என்னுள் உறைந்த உயிரே
என் பாலை நிலத் தேடலின்
முதல் பனித்துளியே.
காய்ந்த மலா்த்தோட்டத்தினூடே
தப்பி பிழைத்து மலர்ந்த உயிா் மலரே
உன் கண்ணில் தெறிக்கும் சிரிப்பினால்
போகன் வில்லாவிற்குள்ளும்
வாசனை கர்ப்பந்தரிக்கும்.
இடி வள்ளல் இரக்கத்தோடு
பரிசளித்த ஊற்றே
யுகப் பூக்களின் துணை கொண்டு
இடையராது செய்த தவத்தினால்
சிப்பிக்குள் உரு கொண்ட
அரிய முத்தே
நெப்பந்தசிற்கு உயிர் தரும்
நைட்ரசனே.
நீ கோபம் கொள்ளும் வேளையில்
தவிர்க்க இயலா சந்தேகம்
பூக்களுக்குள்ளும் எரிமலையா?
உடைந்து உதிரும் உன் பாதி
பால்பற்கள்
அண்டாா்டிகாவின் உடைந்த பனிப்பாறைகளோ!
சிலுவைக்குள் முளைத்த
சின்னஞ்சிறு சிறகே.
மூங்கில்காட்டிற்குள்
முரட்டுத்தனமாய் உள் நுழைந்து
நுரையீரல் பூக்களை
முத்தமிட்டு செல்லும் ஒட்சிசனே
பீரங்கியிலிருந்து சீறிப்பாய்ந்து.
வெளிப்பட்ட பூங்கொத்தே
வெற்றிடத்தை நிரப்பவந்த
ஆழ் கடலே.
காதலோடு பூமி மேல்
முட்டி முளைத்த
சின்னஞ்சிறு குருத்தே
அத்துமீறும் அடக்குமுறைக்குள்
சில்லென்று வீசும்
சுதந்திர காற்றே
தமக்கையின் மகளென்றாலும்
உன்னால் இந்த சித்திக்குள்ளும்
தாய்மை சுரக்குதடி
என் கண்ணம்மா!