மங்கையர் தினம்

அகிலமே இன்று பூணுகிறது விழாக்கோலம்
அதிகாலை முதல் அன்பு அழைப்புகள் அதிகம்
வாழ்த்துக்களும் குவிகிறது வாட்ஸாப்களும் நிறைகிறது
பேஸ்புக்கையும் மக்கள் விட்டுவிடவில்லை
அகில உலக மங்கையர் தினமாம்!

ஏனோ என்மனம் ஹாசினிகளையும்
நிர்பயாக்களையும் மீண்டும் மீண்டும் நினைக்கிறது
ஸ்வாதியின் மரணம் ஏன் என கேட்கிறது
அமிலத்தில் கருகிய அழகிய மலர்களின் ஓலம்
நெஞ்சை கிழித்து உதிரம் சிந்த செய்கிறது!

இங்கு பெண்ணியம் பாடும் பாவலர் உண்டு
பெண் உரிமை பேசும் பேருரைகள் உண்டு
மங்கையர் விடுதலை மாய்ந்து மாய்ந்து
பேசிடினும், ஆண் பெண் சமத்துவம் என
சொல்லின் ஆணவமென அலட்சியமும் உண்டு

பரந்த உலகே, பாவையர் எமக்கு
பூக்களும் வேண்டாம் புகழாரமும் வேண்டாம்
வாழ்த்தும் வேண்டாம் வானுற பெயரும் வேண்டாம்
பட்டும் வேண்டாம் படாடோபமும் வேண்டாம்
பொன்னும் வேண்டாம் பொருளும் வேண்டாம்

பெண்மை போற்றும் சமூகம் வேண்டும்
மங்கையை மதிக்கும் மாண்பு வேண்டும்
பெண்மையின் கண்ணியம் மதித்திட வேண்டும்
பெண்ணிற்கு ஏற்ற பெருமை வேண்டும்
ஆண் பெண் பேதம் அறவே ஒழிய வேண்டும்

பெண் சிசுக் கொலையை போக்கிட வேண்டும்
வரதட்சினை கொலையை தடுத்திட வேண்டும்
பெண் குழந்தை பாதுகாப்பு பெரிதாய் வேண்டும்
பெண்டிர் வீதியில் பயமின்றி நடந்திட வேண்டும்
உழைக்கும் பெண்ணின் இடர் களைந்திட வேண்டும்

இவையாவும் கிடைத்திடும் நாளே மங்கையர்க்கு
நன்னாள் ஆகும் போற்றி மகிழும் பொன்னாளாகும்
தாயாய், தாரமாய், தமக்கையாய் மிளிர்பவள் பெண்ணே
நிலவாய், மலராய் , விண்மீனாய் ஒளிர்வாள் அவளே
வாழிய பெண்கள் வாழிய வையகம்!

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (9-Mar-18, 11:09 am)
Tanglish : mangaiyar thinam
பார்வை : 781

மேலே