அந்த மூன்று நாட்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
தீட்டு. எது தீட்டு?
மதி கெட்ட மானுடமே உன்னையே கேட்கிறேன். எது தீட்டு?
மனிதன் மாண்டால் தீட்டு என்றீர் ஏற்றோம். மனிதன் பிறந்தாலும் தீட்டு என்கிறீரே நியாயம் தானா?
மாத விலக்கு அர்த்தம் அறிவீரோ? அந்த மூன்று நாட்கள் விலக்கு, காமத்தை விலக்கு. ஆனால் நீயோ புனிதமான பெண்மையையே விலக்குகிறாயே அடுக்குமா?
பூமியானது சுழல்வதை நிறுத்தி விட்டால் சர்வமும் நாசமாகும் என்பார்கள். அது போலவே பெண்மை இல்லாத நிலை அகிலத்தின் முடிவு என்பதாகும்.
தீட்டாம் அதனால் கோவிலுக்கு செல்லக் கூடாதாம். விசித்திரம் யாதெனில் உள்ளிருப்பவளோ தாய் சிவசக்தி.
அவளும் பெண்தானே?
மனிதா எத்துனை வக்கிரம் உன்னுள். செல்வம் எனும் லக்ஷ்மியை விலக்காத நீ பெண்மை எனும் மகாலக்ஷ்மியை மட்டும் விலக்க நினைத்ததேனோ?
அதிலும் ஒரு அற்புதக் கோவிலிலோ பெண்கள் அறவே அனுமதிக்க படுவதில்லை.
இறைவன் வேண்டாம் என்றிருப்பானோ?? இருக்கலாம் அவனும் ஆணல்லவா.
மாத விடாய் எனும் அந்த மூன்று நாட்கள் பெண்ணானவள் தனது உடலின் இழுக்கான குருதி வெளியேற்றப்பட்டு புனிதத்துவத்தை மீண்டும் மீண்டும் அடைகிறாள்.
எனினும் ஆணின் நிலையோ?
அனைத்து கீழ்த்தரமான செயல்களிலும் ஆணினத்தின் பங்கு ஓங்கி இருக்கும். காரணம் யாதெனில் அகிலம் தோன்றிய காலம் முதல் இன்று வரை ஆண்கள் தனது குருதியானது தூய்மைப்படுத்தப்படவே இல்லை.
உன்னை சொல்லி குற்றமில்லை. படைத்தவனையே கூற வேண்டும் குறை. படைத்தவன் பிரம்மனல்லவா!
ஒரு வேலை ஆணை படைத்த போது தாய் சரஸ்வதி விலக்கில் இருந்திருப்பாளோ! யாரறிவார்?
துயிலுரிக்கப்பட்ட போது தாய் திரௌபதிக்கு மாத விலக்கு என்பது அனைவரும் அறிந்த உண்மை. எனினும் மூடன் துச்சாதனன் அவள் மானம் பறிக்க துணிந்தான். ஆணவம் கொண்டு ஆண்கள் அனைவரும் அமைதி காத்தனர்.
பாரதப்போரை பங்காளி சண்டை என்றுரைப்பவர்கள் மடையர்கள். உண்மையில் அது ஆணவம் கொண்ட ஆண்மைக்கும் அப்பாவியான பெண்மைக்கும் இடையில் மூண்ட யுத்தமாகும்.
உண்மையில் அந்த மூன்று நாட்கள் அகிலத்தின் நலனுக்காக பெண்கள் நிகழ்த்தும் தவமாகும். பெண்மை பூஜிக்க படவேண்டியவளாவாள்.
தீட்டு என்பதெல்லாம் வீணர்களின் சதி.
பிரதி மாதமும் குருதி சுத்தம் செய்யப்படும் பெண்களே கோவிலுக்கு செல்ல தகுதியற்றவர்கள் என்றால் ஆண்கள் அறவே அனுமதிக்கப்படக்கூடாது.
சுகத்தை அனுபவிக்கும் வேலைதனில் ஆண், பெண் இருவரும் ஒன்றாகவே அனுபவிக்கின்றனர்.
எனினும் வலி எனும் போது பெண்மை மட்டும் தனியே தள்ளப்படுவதேனோ!
இயற்கையெனும் விதியோ! இறைவன் செய்த சதியோ!
பெண்மையின் அந்த மூன்று நாட்கள் தீட்டு எனில், மனித சமுதாயமே தீட்டின் விளைவு என்பதை மறவாதீர்கள்.
பத்தினிகளுக்கெல்லாம் தலைவியாம் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அவள் பெற்றிராத மகன் அபிமன்யு உயிரை தியாகம் செய்தான். நானும் துணிவேன் எள்ளளவும் அஞ்சேன்.
நன்றி. வணக்கம்.