என்ற ஆராய்ச்சிக்கு நான் போகப்போவதில்லை.

கூனி தன்னுள் எத்தனை பதற்றமாக, கடும் கோபத்தில் இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டாமல் குத்தலாகவும் அமைதியாகவும் அழுத்தமாவும் தனது தாயக்கட்டையை உருட்ட ஆரம்பிக்கிறாள்…இதிகாசத்தில் மனிதர்கள், சம்பவங்கள் தீவிரமாக உருள ஆரம்பிக்கின்றன…

அணங்கு, வாள் விட அரா அணுகும் எல்லையும்

குணம் கெடாது ஒளி விரி குளிர் வெண் திங்கள்போல்

பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும்

உணங்குவாய் அல்லை நீ உறங்குவாய என்றாள்.

அணங்கு வாள் – அச்சம் தரக்கூடிய, கொடிய;

விட அரா அணுகும் எல்லையும் – விஷப்பாம்பாகிய இராகு நெருங்கும் நேரத்திலும்;

குணம் கெடாது ஒளி விரி குளிர்வெண்திங்கள் போல் – தனது தனித் தன்மை சிறிதும் மாறாமல் ஒளியை எங்கும் வீசுகின்ற, குளிர் வெண் நிலவைப் போல்

பிணங்கு வான் பேர் இடர் பிணிக்க நண்ணவும்- வானளாவிய பெரும் துன்பம் பீடிக்க உன்னை நெருங்கி வந்துகொண்டிருக்கும் வேளையிலும்

நீ உணங்குவாய் அல்லை உறங்குவாய் என்றாள் – நீ அதை உணராமல் நிம்மதியாக தூங்குகின்றாய்’என்றாள்.

கூனியால் மனம் மாற்றமடைந்த கைகேயி தனது கோலத்தை மாற்றுவதிலிருந்து ஆரம்பித்து பெரும் இதிகாசத்திற்கே உரிய உக்கிர, உச்ச நாடகீயத்தருணங்கள் அலைஅலையாய் வருகின்றன.



கைகேயி தனது தோற்றத்தை மாற்றி, தசரதனிடம் தந்திரமாக வரங்களை பெறுதல், தசரதன் வரப்போகும் துன்பத்தை அறியாமல், ஆராயாமல் வரங்களை அளித்துவிட்டு பின் அவற்றின் விபரீதம் புரிந்ததும் பெரும் அதிர்ச்சியும் துன்பமும் அடைந்து அந்த தீரா இரவில் அவர்களுக்கிடையில் உஷ்ணமான வாதங்கள்…மொழிகள், மறு மொழிகள்…இரவின் இறுதியில் தசரதன் தவிர்க்கவே முடிந்திருக்காத வரங்களை தந்துவிட்டு கொள்ளா துயரில் மூழ்குதலும் கைகேயி நினைத்ததை சாதித்துவிட்ட திருப்தியில் துயிலில் ஆழ்தலும் வரும்வரை…அப்பப்பா…உச்ச நாடகீயத் தருணங்கள் அவைகள்.

இந்தக் கட்டத்தில் உள்ள மூன்று பாடல்களை நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.



முதல் பாடல்:

கைகேயின் வரங்களைக் கேட்டு அதன் விளைவுகளை உணர்ந்ததும் தசரதனின் நிலை:

பூதலம் உற்று, அதனில் புரண்ட மன்னன்

மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்

வேதனை முற்றிட, வெந்து வெந்து, கொல்லன்

ஊது உலையில் கனல் என்ன வெய்து உயிர்த்தான்

இந்தப் பாடலுக்கு விளக்கமே தேவையில்லை. எளிமையான வார்த்தைகளே போதும் தசரதனின் மகா துயரத்தை உணர்த்த

மன்னனின் மா துயரம்…

பூமியில் விழுந்து புரளும் தசரதனின் மனக்கொதிப்பு கொல்லனின் உலைக்கள வெப்பம் போலிருக்கிறது. துருத்தியில் ஊதும் போதெல்லாம் உலைத்தீயின் கனல் சிவந்து சிவந்து அடங்குவது போல் மாமன்னன் வெந்து வெந்து வெப்ப மூச்சுகளை வெளியிடுகிறான்…

அடுத்தப் பாடல் தசரதனின் அப்போதைய மனச் சித்திரத்தை இன்னமும் தெளிவாகக் காட்டிவிடுகிறது.

உலர்ந்தது நா உயிர் ஓடலுற்றது உள்ளம்

புலர்ந்தது கண்கள் பொடித்த பொங்கு சோரி

சலம் தலைமிக்கது தக்கது என்கொல் என்று என்று

அலந்து அலையுற்ற அரும் புலன்கள் ஐந்தும்

நாக்கு உலர்ந்துவிட்டது; உயிர் உடலை விட்டு நீங்கத் தொடங்குகிறது; உள்ளம் வாடிவிட்டது;

கோபக் கண்கள் குருதியாகச் சிவக்கின்றன ..ஐம்புலன் களும் “என்ன செய்யலாம், என்ன செய்யலாம் என அலைந்து, கலங்கித் தவிக்கின்றன.

