ஹைக்கூ உலா நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்

ஹைக்கூ உலா !



நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !



நூல் விமர்சனம் : எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் !



93, வைகை வீதி, சத்யசாய் நகர், மதுரை – 625 003.


வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை-600 017.

தொலைபேசி : 044 24342810, 24310769

விலை : ரூ. 80.


******

நண்பர் இரா. இரவி அவர்களின் ஹைக்கூ உலா நூலினை வாசிக்கும் பேற்றினைப் பெற்றேன். இது ஜப்பான்காரர்களின் தமிழ்வடிவம். ஒரு கிழவியும், கிழவனும் இங்கே (தமிழகம்) ஒரு வரி, இரு வரிக்கும் உலகத்துக்கே சொல்ல வேண்டியதைச் சொல்லி சென்று விட்ட நிலையில், நம்மையே முன்னோடியாகக் கொண்டு ஜப்பானியர்கள் முயன்ற கவிதை வடிவம் திரு. இரவி அவர்களுக்கு நன்கு பிடிபட்டுள்ளது. அதனாலேயை இவருக்கு ஹைக்கூ திலகம் என்கிற பட்டமும் கிடைத்துள்ளதை நான் அறிவேன்.



ரவி முதலில் நிதானமான மனிதர் – அரசுப் பணிபுரியும் போதும் அடக்கி வாசிப்பவர். நகருக்குள் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளுக்கு தன்னை அழைத்துச் செல்பவர்! சுற்றுலாத் துறையில் பணிபுரியும் ரவிக்கு இலக்கிய ருசி இல்லாது போயிருந்தால், பெரும் ஊர்சுற்றியாக இருந்திருப்பார். இவரது இலக்கிய ருசி, கோடை வாசஸ்தலங்களை விட மேடை வாசஸ்தலங்களே மேலானவை என்று கருதச் செய்து இவரை வழிநடத்தி வருவதைக் காண்கிறேன். சிறந்த மேடைப் பேச்சாளராக விளங்கிடும் திரு. இரவியை தமிழ் கூறும் நல்லுலகம் ஹைக்கூ இரவி என்றாலே அறியும் எனுமளவு இந்த கவிதைகளில் தோய்ந்துள்ளார்.



ஹைக்கூ வகை கவிதைகள் மின் மருத்துவம் (Shock Treatment) போன்றவை. “கொஞ்சம் இடி, கொஞ்சம் மின்னல், இணைந்தால் ஹைக்கூ” என்றும் கூறலாம்.



வாசித்தவுடனேயே யோசிக்க வைத்து விடுவது இதன் தன்மை. கூடவே வியப்பு, பிரமிப்பு இவைகளை அள்ளித்தருவதும் இதன் தன்மை. சில நேரங்களில் புத்தஞானம் கூட இதனால் சித்திக்கும். பட்டாணி அளவிலான ஒரு அணுகுண்டு பத்து மைல்கல் சுற்றளவை அதகளப்படுத்தி விடுகிற மாதிரி இந்த சிறிய சைஸ் ஹைக்கூக்கள் நம்மை நொறுக்கிப் போட்டு விடும்.



சிலர் இதை அணுகுண்டு அளவுக்கும், சிலர் இதனை அதற்கடுத்த தளங்களிலும் உருவாக்குகின்றனர். ஆனால் ஒரு கவிதையும் வெடிக்காமல் புஸ்வானமாவதில்லை. திரு. இரவி எல்லா தளங்களிலும் கவிதைகளை அளித்திருக்கிறார்.



குறிப்பாக,

‘சேற்றில் மிதந்தும்
அழுக்காகவில்லை
நிலவு’

எனும் கவிதை முதல்

‘பரவ விடாதீர்
தொற்று நோய்
தமிங்கிலம்’

போன்ற கவிதைகளைக் கூறலாம்.

‘ஒரு வரியில் ஒப்பற்ற அறம், ஆத்திச்சூடி’ எனும் கவிதைக் அவ்வைக் கிழவிக்கு பெருமை சேர்க்கிறது.

நூல் முழுக்க இது போல் ஏராளமான வெடிகள்!

கவிஞர் இரவி ஓடிக்கொண்டேயிருக்கும் நதியைப் போன்றவர். அவர் ஓடியபடியே இருக்க என் நல்வாழ்த்து

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (7-Mar-18, 6:43 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 107

சிறந்த கட்டுரைகள்

மேலே