அணிகலன்கள் ❄
நடனக் காரிகையே நடையழகும் உடையழகும் கண்டு என் ஐம்புலப் படை அழுகும் உடனேஆராதிக்க★
அரங்கேற்றத்தின் அலங்காரத்தில்
அணிகலன்கள் தனியாக அழகின் அணி வகுக்கிறது★ஆயினும் அவைகளுக்குள் ஏதோ கலக்கம் எனக்கு தோன்றுகிறது★
சலங்கைகள் குலுங்கி ஜதி சொல்லி
என் நெஞ்சில் தடதடக்க அவற்றின் ஒலி சிரிப்பா, அழுகையா?
உன் கழல் தீண்டிய ஸ்பரிசத்தால் சிரிக்கிறதா?கழட்டி விடுவாய் சிறிது நேரத்தில் என்று அழுகிறதா?
நெத்திச்சுட்டி ஆடும் அழகு கொத்தித் தின்றதென் கண்களை,ஆயினும்
உன் நெற்றி வழியும் நீர் நெத்திச்சுட்டி
அழுத கண்ணீரா?ஆனந்தக் கண்ணீரா?
இடை ஒட்டி உறவாடிய ஒட்டியாணம்
சோகமாய் எட்டி எட்டி பார்க்கிறது,
இவைகள் கைவளையையும்
காதணியையும் பொறாமையாய் பார்க்கிறது
ஏனெனில், நம் அரங்கேற்றத்தை
நாளும் அவை உன்னுடல் ஒட்டியிருந்து நோக்கும், ஆனால்,
கால்சலங்கை, நெத்திச்சுட்டி, ஒட்டியாணம் உன் அடுத்த நடன அரங்கேற்றத்தில் அல்லவா உனை அணைக்கும்,
அழகே,உயர் திணையாம் என்னையும் உயிர் வதைத்தாய்,
அஃறிணை யாம் அணிகலனையும்
துயர் படுத்தினாய் உன் அழகால்🌷