மகளிருக்கு வாழ்த்துக்கள் -கங்கைமணி
பெரும் பேறு பெற்றதனால்
பெண்ணாக பிறந்தீரே !
கற்காலம் முதற் தோன்றி
கலிகாலம் கண்டீரே !.
உடன்கட்டை காலத்தில்
உடல்கருகி துடித்தீரே !
சதைப்பிண்டம் போல்வாழ்ந்து
சிதையுற்று செத்தீரே !
முலைக்கச்சை சட்டத்தில்
மானத்தை இழந்தீரே!
காமத்தின் சாபத்தில்
கலங்கித்தான் வாழ்ந்தீரே !.
படிப்பறிவை தடுத்ததனால்
பகுத்தறிவை தொலைத்தீரே !
அடுப்படியில் அன்றாடம்
அனல்சுட்டு வெந்தீரே !
பெண்ணடிமை காலத்தில்
பிழையாக கிடந்தீரே !
ஆண்டவனே ! ஆணென்று
அடங்கித்தான் போனீரே !.
பின்னாளில்.....
பொங்கித்தான் எழுந்தீரே
போர்களமும் புகுந்தீரே.
பேராற்றல்போல் பெண்டிர்
யுக யுகமாய் வளர்ந்தீரே!.
கலையாவும் கற்றீரே
கவிகூட புனைந்தீரே !,
பெரியாரை படித்தீரே.
பெண்ணியத்தை கற்றீரே!.
சிறைவிட்ட பறவைகளாய் ,
சிறகசைத்து பறந்தீரே.
விஞ்ஞான அறிவென்ன...,
வீராங்கனை ஆவதென்ன.
எல்லாமே அறிந்தீரே
ஏற்றமுற்று வாழ்ந்தீரே !
அண்டத்தை உருவாக்கி
அர்ப்பணித்த பெண்மைக்குள் ,
ஆண்மையும் அடக்கமென்று
அறியத்தான் செய்தீரே !.
வாழ்த்துக்கள் !...வாழ்த்துக்கள் !
வானுயர வாழ்த்துக்கள் !
பெண்மையெனும் பொக்கிஷத்தை
புதைக்காமல் வாழுங்கள்!.
போதையதன் பாதைக்குள்
புகுந்திடாமல் வாழுங்கள் !.
ஆண்மனதை அழகாக்கி
அகம் பூட்டிக்கொள்ளுங்கள்
ஆடைகளை குறைக்காமல்
அழகள்ளி வாருங்கள் !.
நிம்மதியாய்..நீர் வாழ
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !.
-கங்கைமணி