இளமைக் காலங்கள்
இளமைக் காலம்..
உயர்நிலைப் பள்ளிப்பருவம்...
சாக்லேட்டுக்கள் இல்லாமலேயே
இனிப்பை உணர்ந்த பருவம்...
மனதில் பட்டாம்பூச்சிகள்
பறக்க ஆரம்பித்தது
அப்போதுதான்...
கண்கள்...
காட்சிகளை மட்டுமல்ல
கண்களையும் கண்ட
கனாக் காலம்...
தனது பார்வையில் ஊர்மட்டும்
தெரிந்த பருவம் மாறி
ஊரின் பார்வையில்
தான் தெரிவதையும்
உணர்ந்தது இப்பருவத்தில்தான்...
வாழ்வின் வருங்காலப்
பொழுதுகளை வசந்தங்களாக்க
தனிநபர் தீர்மானம்
போடப்பட்டது இப்பருவத்தில்தான்..
கனவுகளில்கூட கனவுகள்
வந்து போனது கவிதைகளாய்..
பாடங்களோடு வர்ணப்
படங்களையும் கவனித்த காலம்...
வாழ்வின் பயணத்தில்
இந்தப் பகுதி மட்டும்
இன்னும் பசுமை மாறாமல்
எல்லாப் பகுதிகளுக்கும்
வசந்தக் காற்றை
வாரி வழங்குகிறது...
உந்துசக்தி இங்கிருந்துதான்
இப்போதும் கிடைக்கிறது...
எண்ணங்களை
கட்டிப்போட்டிருக்க முடியாது...
நினைவுகளுக்கு
சிறைதான் ஏது...
பெற்றோரின் அரவணைப்பில்
அடிமைத்தனமோ.. அது
பேரின்பமன்றோ...
கனவுகளுக்கு
கடிவாளங்கள் உண்டோ...
கற்பனைச் சிறகுகள்
பறந்திட ஆகாயம் போதாது...
கூண்டிலடைத்தாலும்
குயில்கள் கொண்டாடப்படும்...
மயில்கள் ஆடாதிருக்கும்போதும்
மிக அழகுதான்...
அது ஒரு வர்ணமயமான
வானவில் பருவம்...
மறைந்து போனாலும்
மறந்து போகாது...
மொத்தத்தில் வாழ்வின்
அர்த்தம் செறிந்த
அடர்த்தியான பொழுதுகள்
கொண்ட அழகிய
பொற்காலம் அது...
பூக்கள் பூப்பது
பூந்தோட்டங்களில் மட்டுமல்ல..
இதய நந்தவனங்களில்
இனிய தருணங்களிலும்தான்...
😀👍🤷🏾♂🙋🏻♂