சூடான மழைத்துளிகள்
சீரான இடைவெளியில்
மழைத்துளிகள்
முகத்தில் நழுவுகிறது
விழிகளில் வழியும்
இளஞ்சூடான நீரோடு 
வெகு நாட்களுக்கு பிறகு
சிறைப்படுத்தப்பட்ட 
இதயங்கள்
வெளிநின்று 
நீளமான
பேச்சு வார்த்தையில்...
செல்லாக்காசுகள் என 
இழித்துரைக்கப்பட்ட 
காதல் இதயங்களை
சூளுரைத்து சிதைத்தல் ஒரு புறம்
சிலை வைத்து மாலை போட்டு
கம்பி வேலியிட்டு 
காவலுக்கு ஆளும் போட்டு
பாதுகாத்தல் மறுபுறம் 
அறிவுக்கருவிகளை 
இரும்பு பட்டறைகளுக்கு 
அனுப்பிவிட்டு
மூளையை முழுதாக 
மண்ணடைத்த பிண்டமாக்கி 
நடமாடவிட்ட 
நற்பண்பு நாயகர் மத்தியில்
தகிக்கும் இதயங்களுடன் 
உயிர் ஜோதி ஏந்தி
அன்பு முத்தங்களை
உலகிற்கு பரிசளித்து 
வெற்று உடலங்களை 
புதுப்பித்து உயிர்ப்பிக்கும்
உறுதியேற்ற இதயங்களாக 
ஒன்று சேர்ந்த இந்நாளில்
இதயங்கள் பல அதே 
உணர்வுடன் கூடியிருப்பது கண்டு
இரு ஜோடி விழிகளில்
வழியும்
இளஞ்சூடான நீரோடு
சீரான இடைவெளியில்
விழும் மழைத்துளிகள்
தேடித் தேடி கலக்கிறது
விருப்பத்துடன்...