என்ன செய்வது? என்ன வரங்கள் என்று கேட்காமல் தருவேன் என வாக்கு கொடுத்துவிட்டு அவற்றின் விபரீதங்களை உணர்ந்தபின் தவிக்கும் மன்னனின் அன்றைய இரவு நிலைச் சித்திரத்தை கீழ்கண்ட பாடலின் மூலம் கம்பர் வரைந்து காட்டுகிறார்.

கைகேயி தனது வரங்களை வெளியிட்டதும் தசரதன் அவளிடம் பேசுகிறான், மன்றாடுகிறான், என்னவாகிலும் சமாதானங்கள் சொல்லி அவளை வரங்களை மாற்றச் சொல்லி மன்றாடிக்கொண்டே இருக்கிறான்.

பெரும் துயர தசரதன், சற்று நேரம் நிற்கிறான்…பின் தாங்க மாட்டாமல் தரையில் விழுகிறான்…ஓவியம் போல உயிரில்லாமல் ஓய்ந்து கிடக்கிறான்… பின்…மறுபடியும் எழுகிறான், மறுபடியும் வாக்கு வாதம், மன்றாடல், தன் நிலையை மாற்றிக்கொள்ளாத அவளை அப்படியே பிடித்து சுவரில் மோத நினைக்கிறான். அது முடியாதது, தீராப் பழியைக் கொண்டு வந்துவிடும் என்றும் அவனுக்குத் தெரியும். அவள் காலில் விழுந்து மன்றாடுகிறான்…

அன்றைய கடும் இரவில் ஆவி பதைக்கும் தசரதனின் நிலையை இந்தப் பாடல் கடும் இருள் நாடக மேடையின் நடுவில் தோன்றும் ஓர் ஒளி வட்டம் போல் மிகத் தெளிவாக காட்டிவிடுகிறது.

எத்தகைய கொடும் இரவு…

மேவி நிலத்தில் இருக்கும் நிற்கும் வீழும்

ஓவியம் ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும்

பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும்

ஆவி பதைப்ப அலக்கண் எய்துகின்றான்

மேவி நிலத்தில் இருக்கும்; நிற்கும்; வீழும் – நிலத்தில் நிற்பான், பின் விழுவான்;

ஓவியம்ஒப்ப உயிர்ப்பு அடங்கி ஓயும் – உயிரில்லாத ஓவியம் போல அடங்கி ஓய்ந்திருப்பான்

பாவியை உற்று எதிர் பற்றி எற்ற எண்ணும் – பாவியான கைகேயியை (கம்பர் இப்போது கைகேயியை பாவி என அழைப்பதை கவனிக்கலாம்!) பிடித்து (சுவரில்) மோத நினைப்பான்

ஆவி பதைப்ப, அலக்கண் எய்துகின்றான். – பெருந்துன்பத்தை அடைந்த உயிர் பதைக்கும் தசரதன்…

எத்தனை தடவைகள் எப்படிக் கெஞ்சினாலும் கைகேயின் முடிவு என்ன என்பது எனக்கும் உங்களுக்கும் கம்பருக்கும் தெரிந்ததே.

********

இதிகாசத்தில் கம்பர் இயற்கையை வருணணைகள் மூலம் வியந்துகொண்டே இருக்கிறார். ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு. இயற்கையை குறிப்பிடத் தவறுவதே இல்லை. தொடர்ந்து தொடர்ந்துகொண்டே இருக்கிறார், சூரியனும், நிலவும் எழுந்து, இறங்கிக்கொண்டே இருக்கின்றன. தினந்தோறும் இவை நடந்தாலும் அவை புத்தம் புதிதாகவே இருப்பது போல் கம்பர் எத்தனை இடங்களில் இவைகளைப் பயன்படுத்தினாலும் புத்தம் புதிதாகவே இருக்கின்றன. விதம் விதமான சூழ்நிலைகளை குறிப்பிட அவற்றை சொல்லும்/பயன்படுத்தும் விதங்களும் காரணம்.

பின் வரும் பாடலில் குறிப்பிடப்படும் இரவும் நிலவும் இன்னொரு உதாரணம்.

கைகேயியின் “வரங்களால்” அயோத்தியை துயர கரு மேகங்கள் சூழ்ந்துகொள்கின்றன. எங்கெங்கும் எல்லாரிடத்திலும் வருத்தம் தோய்ந்து கிடக்கிறது. வரங்களின் விளைவாக நடக்கும் காட்சிகள், மிக பிரபல வரிகள்(உ-ம்: “நதியின் பிழையன்று…”) மூலம் பிரபலம்.

நான் அவற்றையெல்லாம் தாண்டி ராமனும், சீதையும், லஷ்மணணும் அயோத்தி நகர் நீங்கும் படலக் காட்சிக்கு வந்திருக்கிறேன்.

