என் பார்வையில் கற்றது தமிழ் ஆனந்தி

இன்று நடந்தவை யாவும் உனக்கு கடிதத்தில் எழுத வேண்டுமென என மாலை முதல் மனதிலே அனல் ஒன்று ஒளிர்ந்துகொண்டிருந்தது.

படுக்கையினை விட்டு எழுந்திருக்க தாமதம் ஆனதால், இன்றும் நான் சவரம் செய்துகொள்ளவில்லை. முள் எனும் உவமையை மறந்து, புதர் நோக்கி சென்று கொண்டிருக்கின்றன முகத்தில் உரோமங்கள். கண்ணாடி சாளரத்தில் விழுந்த எனது படிமம், இது உண்மையில் நான் தானா எனும் அய்யத்தை மனதில் விதைத்துச் சென்றது. மஞ்சள் ஊறி மங்கிப்போன கண்ணாடியின் தேகங்கள் அந்த அய்யத்தை மேலும் வலுப்பெறச் செய்தன. நேற்றிரவு பெய்த மழையின் மிச்சமாய், சாளரத்தின் வெளிப்புறம் ஒட்டியிருந்த மழைத்துளிகள் ஏனோ, உந்தன் கன்னத்து பருக்களை நெஞ்சில் நிறுத்திச் சென்றன.

சுவற்றில் கிறுக்கிய உந்தன் பெயர் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து கொண்டிருக்கின்றது. மீண்டும் இன்று நான் வேலைக்குச் செல்வதால் எனக்கு வாழ்த்துக்கள் சொல்லின தன்னிலை மறந்த அந்த சொற்கள். அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணி.

காலையில் தலைமை ஆசிரியர் தந்த பதினொன்றாம் வகுப்பு வருகை பதிவேட்டினை உடனே பிரித்து பார்த்தேன். முதல் மாணவியின் பெயர் ஆனந்தி. மனதினுள் ஏதோ இனம் புரியா ஆனந்தம். உந்தன் பெயர் இனி தினமும் எந்தன் வகுப்பறையில் ஒலிக்கப்போவதை நினைக்கையில் நெஞ்சில் ஓர் பேருவகை பிறந்தது.

வகுப்பறையில் வருகை பதிவேடு செய்கையில், ஆனந்தியை ஆசிரியர் என்பதையும் மறந்து ஒருமுறை பார்த்தேன். உந்தன் சாயல் இவளிடம் கொஞ்சமும் இல்லை. இதை நீ படிக்கையில் "நிஜமாத்தான் சொல்றியா" என்று வியக்கக்கூடும் என்பதை நினைக்கையில் நான் இப்பொழுதே வெறும் கால் சட்டையுடன் ஆம் என உன் முன்னே தலையசைக்கும் சிறுவனாய் மாறிப்போய் நிற்கின்றேன்.

மத்தியான வெயிலில் தலை மேலே பறந்து போன கானக பறவை, என்னையும் உடன் சேர்ந்து பறந்திட அழைத்தது. உன்னிடம் கூட்டிச் செல்வதாக உறுதிமொழியும் தந்தது. புன்னகையை பரிசாக தந்து வழியனுப்பி வைத்தேன்.

மலையில் துவங்கும் நதிகள், நிலமெங்கும் சுற்றித் திரிவது போல, விழிக்கையில் என்னுள் தோன்றும் உந்தன் நினைவுகள் விழி மூடிடும் வரை என்னுள்ளே வலம் வருகின்றன. உன் நினைவுகளை சுமந்து நகரும் சிறு சதை பெட்டியாக நான் நடை பயிலுகின்றேன். நெடுந்தூர பயணங்களில் தோள் சாய்ந்து உறங்கிடும் வாலைகுமரியாக நீ என்னுள்ளே துயில்கிறாய்.

கடிதத்தை மடித்து கரங்களில் மறைத்தபடி, அஞ்சல் பெட்டியை நோக்கி நடக்கலானேன். நடு இரவு கடந்து தெருவின் கடையில் இருக்கும் அஞ்சல் பெட்டியின் முன் நின்றுகொண்டிருக்கிறேன். எத்தனையோ உணர்வுகளை சுமந்து சென்ற இந்த அஞ்சல் பெட்டி, இன்று காலத்தின் வேகத்தில் சற்றே தோற்றுப்போய் நிற்கின்றது. அஞ்சல் பெட்டிகள் இரவில் பறக்கும் பறவைகள். உணர்வுகள் தாங்கி நிற்கும் கடிதங்கள் யாவையும் இரவோடு இரவாக மறு இடம் பெயர்த்துவிட்டு, மீண்டும் தெருவின் மூலையில் எதுவும் நடவாதது போல அமர்ந்திருக்கின்றன.

கையில் இருந்த கடிதத்தை மீண்டும் ஒருமுறை படித்து பார்த்தேன். பெறுநர் பகுதியில் என் பார்வை நிலைகுத்தி நின்றது. ஆனந்தி - உனது பெயரை தவிர்த்து நான் எதையுமே எழுதிடவில்லை. நீ இப்பொழுது எங்கு இருக்கிறாய் என்பது எனக்கு தெரியாது. உனது ஊர், விலாசம் எதுவுமே தெரியாது. எழுதப்படும் கடிதங்கள் அனைத்திற்கும் முகவரி வேண்டுமா என்ன?

எனது உடலின் அங்கமாகவே மாறிவிட்ட, தோல் பையின் சுருக்கினைத் தளர்த்தேன். நான் உன் வீடு வந்த அந்த நாள், உனக்கு தெரியாமல் என் பையினுள் கொட்டி வைத்த உன் முகப்பூச்சுகளின் வாசம், பையைத் திறந்ததும் என் நாசி துவாரங்களை துளைத்துச் சென்றது. கையில் இருந்த கடிதத்தை உள்ளே மறைத்தேன். இதன் முன் எழுதிய கடிதங்களுடன், புது கடிதமும் போய் சேர்ந்தது. இக்கடிதத்திற்கு புது நண்பர்கள் கிடைக்கைக்கூடும். எழுதிய கடிதங்கள் யாவும் அனுப்பப்பட வேண்டிய கட்டாயம் ஏதும் இங்கு இல்லையே!!!

எழுதியவர் : (26-Feb-18, 8:20 am)
பார்வை : 146

மேலே