umbrella அம்பிரெல்லா முறுக்கு

என் வாழ்க்கையில் சிறு வயதில் நடந்த நகைச்சுவை சம்பவம் தான் இது ....

என் அம்மா மிகவும் கண்டிப்பானவர். கேட்டதும் உடனே ஏதும் வாங்கி தரமாட்டார். ரோட்டில் விற்கும் தின்பண்டங்கள் கண்டிப்பாக வாங்கி தரவே மாட்டார். நானும் என் அண்ணனும் விளையாடி கொண்டிருந்த பொழுது ஒரு சப்தம் எங்களை விளையாட்டிலிருந்து திருப்பியது. அது தான் umbrella முறுக்கு. சிறுவர்கள் எல்லாரும் விற்பவர் பின்னே சென்றனர். நிறைய சிறுவர்கள் வாங்கியும் சென்றனர். நாங்கள் உடனே எங்கள் அம்மாவிடம் சென்று 'umbrella ' முறுக்கு வேண்டும் என்று நச்சரிக்க ஆரம்பித்தோம். அம்மா முடியாது என்று கூறி விட்டார். தினமும் முறுக்கு விற்பவர் வருவதும் நாங்கள் எங்கள் அம்மாவை நச்சரிப்பதும் வழக்கமாயிற்று. ஒரு வழியாக ஒரு மாதம் கழித்து முறுக்கு வாங்க அம்மா சம்மதித்தார் அதுவும் நான் வகுப்பில் முதல் மாணவியாக வந்ததற்கு பரிசாக . இது தான் கடைசி இனிமேல் கேக்க கூடாது என்ற நிபந்தனையுடன் . ஆளுக்கு ஒரு ரூபாய் குடுத்து அனுப்பி விட்டார் . எனக்கும் என் அண்ணனுக்கும் அப்படி ஒரு சந்தோஷம் ரூபாயை எடுத்து கொண்டு ஓடினோம்.'umbrella ' முறுக்கு எப்படி இருக்கும் ? என்று கற்பனையிலேயே சுவைத்தோம். முறுக்கு வியாபாரிக்காக காத்து கொண்டிருந்தோம்.

முறுக்கு விற்பவர் வந்தார். முதல் ஆளாக ஓடி போய் முறுக்கு வாங்கினோம். எவ்வளவு என்று கேட்டோம். 50 பைசா என்றார் ஒரு ரூபாய் குடுத்து 2 கேட்டோம். ஒரு காகிதத்தில் குடுத்தார் ஆர்வமாக திறந்து பார்த்தால் வழக்கமான 2 சுத்து முறுக்கு தான் இருந்தது. என்னது இது ? 'umbrella ' முறுக்கு எங்கே என்று கேட்டோம் அவரை பார்த்து. 'umbrella ' முறுக்கா? அப்டினா ? என்று கேட்டார். நீங்க அப்டிதான வித்திங்க என்று கேட்டோம். நான் வித்தது 50 காசு முறுக்கு மா என்றார். அவர் ஒரு தினுசாக வித்திருக்கிறார். அம்பது காசு முறுக்கு என்று அவர் கூவியது எங்கள் காதுக்கு 'umbrella ' முறுக்கு என்று கேட்டிருக்கிறது . ஐயோ என்று தலையில் கை வைத்தபடி வீட்டிற்கு வந்தோம். அம்மாவிடம் அடிதான் கிடைக்க போகிறது என்று பயந்து கொண்டு உள்ள நுழைந்தோம் .

நுழைந்ததும் எங்க காட்டுங்க 'umbrella ' முறுக்கு எப்படி இருக்குனு பாப்போம் என்று கேட்டார் . பயந்து கொண்டு காட்டினோம். என்னது இது வெறும் முறுக்கு காட்றிங்க என்றார் அம்மா . நடந்ததை கூறிவிட்டு அடிக்க போகிறார் என்று நினைத்தோம் . அம்மா விழுந்து விழுந்து சிரித்தார்கள் லேசாக எங்களை தட்டி குடுத்து விட்டு நல்ல பிள்ளைங்க என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

எழுதியவர் : ப்ரீத்தி (5-Mar-18, 3:10 pm)
பார்வை : 714

மேலே