ரோஜா

அழகான ஊரின் ஒதுக்குப்புறத்தில் சர்ச்சைகள் நிறைந்த ஒரு வீடு , அந்த வீட்டின் பின்வழி ஜன்னல் வழியே 6 கண்கள் யாரையோ தேடிக்கொண்டிருந்தன . . .

''நம்ம குரு இப்படி எல்லாம் பண்ற ஆள் இல்லடா , கண்டிப்பா அவரா இருக்காது '' 3 பேரில் ஒருவன் முணுமுணுத்தான்.

''டேய்... உனக்கு இன்னும் வெவரம் பத்தல , இந்த காலத்துல போய் யாராவது சந்நியாசியா இருப்பாங்களா???''

''அதான... நம்மள கூடத்தான் சந்நியாசினு சொல்ராங்க எல்லாரும் அதுக்காக நாம இந்த வீட்டுபக்கம் ஒதுங்கலயா என்ன ???? " மூன்றாம் குரல் மட்டும் கொஞ்சம் சத்தமாக ஒலித்தது.

''அதெல்லாம் சரிதான் ..ஆனா குரு ரொம்ப மரியாதையான ஆளு அவர் இப்படி எல்லாம்
பண்ண மாட்டாரு "

'' மரியாதையான ஆளுதான் ஆனாலும் ஆம்பளதான , ரோஜாவோட அழகுக்கு முன்னால இந்த மரியாதையெல்லாம் சும்மா, நாம கீர்த்தனைல படிச்ச தேவதையோட அழகு கூட ரோஜாவ பாத்தா பொறாமைப்படும் "

''அதுவும் இல்லாம அவருக்கென்ன குடும்பம் , சொந்தம்னு ஏதாவது இருக்கா ??? அவரு பயப்பட வேண்டியது இந்த ஊருக்குத்தான் , ஆனா இந்த ஊர்ல இருக்க பெரிய மனுஷன் எல்லாருமே நம்ம ரோஜாவோட கிராக்கி தான??

குருவுக்கு எதிரான வாக்குவங்கி பலமாகிக்கொண்டேயிருந்தது .

'' கண்ணால் பார்ப்பதும் பொய் , காதால் கேட்பதும் பொய்னு குருவே சொல்லியிருக்காரு , விசாரிச்சு பாப்போம் அதான் நல்லது ''

'' அவர் அப்படி சொன்னதே இப்படி நம்ம கிட்ட எப்பயாவது மாட்டிக்கிட்டா தப்பிக்கத்தாண்டா மடையா "

" அப்படி சொல்லு , இவன் இன்னும் புராண காலத்துலயே இருக்கான்"

வீட்டின் கதைவை யாரோ தட்டும் சத்தம் , இவர்கள் இவ்வளவு நேரம் வர்ணித்த அந்த உருவம் கதவை திறந்தது.

குருவுக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருந்த சீடனால் அவனது கண்ணையே நம்ப முடியவில்லை , அது சாச்சாத் குருவேதான்!

ஒரு சிறிய புன்னகை உதிர்த்துவிட்டு உள்ளே நுழைந்தார் , ரோஜா அக்கம் பக்கம் பார்த்துவிட்டு கதவை தாளிட்டாள்.

"ஆரம்பிக்கலாமா" தன் காந்தர்வ குரலால் குரு ரோஜாவை பார்த்து கேட்டார்.

ரோஜாவும் சரி என்பதை போல தலையை ஆட்டிவிட்டு பாயை விரித்து அதன் மேல் கம்பளம் போர்த்தினாள்.

நடப்பது கனவா நிஜமா என்றே நம்ப முடியாத நிலையில் இருந்தனர் சீடர் மூவரும் , அதிலும் குருவை தன் வாழ்க்கையின் முன்மாதிரியாக பார்த்த சீடனின் கண்ணுக்கு குரு
மிகவும் கீழ்த்தரமானவராக தெரிந்தார்.

கம்பளத்தில் அமர்ந்த குரு ரோஜாவுக்கு சங்கீதம் சொல்லிகொடுக்க ஆரம்பித்தார்
"ச ரி க ம ப " . . .

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (5-Mar-18, 11:19 pm)
Tanglish : roja
பார்வை : 321

மேலே