ராமன், லஷ்மணணும் சீதாவும் சூழ அயோத்தியை விட்டு நீங்கும் போது நகர மாந்தர்களும் அழுதவாறே அவர்களைத் தொடர்கின்றனர்.

அனைவரும் அன்றிரவு ஓர் சோலையில் தங்குகின்றனர். நகர மாந்தர் அனைவரும் அசந்து தூங்கிக்கொண்டு இருக்கையில் ராமன் சுமந்திரனை அழைத்து தான் வந்த தேரை திரும்ப அயோத்திக்கு ஓட்டிச் செல்லுமாறு கூறுகிறான். காலையில் தேர் இல்லாவிடில், நகர மாந்தர்கள் ராமன் அயோத்திக்குத் திரும்பிவிட்டதாக கருதி அவர்களும் அயோத்திக்கு திரும்புவார்கள் என்ற உபாயத்தைச் சொல்கிறான்.

சிறு வாதங்களுக்குப்பின் சுமந்திரன் யாரும் அறியாமல் தேரை அயோத்திக்குச் செலுத்துகிறான். ராமன், லஷ்மண், சீதா மூவரும் அன்றிரவு கடும் இருட்டில், வனத்தினுள் நுழைந்து தங்கள் பயணத்தை, வன வாசத்தை ஆரம்பிக்கின்றனர்.

அந்த இரவு…

பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை

அரக்கரைப் பொருந்தி அன்னார்

செய் வினைக்கு உதவும் நட்பால்

செல்பவர்த் தடுப்பது ஏய்க்கும்

மை விளங்கியதே அன்ன

வயங்கு இருள் துரக்க வானம்

கைவிளக்கு எடுத்தது என்ன

வந்தது கடவுள் திங்கள்

தீயத் தொழில்கள் செய்யும் அரக்கர்களை அழிக்க வனம் செல்லும் ராமலக்குவரை மேலும் செல்லாதவண்ணம் தடுக்கும் இருள்;

தீயத் தொழில்கள் செய்யும் அரக்கர்களுக்கு இருள் என்றுமே உகந்தது, எனவே அவர்களுக்கு நட்பாக இருக்கும் இருள் என்கிறார் கம்பர். பொருத்தமாகவே உள்ளது.

அந்த நட்பினாலேயே அஞ்சன மையை அரைத்து மேலும் இருளோ இருளாகி வனத்தின் ஊடே செல்லும் ராமலக்குவரை தடுக்க முயல்கிறது மையிருள்.

இத்தனை வாக்கியங்களும் இருளின் கடும் இருண்ட தன்மையை விளக்கத்தான்!

சிறு குழந்தையிடம் ஏதெனு, ஒரு வண்ணப் பென்சில் மட்டுமே கொடுத்து வண்ணம் தீட்டச்சொன்னால் அது பேப்பர் கிழியும் வரை அல்லது பென்சில் முனை உடையும் வரை தீட்டோத் தீட்டென தீட்டித்தள்ளிவிடும். கம்பர் எனும் இயற்கையை வியக்கும் குழந்தை இந்த முறை கருப்பு வண்ணப் பென்சிலை எடுத்து அப்படி ஓர் கடும் காரிருளைத் தீட்டுகிறது!

அப்படிப்பட்ட, எங்கெங்கும் நிறைந்திருக்கும் முடிவிலா காரிருளை துரத்துவதற்காக ஆகாயமே கை விளக்கு எடுத்து வந்தது போன்று தெய்வீக சந்திரன் தோன்றுகிறது..!

என்ன அழகு, இல்லையா? இதே சந்திரனை இதே இதிகாசத்தில் பழித்துச்சொல்லும் காட்சிகளும் உண்டு. அவற்றை தற்போது வசதியாக மறந்துவிடுவோம்!

நாட்டைத் துறந்து தாய், தகப்பனார், உற்றார் உறவினரை துறந்து, தங்கள் உயிருக்கும் மேலாக நேசிக்கும் அயோத்தி மக்களைத் துறந்து, மரவுரி தரித்து இம்மூவர் மட்டும் காரிருளில் வனத்தினூடே செல்லும்போது கைவிளக்கு போன்று சந்திரன் துணைக்கு வருகிற சித்திரத்தை பார்த்து வியக்கத்தான் தோன்றுகிறது.

இந்தச் சித்திரத்தை நாம் வேறு எதனிலும் ஏற்றிக்கொண்டு காண இயலும்.

எத்தனையோ துடர்பாடுகளுக்கு, மனசஞ்சலங்களுக்கு, பிரச்சனைகளுக்கு மத்தியில் ஒரு ஆறுதலானச் சொல், ஒரு கனிவான பார்வை, சரியான வழி காட்டும் கரம், சட்டென கண்களில் படும் தேவாலயச்சுவர்களில் தென்படும் நம்பிக்கை வாக்கியம் எதுவாகிலும் அது கடவுள் திங்கள்தான் இல்லையா?

சிவா கிருஷ்ணமூர்த்தி

எழுதியவர் : (20-Feb-18, 5:42 pm)
பார்வை : 52

மேலே